வீடு வாங்கும் இளைஞர்கள் கவனிக்க வேண்டியவை

வீடு வாங்கும் இளைஞர்கள் கவனிக்க வேண்டியவை

Published on

இந்தியாவில் வீடு வாங்குபவர்களின் வயது வரம்பு 30-35 ஆகக் கடந்த சில ஆண்டுகளில் குறைந்திருக்கிறது. இந்தியாவின் இளைஞர்கள் சொந்தமாக வீடு வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். ஆனால், வீடும் வாங்கும் முறை என்பது இன்னும் எளிமையானதாக மாறவில்லை.

பட்ஜெட்டைப் பின்பற்றுங்கள்

வீடு வாங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குமுன் உங்கள் பட்ஜெட்டைத் தீர்மானித்துக்கொள்வது சிறந்ததது. உங்களது வீட்டுக் கடன் வசதி வாய்ப்புகளைத் தெரிந்துகொண்டு பட்ஜெட்டை முடிவுசெய்தால் பலவிதமான நிதிநெருக்கடிகளைத் தவிர்க்கலாம். எத்தனை ஆண்டுகள் மாதாந்திர சுலபத் தவணைத் திட்டத்தில் வீட்டுக்கடனைத் திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும் என்பது போன்ற விஷயங்களைக் கருத்தில்கொண்டு உங்கள் பட்ஜெட்டைத் தீர்மானிப்பது முக்கியம்.

அத்துடன், வீடு வாங்குவதற்குத் தேவையான முன்பணத்தை ஏற்பாடு செய்வது, வீட்டுக் கடன் பெறுவதற்கான ஆவணங்களைத் தயார்செய்தல் போன்றவை வீடு வாங்கும் முறையில் முதலில் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டிய அம்சங்கள்.

தவிர்க்க முடியாதவை

எந்த இடத்தில் எந்த மாதிரி இட வசதிகளுடன் வீட்டை வாங்கப் போகிறீர்கள் என்பதைச் சரியாகத் திட்டமிட வேண்டும். வீடு வாங்குவதில் முக்கியமான அம்சமாக இடத் தேர்வு இருக்கிறது. பொதுவாக, இளைஞர்கள் தங்கள் அலுவலகத்துக்கு அருகில் இடத்தில் வீடு வாங்குவதை விரும்புகிறார்கள். அப்படி முதலீடுசெய்யும்போது பொதுப் போக்குவரத்து, சமூக உள்கட்டமைப்பு வசதிகளான விற்பனை வளாகங்கள், உணவகங்கள், பொழுதுபோக்கு வளாகங்கள் போன்ற அம்சங்கள் இருப்பதை உறுதிசெய்துகொண்டு முதலீடுசெய்வது நல்லது.

சரியான முகவர் தேர்வு

நீங்கள் தேர்ந்தெடுக்கும் ரியல் எஸ்டேட் முகவரால் உங்கள் வீடு வாங்கும் அனுபவத்தை சிறப்பானதாகவோ, மோசமானதாகவோ மாற்றமுடியும். அதனால், வீடு வாங்குவதில் சரியான ரியல் எஸ்டேட் முகவரைத் தேர்வுசெய்வது முக்கிய அம்சம். நீங்கள் தேர்வுசெய்திருக்கும் இடத்தையும் சந்தையையும்  நன்கு தெரிந்துவைத்திருப்பவராக உங்கள் முகவர் இருக்க வேண்டும்.

கட்டுநரின் நம்பகத்தன்மை

தற்போது பெரும்பாலான கட்டுநர்களின் கட்டுமான,  நிதித் திட்டங்களையும் உங்களால் இணையதளங்களின் வழியாகவே தெரிந்துகொள்ள முடியும். அதனால், நீங்கள்  வீடு வாங்கத் தீர்மானித்திருக்கும் கட்டுநரின் சந்தை மதிப்பு, நம்பகத்தன்மை போன்ற பின்னணித் தகவல்களைத் தெரிந்துகொள்வது நல்லது. உங்கள் முகவர் பரிந்துரைக்கும் திட்டங்களைக் கணக்கில்எடுத்துகொள்வது நல்லவிஷயம்தான்.

ஆனால், அவரது பரிந்துரைகளை மட்டும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. உங்கள் நட்புவட்டத்தில் கிடைக்கும் வேறு சில சிறந்த பரிந்துரைகளையும் நீங்கள் பரிசீலிக்கலாம். வீட்டின் மதிப்பை அமைந்திருக்கும் இடத்தை வைத்து மற்ற வீட்டு மதிப்புகளுடன் ஒப்பீடுசெய்து வாங்குவது நல்லது. சந்தை மதிப்புடன் உங்கள் வீட்டு மதிப்பு ஒத்துப்போகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள இது உதவும். வீடு வாங்க விரும்பும் இளைஞர்கள் இந்த அம்சங்களைக் கவனத்தில் கொண்டால் கனவு இல்லம் வாங்கும் முறையை எளிமையாக்கலாம். 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in