

சென்னை மாநகராட்சி, ‘திறந்த வெளிக்கான ஒதுக்கீட்டு’ (OSR - Open Space Reservation) நிலங்களின் மீது கட்டிடப் பணிகள் மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனங்கள் மீதும் அடுக்கக உரிமையாளர்கள் மீதும் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
‘திறந்த வெளிக்கான ஒதுக்கீட்டு’ நிலங்கள் என்றால் என்ன?
3 ஆயிரம் சதுர மீட்டரிலிருந்து 10 ஆயிரம் சதுர மீட்டர் வரை கட்டிடப் பணிகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு கட்டுமான நிறுவனமும் இந்தத் திறந்த வெளிக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதாவது மனை முழுவதிலும் கட்டிடம் கட்டக் கூடாது. இது சென்னைப் பெரு நகர வளர்ச்சிக் கழகத்தின் விதிமுறைகளில் ஒன்று.
அதாவது கட்டிடத்தின் மொத்தப் பரப்பில் 10 சதவீத நிலத்தை இதற்காக ஒதுக்க வேண்டும். இந்த நிலத்தைச் சென்னைப் பெரு நகர வளர்ச்சிக் கழகம் மூலமாக (சிஎம்டிஏ) சென்னை மாநகராட்சிக்கு அளிக்க வேண்டும். இந்த இடங்கள் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும், சிறிய மைதானம், பூங்காக்கள் போன்றவை அமைக்கவும் பயன்படும். ஆனால் இந்த விதிமுறை சரியாகப் பின்பற்றப்படுவதில்லை எனச் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
இம்மாதிரியான திறந்தவெளிக்கான ஒதுக்கீடு என்பது நகர அமைப்பில் மிக முக்கியமான, இன்றியமையாத விஷயம். ஒரு நகரத்திலும் போதிய அளவு OSR இட ஒதுக்கீடுதான் இருக்க வேண்டும். சென்னையைப் பொறுத்தவரை 578 OSR இடங்களில் 152 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1991 - 2006 க்கு இடைப்பட்ட காலத்தில் 161 பூங்காக்கள் அமைக்கப்பட்டன. 2006 - 11 இடைப்பட்ட காலத்தில் 99 பூங்காக்கள் அமைக்கப்பட்டன.
2012 -13 ஆண்டுக் காலத்தில் மேலும் 100 பூங்காக்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டதாக மேயர் தெரிவிக்கிறார். அவற்றில் 91 பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுபோல 2013 - 14 ஆண்டுக் காலத்தில் சென்னை மாநகராட்சி கூடுதலாக 100 பூங்காக்கள் அமைக்கத் திட்டமிட்டது. அவற்றில் 28 பூங்காக்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் 2014 - 15 ஆண்டிலும் 100 பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
OSR இடத்தில் கட்டிடப் பணிகள் மேற்கொள்ள அனுமதி கிடையாது. ஆனால் மாநகராட்சி நினைத்தால் அந்த இடத்தில் மக்கள் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள் கட்டும் வகையில் விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர அதில் அனுமதி உண்டு என அவர் தெரிவித்தார்.
ஆனால் சரியான ஆவணங்கள் இல்லாததால் பல OSR நிலங்களில் தனியார் கட்டிடங்கள் அத்துமீறிக் கட்டப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை.