

ஒரு சொத்துக்கு பத்திரம் எவ்வளவு முக்கியமோ, அதே போல் பட்டாவும் மிக முக்கியம். பத்திரம் பதிவுத்துறை ஆவணம், பட்டா வருவாய்த்துறை ஆவணம். ஒரு சொத்து பத்திரப்பதிவு என்பது நிச்சயதார்த்தம் என்றால், பட்டா பெறுவது தான் திருமணம். அந்த அளவுக்கு பட்டா முக்கியம். ஆண்டுக் கணக்கில் விற்றவர்கள் பெயரிலேயே பட்டா இருப்பது என்பது சிக்கலை ஏற்படுத்தும். நில உடமைதாரர்கள் பெயருக்கு பட்டா மாறாமல் இருப்பதும் இன்றளவும் உள்ளது.
இது போன்ற நிகழ்வுகள் தான், முறைகேடான சொத்துப்பதிவுகள் நடைபெற காரணமாகிறது. இந்த சிக்கல்களை போக்கவே ஆன்லைன் பட்டா மாறுதலை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. விற்பவரின் பட்டாவை சரிபார்த்த பின், பத்திரப்பதிவு செய்து, அதன் பின், வாங்கியவர் பெயருக்கு பட்டா மாறுதல் விண்ணப்பமும் பதிவின்போதே அனுப்பப்படுகிறது. இதனால், 30 நாட்களுக்குள் வாங்கியவர்கள் பெயரில் பட்டா மாற்றப்பட்டிருக்கும்.