

சில வருடங்களுக்கு முன் ஒரு செய்தி வெளியானது. ‘வங்கி ஒன்றில் வீட்டுக் கடனுக்காக விண்ணப்பித்திருந்தேன். விற்பனைப் பத்திரத்தை லாமினேட் செய்து கொடுத்தபோது அவர்கள் அதை ஏற்கவில்லை. லாமினேஷனை நீக்கிவிட்டுக் கொடுக்குமாறு கூறினார்கள்.
இதற்கான ஒரு நிறுவனத்தை அணுகியபோது ஒரு தாளுக்கான லாமினேஷனை நீக்க ரூபாய் 1000 ஆகும் என்றார்கள். நான் சுமார் இருபது பக்கங்களை லாமினேஷன் செய்து வைத்திருந்தேன். அப்புறம் மைசூரில் ஒரு தாளுக்கு சுமார் 200 ரூபாய் வாங்குவதாகக் கேள்விப்பட்டு அங்கு சென்று லாமினேஷனை நீக்கிவிட்டு வந்தேன்’ என்பதுபோல் அந்தச் செய்தி இருந்தது.
சமீபத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு இதேபோன்ற கசப்பான அனுபவம் ஏற்பட்டது. வங்கியில் ஆவணங்களின் லாமினேஷனை நீக்கிவிட்டு வரச் சொல்லியிருக்கிறார்கள். சென்னையில் இதற்காக உள்ள ஒரு நிறுவனத்தை அந்த வாடிக்கையாளர் அணுகியுள்ளார்.
“நீக்கித் தருகிறோம், நீக்கும்போது ஆவணத்துக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல” என அந்த நிறுவனத்தினர் சொல்லியிருக்கிறார்கள். இதைக்கூறி மீண்டும் வங்கியை அணுகியிருக்கிறார் அவர். அவர்களுக்குள் நிறையப் பேச்சு வார்த்தை நடத்திவிட்டு “நீங்கள் எங்கள் வங்கியின் நீண்ட நாள் வாடிக்கையாளர் என்பதாலும், உங்கள் ‘கிரடிட் ரேடிங்’ சிறப்பாக இருக்கிறது என்பதாலும் இந்த முறை இதை அனுமதிக்கிறோம். ஆனால், வருங்காலத்தில் இதை அனுமதிக்க மாட்டோம்’’ எனச் சொல்லியிருக்கிறார்கள்.
வங்கிகளைப் பொறுத்தவரை மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. பல வங்கிகள் லாமினேஷன் செய்த ஆவணங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
எதனால் இப்படி மறுக்கிறார்கள்?
ஆவணங்களை வண்ண நகல் எடுத்து லாமினேஷன் செய்பவர்கள் இருக்கிறார்கள். லாமினேஷன் செய்யப்பட்ட இதுபோன்ற ஆவணங்களை ஒரிஜினலா வண்ண நகலா என்பதைக் கண்டுபிடிப்பது கஷ்டம். அடமானத்தின்போது ஒரிஜினலாகத்தான் வங்கிகள் கேட்பார்கள். ஒரிஜினலை ஒரு வங்கியிலும் லாமினேஷன் செய்யப்பட்ட வண்ண நகலை (ஒரிஜினல் என்ற போர்வையில்) இன்னொரு வங்கியிலும் கொடுத்து இரண்டு கடன்கள் பெற்றுவிடக் கூடாது இல்லையா?
சில முயற்சிகளை மேற்கொண்டால் தங்களிடம் அளிக்கப்படுவது ஒரிஜினலா, வண்ண நகலா என்பதை வங்கிகளால் கண்டுபிடித்துவிட முடியும்தான். ஆனால், அதிகப்படி சிரமம் எடுத்துக் கொள்ள அவர்கள் தயாரில்லை.
லாமினேஷனை நீக்குவது என்பதும் எளிதல்ல. லாமினேஷன் செய்யப்பயன்படும் தாள்கள் பாலிமர்களால் உருவானவை. அதிக வெப்பத்தில் அவை ஆவணத்தோடு ஒட்டிக் கொள்கின்றன. அந்தத் தாள்களை நீக்குவது கஷ்டம். அதுவும் தரம் குறைந்த பாலிமர் பயன்படுத்தப்படிருந்தால் அதை நீக்கும் செயல் முறையில் ஆவணம் கொஞ்சம் பாதிக்கப்படலாம். இந்த நிலையில் லாமினேஷனைத் தவிர்ப்பதே புத்திசாலித்தனம். ஒரிஜினல் ஆவணங்களை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஈரப்பதம் இல்லாத இடங்களில் வைத்துப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.