

மத்திய அரசு 2022-ம் ஆண்டுக்குள் எல்லோருக்கும் வீட்டு வசதி செய்து தர உறுதி பூண்டுள்ளது. இதைத் தொடர்ந்து ‘அனைவருக்கும் வீடு - 2022’ திட்டத்தைச் செயல்படுத்த, ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்காகச் சில திட்டங்களையும் அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதிகரித்துவரும் கட்டுமானப் பொருள் விலை, அதனால் நிலவும் பொருளாதாரத் தட்டுப்பாடு, நிலத்தைப் பெறுவதில் உள்ள சிக்கல் ஆகியவற்றால் இந்தக் கனவுத் திட்டம் நனவாகுமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் நகர்ப் புறப் பகுதிகளில் 2,20,741 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த மூன்று ஆண்டுகளில் வீட்டுத் தேவையும் உயர்ந்துள்ளது. இன்றைக்கு நகர்ப் புற பகுதிகளில் வீட்டுத் தேவை
1.87 கோடியாக உள்ளது. இந்தத் தேவையில் 95 சதவீதம் குறைந்த விலை வீடுகள்தான். கிராமப் புறத்தில் இந்தத் தேவை 4.37 கோடியாக உள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்தத் தடைகளைத் தாண்டி இந்த இலக்கை அடைவது எளிய காரியமல்ல. இது சாத்தியப்பட இன்னும் 2 லட்சம் கோடி அமெரிக்க டாலர் நிதி தேவைப்படுகிறது என தேசிய ரியல் எஸ்டேட் மேப்பாட்டுக் கழகம் (National Real Estate Development Council - NAREDCO) தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 110 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளை உருவாக்க முடியும் என அந்த நிறுவனத் தலைவர் சுனில் மந்திரி தெரிவித்துள்ளார். ரியல் எஸ்டேட் துறையில் இன்னும் 20 சதவீதம் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். இன்றைக்குள்ள நிலையில் இந்த முதலீட்டின் மூலமே நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை நம்மால் எட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீட்டு வசதித் தேவைகள் பூர்த்திசெய்தது போக, உருவாக்கப்பட்ட புதிய சமூகத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் வர்த்தகக் கட்டமைப்புகளையும் உருவாக்கக் கூடுதலாக 1.5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் தேவைப்படும் என தேசிய ரியல் எஸ்டேட் மேப்பாட்டுக் கழகம் தெரிவித்துளது.
அரசு அறிமுகப்படுத்தவுள்ள ரியல் எஸ்டேட் இன்வஸ்மெண்ட் டிரஸ்ட் மூலம் பொருளாதாரத் தேவைகள் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களின் வீட்டுக் கடனும் மற்ற நிதி முதலீடும் அதிக செலவுள்ளதாக இருப்பதால் ரியல் எஸ்டேட் துறையின் மேம்பாட்டுக்காக வங்கிகள் தங்கள் நிதி ஆதரவை மேம்படுத்த வேண்டும்.
இப்போது வங்கிகள் 5 சதவீதப் பொருளாதார ஆதரவை மட்டுமே ரியல் எஸ்டேட் துறைக்கு வழங்கிவருகின்றன. இதை அதிகப்படுத்த ரிசர்வ் பாங்க் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரியல் எஸ்டேட் துறை வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும் வீடு கட்டுவதற்கான நிலம் வாங்குவதில் அதிக நிதி முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. உருவாக்கப்படும் திட்டத்தின் 60 சதவீதமான தொகை நிலம் வாங்குவதிலேயே செலவாகிவிடுகிறது.
எனவே வங்கிகள் வீட்டு மனை வாங்குவதற்கும் கடன் தர முன்வர வேண்டும் எனவும் ரியல் எஸ்டேட் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். வங்கிகள் கடன் வாங்கும் முறை எளிதாகி, கடன் தொகையை அதிகரிக்கும்பட்சத்தில் அனைவருக்கும் வீடு விரைவில் சாத்தியமாகும்.