

நமது நாட்டில் தடையில்லாமல் கிடைத்தும், நமக்கு அதன் தேவை அதிகமிருந்தும், நாம் முறையாகப் பயன்படுத்தாமல் இருப்பது சூரிய ஒளி மின்சார ஆற்றலைத்தான். சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் நாம் மிகவும் பின்தங்கி இருப்பதற்குக் காரணம் அதன் கட்டமைப்புச் செலவினமும் பாரமரிப்புச் செலவினமும்தான்.
சரி, பரிசோதனையாகச் செய்து பார்க்கலாம் என்றால் அதற்கும் சூரியத் தகடு (Solar Panel), பேட்டரி, இன்வெர்ட்டர் என்று ஏகப்பட்ட செலவுகள் வந்து நமது சோதனை முயற்சிக்கே சோதனை வந்துவிடுகிறது. குறைந்த செலவில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி அதன் மூலமாகக் கிடைக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்த முடியுமா? என்றால் நிச்சயம் முடியும்.
உதாரணத்துக்கு நாம் நமது சொந்த அலுவலகத்திலோ கடையிலோ வீட்டிலோ ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கிறோம் என்றால் அப்போது நமக்கென்று ஒரு மின்விசிறி பகல் முழுவதும் ஓடிக் கொண்டிருக்குமல்லவா? அதை மட்டும் நாம் ஒரு பரிசோதனைக்காகச் சூரிய ஒளி மி்ன்சாரத்தைப் பயன்படுத்தி ஓடவைத்தால் மின்சார வாரியத்தால் வழங்கப்படும் மின்சாரத்துக்கான செலவு மிச்சமாகுமல்லவா?
எப்படிச் செய்வது?
முதலில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறுவது தொடர்பான அடிப்படையான விஷயங்களை அறிந்துகொள்வோம். அதாவது சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் வெப்பத்தைச் சூரியத் தகடு தனக்குள் வாங்கி அதை டி.சி. (நேர் திசை மின்சாரம்) மின்சாரமாக வெளியிடுகிறது. மின்சார வாரியத்தால் நமக்கு அளிக்கப்படுவது ஏசி எனப்படும் மாறுதிசை மின்சாரம். இந்த ஏசி மின்சாரத்தில்தான் பெரும்பாலான சாதனங்கள் இயங்குகின்றன. ஏசி மின்சாரத்தைச் சேமிக்க முடியாது.
அதனால்தான் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்தைச் சேமித்துவைக்க பேட்டரியும் டிசியை ஏசியாக மாற்ற இன்வெர்ட்டரையும் பயன்படுத்துகிறோம். அப்படிச் செய்யாமல் நேரடியாக நாம் அந்த டிசி மின்சாரத்தைப் பயன்படுத்தினால் நமக்கு இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரி செலவுகள் குறையும்.
ஆனால், அதற்கு நாம் மேலே குறிப்பிட்டவாறு பகலில் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்பவர்களாக இருந்தால் இந்த டிசி மின்சாரத்தைப் பயன்படுத்தி மின்விசிறியை ஓடவைக்கலாம். இதற்கு நமக்குத் தேவையானவை, 20 வாட்ஸ் சக்தி உடைய ஒரு சூரியத் தகடு மற்றும் அதே 20 வாட்ஸ் அல்லது அதற்குக் குறைவான வாட்ஸ் உடைய ஒரு டிசி மின்விசிறி (DC Fan).
இவை இரண்டும் தோராயமாக தலா ரூ. 1000 ரூபாய்க்குள் கிடைக்கும். இதில் சோலார் சூரியத் தகடை நமது அலுவலகத்திலோ வீட்டின் மாடியிலோ வெயில் அதிக நேரம் படும்படியான இடத்தில் வைக்க வேண்டும். இதற்கென ஸ்டாண்டு எதுவும் தேவையில்லை. தற்காலிகமாக ஒரு மர பெஞ்சு மீது சோலார் சூரியத் தகடை வைக்கலாம்.
சூரிய மின்விசிறி
அந்த இடத்தில் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை நிழல் விழாமலிருந்தால் நல்லது. நாம் சூரியத் தகடு வைக்கும் இடத்திலிருந்து வீட்டினுள் அல்லது அலுவலகத்துக்குள் நமக்குத் தேவையான இடம் வரை வயர் வர வேண்டும் அதற்குத் தகுந்தாற் போல வயர் வாங்கிக் கொள்ளவும். மி்ன்சாரத்துக்குப் பயன்படுத்தும் சாதாரண வயரே போதுமானது. சூரியத் தகடின் பின்புறம் உள்ள ப்ளஸ் மற்றும் மைனஸ்களில் நீளமான வயரினை இணைத்து மறு பகுதியில் பிளக்கை இணைக்க வேண்டும்.
இதில் ஒரு சிறிய மாற்றத்தைக் கட்டாயம் செய்தே ஆக வேண்டும். டேபிள் டிசி மின்விசிறி வாங்கும்போது சில நேரம் அதன் வயரில் பிளக் இருக்கும். அது மேல் (Male) பிளக்காக இருக்கும் அதை பிமேல் (Female) பிளக்காகக் கட்டாயம் மாற்றம் செய்ய வேண்டும். காரணம் நாம் வாங்கியிருப்பது டிசி மின்விசிறி. அதைச் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் ஏசி மின்சார பிளக்கில் போட்டுவிட்டால் அவ்வளவுதான் மின்விசிறி காலியாகிவிடும்.
வேறு யாராவது இந்த டேபிள் பேனைத் தெரியாமல் சாதாரண மின் இணைப்புடன் (மாறுதிசை மின்சாரத்துடன்) இணைக்காமல் இருக்கத்தான் இந்த முன்னேற்பாடு. எனவேதான் பிமேல் (Female) என்றழைக்கப்படும் பிளக்கை டிசி பேனுடன் இணைக்க வேண்டும். மேல் (Male) என்றழைக்கப்படும் பிளக்கை மாடியில் சோலார் சூரியத் தகடிலிருந்து வரும் வயரில் இணைத்து இரண்டையும் இணைத்துவிட்டால் மின்விசிறியானது ஓட ஆரம்பித்துவிடும்.
எல்.ஈ.டி. விளக்கும் ஏற்றலாம்
கடுமையாக மழை பொழிந்தாலோ வானில் மேக மூட்டமாக இருந்தாலோ மின்விசிறியின் வேகம் குறைவாக இருக்கும். வெயில் காலங்களில் நல்ல வேகத்தில் ஒருவருக்குத் தேவையான அளவுக்கு மின்விசிறி ஓடும். ஒரு நாளைக்குக் குறைந்தது 6லிருந்து 7 மணிநேரம் இந்த சூரியஒளி மின்சக்தி மூலமாக மின்விசிறியைப் பயன்படுத்தும்போது நமது இருமாதங்களுக்கொரு முறையான மின் கட்டணத்தில் கணிசமான அளவு மின்கட்டணம் குறையக்கூடும். வீடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டிருந்தாலும் நமது மின்விசிறி ஓடிக்கொண்டேயிருக்கும் (பகலில்).
இதில் பகலிலேயே நமக்கு அந்த அறையில் மின்விளக்கும் தேவையென்றால் ஏற்கெனவே கூறிய 20 வாட்ஸுக்குப் பதிலாகக் கூடுதல் வாட்ஸ் சூரியமின் தகட்டினை வாங்கி அதை நேரடியாக ஒரு எக்ஸ்டென்சன் பாக்ஸில் இணைத்து அதில் மின்விசிறியோடு சேர்த்து ஒரு விளக்கையும் நாம் எரிய வைக்கலாம். அது எல்.ஈ.டி. விளக்காக இருக்க வேண்டும். அப்போதுதான் வெளிச்சம் அதிகம் வரும்.
வீட்டில் பெரியவர்கள் இருந்தால் நாள் முழுவதும் அவர்களுக்கு மின்விசிறி தேவைப்படும். அவர்களுக்கு இது போன்று சிறிய சூரியசக்தி மின்விசிறி வாங்கி வைத்துவிட்டால் அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும், வீட்டின் மின்கட்டணமும் அதிகமாகாது. அவர்களுடைய அறையில் வெளிச்சம் குறைவாக இருந்தால் எல்ஈடி பல்பையும் இணைத்து அவர்கள் பகலிலும் வெளிச்சத்தில் இருக்குமாறு செய்யலாம்.
இந்தமுறையில் நமது மின்கட்டணம் குறையும்போது நமக்கே வீட்டிலுள்ள அனைத்து மின்சாதனத்துக்கும் சூரிய ஒளி மின்சாரத்தையே பயன்படுத்தினால் என்ன என்ற எண்ணம் வரும்.