Published : 23 Aug 2014 10:00 AM
Last Updated : 23 Aug 2014 10:00 AM

இப்படி முயன்று பார்ப்போமா?

மக்கள் முன்னெப்போதையும் விடச்சுத்தம், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்ற காலம் இது.

கை கழுவ, பல் துலக்க, வாய் கொப்பளிக்க, அலுப்புப் போகக் குளிக்க, அழுக்குப் போகத் துணி துவைக்க என்று விதவிதமான வாசனை திரவங்களையும், வண்ண வண்ணமான குழம்பு(லோஷன்)களையும் வாங்குவதற்கென்று ஒவ்வொரு குடும்பமும் ஆயிரக்கணக்கில் செலவழிப்பதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

சோப்பு, பற்பசை, பினாயில், டெட்டால் இவற்றை மட்டுமே மக்கள் பயன்படுத்திய காலம் போய், நூற்றுக்கணக்கான அழுக்குப் போக்கிகளும், கிருமிநாசினிகளும் நமது கடைத்தெரு அங்காடிகளை ஆக்கிரமித்துப் பிறகு நமது வீடுகளின் எல்லா அறைகளையிலும் குடிபுகுந்துவிடுகின்றன. இவற்றைப் பயன்படுத்தாத அல்லது பயன்படுத்தத் தெரியாத முந்திய தலைமுறையினரை, ‘நாட்டுப்புறம்’ என்று இன்றைய தலைமுறையினர் கேலி செய்வதையும் பார்க்கிறோம்.

ஆனால் வாழ்வின் ஒவ்வொரு துணுக்கையும் சுத்தம் என்ற பூதக் கண்ணாடியையும், சுகாதாரம் என்ற நுண்ணோக்கியையும் வைத்து நோக்குகின்ற இன்றைய தலைமுறையினர், தாங்கள் தத்தமது வீட்டுக்குள்ளேயே இடமளித்துக் காப்பாற்றி வருகின்ற ஒரு சுகாதாரக் குறைப்பாட்டைப் பற்றிக் கொஞ்சமேனும் விழிப்புணர்வு பெற்றுள்ளதாகத் தெரியவில்லை. என்ன அது என்கிறீர்களா?

அதுதான், ‘டாய்லெட்’ எனப்படுகின்ற குளியலறையுடன் கூடிய ‘நவீன’ கழிப்பறை அல்லது கழிப்பறையுடன் கூடிய ‘சுகாதாரமான’ குளியலறை.

அதாவது, வீட்டுக்குள்ளேயே அமைக்கப்படுகின்ற குளியலறையுடன் கூடிய கழிவறை.

தனித்தனி வீடுகளின் அளவு குறையத் தொடங்கியதாலும், அடுக்குமாடி வீடுகள் (ஃபிளாட்டுகள்) பெருகியதாலும், இடவசதி கருதி கழிவறைகளைக் குடியிருப்புக்குள்ளேயே கட்டிக் கொள்வது வழக்கமாகிப் போனது. இப்படி இருந்த போதிலும், நமக்குத் தெரிந்து 1980-களின் தொடக்கம் வரை, வீட்டிற்குள்ளேயேகூட குளியலறையும், கழிவறையும் தனித்தனியாகத்தான் அமைக்கப்பட்டன.

அதன் பின்புதான் குளியலறை கழிவறை இரண்டினையும் இணைத்து, ஒரே அறையாக வடிவமைக்கும் போக்கு மெதுவாக வளரத் தொடங்கியது. தமது கடைசிக் காலத்தில், பிள்ளையின் சொந்த வீட்டில் நகர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு வந்த முந்தைய தலைமுறையைச் சேர்ந்த தாய் தந்தையர்கள் பலர், இந்த அதிசய ‘டாய்லெட்டு’களைக் கண்டு அதிர்ந்து, தங்களது பழைய வீடுகளுக்கே சென்றுவிட்டதும் நடந்தது. ஆதரிக்க வேறு யாரும் இல்லாத பெரியவர்கள் சிலர் இந்தப் புதிய அலர்ஜி கலாசாரத்தைச் சகித்துக்கொள்ளப் பழகிக்கொண்டதும் நடந்தது.

‘மனிதன், பழக்கத்தின் அடிமை’ என்பதை நிரூபிப்பது போன்று, இப்போது ஜீவித்திருக்கும் பழைய தலைமுறையினரும் இதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை.

என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் வீட்டில், இத்தகைய நவீன ‘டாய்லெட்டில்’ அமைந்துள்ள ‘மேற்கத்திய கழிவறைப் பீங்கானை’ மூடிவிட்டுக் குளிக்கின்ற வழக்கமிருக்கிறது. ஆனாலும், அந்த மூடி மேலேயே குளியல் சோப்பு, ஷாம்பு போன்றவற்றை வைத்து, அவற்றைப் பயன்படுத்திக் குளிக்கின்றனர்.

கேட்டால் இட வசதிக் குறைவு என்று பதில் வந்தது. நண்பர் ஒருவர் வீட்டில் டிபன் சாப்பிட்டுவிட்டு, அவர்கள் வீட்டின் ‘டாய்லெட்டில்’ உள்ள வாஷ் பேஸினில் கைகழுவச் சென்றபோது நான் கண்டது இதைவிடக் கொடுமை. கழுவுவதற்கான சமையல் பாத்திரங்கள், அங்குள்ள ‘மேற்கத்திய பாணிக் கழிவறைப் பீங்கானின்’ பக்கத்தில் குவிக்கப் பட்டிருந்தன.

விசாரித்ததில், அவர்கள் வீட்டின் சிறிய சமையலறையில் பாத்திரங்களைக் கழுவப் போதிய இடமில்லை என்று பதில் வந்தது.

புனிதம், சுகாதாரம் என்ற புளித்துப் போன வாதங்களைக்கூட விட்டுத் தள்ளுங்கள். இது அவசர யுகம். அதுவும் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலகம், கோயில் அல்லது கடைத்தெரு என்று செல்வதற்கு ஒரு வீட்டில் உள்ள எல்லோருமே பரபரக்கின்ற காலை நேரத்தில், இப்படிக் குளியல் அறையும், கழிவறையும் ஒரே கதவுக்குப் பின் இல்லாமல், தனித்தனி அறைகளாக இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்?

புதிதாகக் கட்டப்படும் ஃபிளாட்டுகள் மற்றும் தனி வீடுகளில், அனேகமாக இருபத்தைந்து அல்லது முப்பது சதுர அடிகளை இத்தகைய ‘டாய்லெட்டு’களுக்கு ஒதுக்குவார்கள். அதையே கொஞ்சம் பெரிய மனசு பண்ணி, இருபது-இருபது சதுர அடிகளில் தனித்தனியாகக் குளியலறை மற்றும் கழிவறையைக் கட்டித்தான் பார்ப்போமே! அவசரத்திற்குக் கைகொடுக்கும்; டென்ஷனையும் குறைக்கும்; சுத்தத்துக்குச் சுத்தம்; பெரிசுகளுக்கும் மனத்திருப்தி.

யோசித்துப் பார்த்தால் இளைய தலைமுறைக்கும்கூட இந்த ஏற்பாட்டில் முழுத் திருப்தி கிடைக்கும். என்ன, கட்டிட வரைபடம் தயாரிப்பவருக்குத்தான் கொஞ்சம் வேலை அதிகம். அதனாலென்ன முயன்றுதான் பார்ப்போமே!

- எஸ். ஸ்ரீதுரை, வேலூர்.

தொடர்புக்கு: sriduraiwriter@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x