பட்டா அவசியமா?

பட்டா அவசியமா?
Updated on
1 min read

ஓர் இடத்தை வாங்கி இருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சிதான் பட்டா. அந்த நிலத்தில் வீடு கட்டுவதற்காக வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தால் அதற்குக் கண்டிப்பாகப் பட்டா கட்டாயம் தேவை.

இந்தப் பட்டா வழங்கும் முறை ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. பட்டா பதிவு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும். இந்தப் பதிவுத் தகவலைச் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து அப்பகுதி தாசில்தாருக்கு அனுப்பிவிடுவார்கள். இதுதான் நடைமுறை.

முன்பு பட்டா அவசியம் அல்ல எனக் கூறப்பட்டுவந்தது. அதாவது இடத்தைப் பத்திரப் பதிவு செய்தாலே போதுமானது எனச் சொல்லப்பட்டது.

பொதுவாகச் சொத்து விற்பனை செய்யும்போது பதிவுத்துறை அலுவலகத்தில் பட்டாவை விற்பவர், வாங்குபவர் பெயரைக் குறிப்பிட்டு கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும்.

பட்டாவின் ஒவ்வொரு உட்பிரிவுக்கும் தனித் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் வருவாய்த் துறைக்கு அனுப்பப்படும். ஆனால் நிலம் வாங்கியவரின் பெயரில் சொத்தைப் பட்டா மாற்றம் முறையாகச் செய்துதருவதில் நீண்ட காலமாகத் தொய்வு இருந்துவந்தது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் சொத்துகளைப் பத்திரப்பதிவு செய்யும் முன் சம்பந்தப்பட்ட சொத்திற்கான முன் ஆவணம், பொது அதிகார ஆவணம், மூலப்பத்திரம், பட்டா, தல வரைபடம் (எப்.எம்.பி.ஸ்கெட்ச்), சிட்டா, அடங்கல், பட்டா ஆகியவற்றைக் கொடுத்தால் தான் பதிவுசெய்யப்படும் எனத் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

இந்தத் தேவையான ஆவணங்களைச் சார்பதிவாளர்கள் வாரம் தோறும் செவ்வாய் அன்று சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டது. இதிலிருந்து பட்டா எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in