

திராவிட இயக்கத்தின் ஆற்றல் மிக்க தலைவரான மு.கருணாநிதி, 5 முறை தமிழக முதல்வராகப் பொறுப்பு வகித்தவர். அந்தக் கால கட்டங்களில் அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பல முக்கியமான திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தியுள்ளார். அதன் ஒரு அம்சமாக அவர் தனது ஆட்சிக் காலத்தில் பொதுப் பயன்பாட்டுக்காகப் பல முக்கியமான கட்டிடங்களையும் உருவாக்கியுள்ளார்.
தமிழ் மொழியின் சிறப்புக்குரிய பெரும் புலவரான வள்ளுவருக்கு ஒரு கோட்டத்தை உருவாக்கினார். இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் தமிழின் சிறப்பை 133 அடி திருவள்ளுவர் சிலையின் மூலம் நாடறியச் செய்தார். அவரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட முக்கியமான கட்டிடங்கள் குறித்த ஒளிப்படத் தொகுப்பு இது:
அண்ணா நூற்றாண்டு நூலகம்
தமிழகத்தின் அதிநவீன நூலகமான இது மு.கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. 12 லட்சம் புத்தகங்கள் வரை வைத்துக்கொள்ளும் அளவு விரிவுகொண்டது இந்த நூலகம். உலக இணைய நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது இந்த நூலகத்தில் தற்போது 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. பார்வையற்றவர்களுக்காகத் தனிப் பிரிவு இந்த நூலகத்தில் இயங்குகிறது. இந்த நூலகம் நவீனக் கட்டிடக் கலைக்கான சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக இருக்கிறது. இது சென்னைக் கோட்டூர்புரத்திலுள்ளது.
சென்னை மேம்பாலங்கள்
இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய நகரமான சென்னை மற்ற இந்திய நகரங்களுடன் ஒப்பிடும்போது போக்குவரத்து நெருக்கடி குறைவானது. அதற்கு முக்கியமான காரணம் சென்னையின் மேம்பாலங்கள். சென்னையின் முக்கியமான சந்திப்புகளில் கருணாநிதி காலத்தில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன.
செம்மொழிப் பூங்கா
சென்னை நகரத்தின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்தில் சென்னை நகரின் மையத்தில் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் ஒரு தாவரவியல் பூங்கா 2010-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 700 வகையான தாவர்ங்களைக் கொண்டு 8 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. உலகச் செம்மொழிகளுள் ஒன்றான தமிழுக்குச் சிறப்புச் செய்யும் வகையில் இந்தப் பூங்காவுக்கு ‘செம்மொழிப் பூங்கா’ எனப் பெயரிட்டார் கருணாநிதி.
டைடல் பார்க்
சென்னையின் புதிய அடையாளங்களுள் ஒன்றான இந்த மென்பொருள் பூங்கா 2000-ல் கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. உலகின் பெரிய மென்பொருள் சந்தைகளுள் ஒன்றாக சென்னை இருப்பதற்கான தொடக்கமாகவும் இந்தப் பூங்கா இருந்தது. 2010-ல் மீண்டும் அவரது ஆட்சிக் காலத்தில் கோயம்புத்தூரில் டைடல் மென்பொருள் பூங்கா திறக்கப்பட்டது.
நெம்மேலி, மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலைகள்
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சென்னையின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றும் பொருட்டு சென்னையின் கடற்பகுதிகளான மீஞ்சூர், நெம்மேலி ஆகியவற்றில் கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் 2010-ல் தொடங்கப்பட்டவை.