

‘மலைகளின் அரசி’ என்று கருதப்படும் நீலகிரி மாவட்டத்துக்கு அடையாளம் படுகர் இன மக்கள் என்றால், அவர்களுக்கான அடையாளம் ஹெத்தையம்மன். ‘ஹெத்தையம்மன்’ என்ற படுக வார்த்தைக்குத் தமிழில் ‘பாட்டியம்மா’ என்று அர்த்தம் சொல்லலாம். இவர் தான் படுகர்களின் குலதெய்வம். இந்தக் குலதெய்வத்தைக் கொண்டாடும் விழா, ஆண்டுக்கு ஒரு முறை ‘ஹெத்தை ஹப்பா’ (தமிழில் பாட்டியம்மன் திருவிழா) நடத்தப் படுகிறது.
நீலகிரியில் பேரகணி, ஜெகதளா, பெத்தளா, ஒன்னதலை, கூக்கல், பெப்பேன், எப்பநாடு ஆகிய கிராமங்களில் இந்தத் திருவிழா வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடத்தப்படுகிறது. நாள் முழுவதும் கொண்டாடப்படுகிற இந்தத் திருவிழாவில் படுகர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்டு, பாரம்பரிய குடைகளைச் சுமந்துகொண்டு ‘ஹெத்தையம்மன்’ கோயிலுக்குச் செல்வார்கள். அங்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும். பின்னர், பாரம்பரிய நடனம், அன்னதானம் போன்றவை நடக்கும்.
இந்தத் திருவிழாவின்போது உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று படுகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் இத்திருவிழாவின்போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
‘ஹெத்தையம்மன்’ கடவுளுக்குத் திட்டவட்டமான உருவம் கிடையாது. அதனால் இங்கே உருவ வழிபாடு கிடையாது. ஆனால் அதற்குப் பதிலாக, நீளவாக்கில் ஒரு கல்லை வைத்து, அதற்கு வெள்ளை வண்ணம் பூசி, முண்டு என்று சொல்லப்படும் வெள்ளை வேட்டியை அந்தக் கல்லைச் சுற்றி கட்டியிருப்பார்கள். இவ்வளவு எளிமையானதுதான் படுகர்களின் தெய்வம்.
சரி, இந்த எளிமையான தெய்வத்துக்குக் காணிக்கை எவ்வளவு தெரியுமா? அதுவும் எளிமையானதுதான், 25 பைசா மட்டுமே!