சினிமா வீடு சொல்லும் சங்கதி

சினிமா வீடு சொல்லும் சங்கதி
Updated on
2 min read

‘டூ லெட்’ (To let) என்ற தமிழ்த் திரைப்படம் இன்னும் தமிழகத்தில் வெளியாகவில்லை. இந்தப் படம் பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளது. கீழ் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த ஒரு குடும்பம் வாடகைக்காக வீடு தேடும் படலத்தை இந்தப் படம் சித்தரிக்கிறது. கீழ் நடுத்தர மக்கள் வாழ்க்கையின் முக்கியமான சொந்த வீடு கனவு நிறைவேற அவர்கள் படும் சிரமங்கள் மேலும் கடுமையானவை.

இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கிய ‘வீடு’ திரைப்படம் கீழ் நடுத்தரக் குடும்பங்கள் சொந்தமாக வீடு கட்டுவதிலுள்ள பிரச்சினைகளைச் சிறப்பாக விவரித்த படம். சுதா, தன் தங்கையுடனும் தாத்தாவுடனும் சென்னையில் ஓர் அடுக்ககத்தில் வசிக்கிறாள். தன் அலுவலகத்தில் பணியாற்றும் கோபியைக் காதலிக்கிறாள். இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் கல்யாணம் செய்துகொள்ளவும் முடிவெடுக்கிறார்கள்.

சுதாவின் வீட்டுச் சொந்தக்காரர் தன் கட்டிடத்தை இடித்துவிட்டுப் பெரிய கட்டிடம் ஒன்றை அந்த இடத்தில் கட்ட நினைக்கிறார். அதனால் அவர்களைக் காலிசெய்யச் சொல்லிவிடுகிறார். வாடகைக்கு வேறு வீடு தேடும் சுதாவுக்குப் பெரும் அதிர்ச்சி. அவர்கள் கேட்கும் வாடகை மிக அதிகமாக இருக்கிறது. சுதாவின் தாத்தாவுக்குப் புறநகரில் இரண்டு மனைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை விற்று மற்றொன்றில் சிறிய வீடு ஒன்றைக் கட்டிக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கிறாள் சுதா.

மேற்படி தேவைப்படும் பணத்துக்கு வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கிறாள். தன் நகைகளை அடகு வைக்கிறாள். வீட்டு வரைவுத் திட்டத்துக்கு அனுமதி பெற அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. வீடு கட்டும்போது நடுவில் மழை பெய்து எதிர்பாராத தாமதம் உண்டாகிறது. வீட்டுக் கட்டுமான ஒப்பந்ததாரர் அந்த வீட்டுக்காக வாங்கிவைத்திருக்கும் கட்டுமானப் பொருள்களைத் திருடுவது தெரியவர அவரை வெளியேற்ற வேண்டிய நிலை உருவாகிறது. வங்கிக் கடன் கிடைப்பது தாமதமாகிறது. நிறுவன முதலாளியிடம் கடன் கேட்க, அவர் பெண் பித்தனாக இருக்கிறார்.

பாதி எழுப்பியுள்ள கட்டிடத்தைப் பார்க்கத் தனியாகச் செல்லும் சுதாவின் தாத்தா திரும்பி வருகையில் இறந்து விடுகிறார். நகரக் குடிநீர் அதிகார அமைப்பு அந்த நிலத்தை எற்கெனவே கையகப்படுத்தி விட்டதாகவும் அதில் யாரும் வீடு கட்டிக்கொள்ள முடியாது என்றும் கூறுகிறது. பஞ்சாயத்து அலுவலகத்தில் ‘நான் நீதிமன்றத்துக்குப் போவேன்’ என்று சுதா கத்துவதுடன் படம் முடிவடைகிறது. இந்தப் படத்தில் சுதாவாக நடித்த அர்ச்சனாவுக்கு அந்த வருடத்தின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

ஒரு நேர்முகத்தில் தன் அம்மாவுக்கு நேர்ந்த அனுபவத்தைதான் ‘வீடு’ திரைப்படமாக உருவாக்கியதாக பாலு மகேந்திரா குறிப்பிட்டார். தனக்கு எட்டு வயதாகும்போது அவர் அம்மா வீடு கட்டத் தொடங்கியதாகவும், அது அவரது மனநலத்தைப் பெரிதும் பாதித்ததாகவும் கூறினார்.

ஏதோ ஒரு திரைப்படக் கதை என நாம் விலகி நின்று பார்க்க முடியாது. வீட்டைக் கட்டும் ஒவ்வொருவரும் அனுபவித்த, அனுபவிக்கும் கதைதான் இது. கட்டிடம் கட்டும்போது சில பிரச்சினைகளைத் தவிர்க்க வேண்டுமென்றால் கீழே உள்ள ஆலோசனைகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்.

உங்கள் ரசனைக்கு ஒத்துப்போகும் கட்டுமானக் கலைஞரை அமர்த்திக் கொள்ளுங்கள். வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு ஈடுபாடு என்றால் அதைத் தெளிவாகக் கட்டிடக் கலைஞரிடம் கூறிவிடுங்கள். உங்கள் விருப்பமான வீட்டு வரைபடத்தை அவரிடம் சிறிதும் குழப்பம் ஏற்படாதவாறு விளக்கி விடுங்கள்.

தரமான ஸ்டீல், தரமான கான்க்ரீட், தரமான தரைக்கற்கள் போன்றவற்றை உறுதிசெய்து கொள்ளுங்கள். எது தரமானது என்பதைப் புரிந்துகொள்வதற்கு அதற்கான வலைத்தளங்களும் அங்குள்ள மக்கள் மதிப்பீடுகளும் உங்களுக்கு உதவும். எதிர்பாராத செலவினங்கள் உண்டாக வாய்ப்பு உண்டு. கட்டுமானப் பொருளின் விலை திடீரென்று ஏறிவிடக் கூடும்.

எதிர்பாராத விதத்தில் நிலத்தில் கரையான்கள் காணப்பட்டு அவற்றை நீக்குவதற்கான சிறப்புச் சிகிச்சை தேவைப்படலாம். நிலத்தின் ஒரு பகுதி மண் தளர்வானதாக இருந்தால் அதை உறுதிபடுத்த சில நடவடிக்கைகள் தேவைப்படலாம். இவற்றிற்கெல்லாம் செலவாகும். எனவே பட்ஜெட் போடும்போது எதிர்பாராத செலவீனங்களுக்காக 10 சதவிதமாவது தொகையை ஒதுக்குங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in