

சொந்த வீடு கட்டுபவர்கள் கட்டும்போது கீழ்தளம், முதல்மாடி என்பதையெல்லாம் நன்கு திட்டமிடுவோம். ஆனால், இந்த இரு தளங்களையும் இணைக்கும் மாடிப் படிகள் அமைப்பது குறித்து நம்மில் பெரும்பாலானவர்கள் பெரிதாகத் திட்டமிடுவது கிடையாது.
ஆனால், மாடிப்படிகளைக் கட்டும்போது பல விஷயங்களில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு படிக்கும் அதன் அடுத்த படிக்கும் இடையே உள்ள உயரம் மிக அதிகமானதாக இருக்கக் கூடாது. முப்பது டிகிரிவரை சாய்வாக இருந்தால் அது பாதங்களுக்கு வசதியாக இருக்கும். அதிபட்சம் 45 டிகிரிவரை இருக்கலாம். அதைவிட அதிகமாக இருந்தால் நிச்சயம் பாதங்களுக்கு அது அவஸ்தைதான். எனவே இந்த ‘மேலேறும் கோணத்தில்’ கவனம் செலுத்துங்கள்.
ஒவ்வொரு படியும் போதிய அகலம் கொண்டதாக இருக்க வேண்டும். ஏறும்போது நம் பாதத்தை அதில் முழுவதுமாக வைக்கும்படி இருக்க வேண்டும்.
அதேபோல ஒரு படிக்கும் அதன் அடுத்த படிக்குமுள்ள உயரம் என்பதும் 190 மில்லி மீட்டரைத் தாண்டக் கூடாது என்கிறார்கள். இதைத் தாண்டினால் வயதானவர்களும், குழந்தைகளும் படிகளில் ஏறச் சிரமப்படுவார்கள். தவிர ஒவ்வொரு படியாக மட்டுமே இதில் ஏற முடியும்.
வழுக்காத தளம் கொண்டதாக மாடிப்படிகள் இருக்க வேண்டும். படிகளில் தரைவிரிப்புக் கம்பளங்களைப் பொருத்தினால் அவை கச்சிதமாகப் பொருந்தியிருக்க வேண்டும். கம்பளத்தின் ஒரு பகுதி நீட்டிக்கொண்டிருந்தால் கால் தடுக்கிக் கீழே விழுந்து விடுவோம்.
சிலர் ஸ்டைலுக்காகக் கைப்பிடி இல்லாமல் மாடிப்படிகளைக் கட்டுகிறார்கள். இது நிச்சயம் பரிந்துரைக்கத்தக்க ஒன்று அல்ல. படிகளில் மெதுவாக ஏறினாலும், வேகமாக ஏறினாலும் கைப்பிடிகளைப் பிடித்தபடி ஏறுவதுதான் நல்லது
மாடிப்படிப் பகுதிகளில் அதிக வெளிச்சம் தரும் விளக்குகளைத்தான் பொருத்த வேண்டும். மங்கலான வெளிச்சம் என்றால் தவறான ஊகத்தில் படிகளில் காலை வைத்து விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு.
மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடிய மற்றொரு விஷயம் மாடிப்படிகளைச் சீரான முறையில் கட்டாதது. அதாவது, ஒரு மாடிப்படியின் உயரம்தான் அடுத்தடுத்த படிகளுக்கும் இருக்க வேண்டும். மாறாக, வெவ்வேறு வகையான உயரங்கள் கொண்டதாக மாடிப்படிகள் அமைந்தால் நடக்கும்போது விழுந்துவிட வாய்ப்பு அதிகம். ஏனென்றால் நாம் வேறெதையோ நினைத்தபடி படி ஏறும்போதோ இறங்கும்போதோ நம் உள்மனது எல்லாப் படிகளும் ஒரே உயரம் கொண்டவையாக இருக்கும் என்ற அனுமானத்தில் இயங்கும். எல்லாப் படிகளையும் சீரான உயரத்தில் கட்டும் கட்டிடக் கலைஞர்கள்கூட இறுதிப் படியை மட்டும் மாறுபட்ட உயரத்தில் கட்டிவிடக் கூடும். எனவே இந்த விஷயத்தில் கவனம் தேவை.
சிறிய குழந்தைகள் உள்ள வீட்டில் மாடிப்படிகளின் நுழைவுப் பகுதியில் ‘கேட்’ பொருத்துவது நல்லது. அப்போதுதான் பிறர் கவனிக்காதபோது அவர்கள் படியில் ஏறிவிட மாட்டார்கள்.
கட்டுமானத்துடன் தொடர்புடைய விஷயம் இல்லை என்றாலும் மாடிப்படிகள் தொடர்பாக நாம் மேற்கொள்ள வேண்டிய வேறொரு முன்னெச்சரிக்கையைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது.
மாடிப்படிகளில் எந்தப் பொருளையும் வைக்காதீர்கள். இந்தச் சிறிய முன்னெச்சரிக்கையை எடுத்துக் கொள்ளாததால் பெரிய விபத்துகளில் சிக்கியவர்கள் உண்டு.