

தமிழ்த் திரைப்படப் பாடல்களுக்கு நிறைய மலையாளிகள் ‘கவர் வெர்ஷன்' வெளியிடுவது வழக்கமாக உள்ளது. பண்பாட்டுரீதியான தொடர்ச்சியைத் தாண்டி, இன்றைக்குத் தமிழ் சினிமாவின் முக்கியச் சந்தைகளில் ஒன்றாகவும் கேரளம் இருக்கிறது. தமிழ் சினிமா, அது சார்ந்த அம்சங்கள் கேரளத்திலும் பிரபலமாகவே உள்ளன. அந்த வகையில் மேற்கு மலைத் தொடரும் மாநில எல்லைகளும் மட்டுமே நம்மையும் கேரளத்தையும் பிரிக்கின்றன என்ற கூற்று 100 சதவீதம் உண்மை.
‘ஞண்டுகளுட நாட்டில் ஒரிடவேள' படத்தில் நடித்ததால் கேரளத்தில் பிரபலமானவர் இளம் நடிகை அஹானா கிருஷ்ணா. பிரபல மலையாள நடிகர் கிருஷ்ண குமாரின் மகள். நடிப்பில் கத்துக்குட்டியான அஹானா, பாடுவதில் திறமை பெற்றவராக இருக்கிறார். ஒரேயொரு பாடலுக்கு கவர் வெர்ஷன் வெளியிடுவது ஒரு போக்கு என்றால், சில பாடல்களைக் கோவையாக்கி அதற்கு கவர் வெர்ஷன் வெளியிடுவது ஒரு வகைமாதிரியாக உள்ளது.
காற்றின் மொழி
பிரபலத் தமிழ் மெலடிகளான ‘காற்றின் மொழி’ (‘மொழி’-வித்யாசாகர், வைரமுத்து), ‘காற்றே என் வாசல் வந்தாய்’ (‘ரிதம்’-ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து) ஆகியவற்றுடன் ‘காற்றே நீ வீசருதிப்போல்’ (‘காற்று வந்நு விளிச்சப்போல்’, எம்.ஜி.ராதாகிருஷ்ணன், பாடல் - ஓ.என்.வி. குரூப்) என்ற மலையாளப் பாடலையும் சேர்த்து தனிக்கோவையாக்கி இருக்கிறார் அஹானா. மூன்றுமே காற்றை மையமாகக் கொண்ட திரைப்பாடல்கள். இப்படிப் பல்லவி ஒன்று, அனுபல்லவி ஒன்று, சரணம் ஒன்று எனப் பொருத்தமான பாடல்களை ஒன்றாக்கிப் பாடியுள்ளது சுவாரசியமாக உள்ளது.
வேகமும் அவசரமும் இன்னும் கால் பதிக்காத காடுகளில் வயலின், கீபோர்டு துணையுடன் காற்றைத் தேடிச் செல்கிறது இந்தப் பாடல். காற்றும் மழை மேகங்களும் தவழ்ந்துவரும் காடுகள் சூழ்ந்த மேற்கு மலைத் தொடரில் படமாக்கி இருக்கிறார்கள். இயற்கையின் குலைக்கப்படாத ஓர்மையும் ஆர்ப்பாட்டமற்ற அழகும் இந்த வீடியோவில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே பிரபலமான பாடல்களின் பின்னணி இசைக்குப் பதிலாக, அழகூட்டும் காட்டின் இயற்கை ஒலிகள் இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பாடலைப் பாடியுள்ளதுடன் பாடலுக்கான வீடியோவிலும் அஹானா கிருஷ்ணா தோன்றியுள்ளார். போலவே, இசையமைத்துள்ள வர்க்கியும் வயலின் வாசித்த ரிது வைசாக்கும் இசைப் பங்களிப்புடன் வீடியோவின் கதாபாத்திரங்கள் ஆகியிருக்கிறார்கள். எம்.எஸ். சியாமபிரகாஷ் இயக்கியுள்ளார்.
தவழ்தலும் வியாபித்தலும்
அஹானாவின் குரலுடன் சேர்ந்து இழையும் வயலினின் மீட்டல், பாடலின் போக்குக்கு ஏற்பத் தவழ்ந்தும் வியாபித்தும் இசையனுபவத்தைத் தனித்துவம் ஆக்குகிறது. அஹானாவின் குரலும் வயலினும் மொத்தப் பாடலையும் புது அனுபவம் ஆக்கிவிடுகின்றன. மற்றொருபுறம் பாடலின் இடைவெளிகள் வெளிப்படாத வண்ணம் இசையால் நெசவு செய்திருக்கும் கீபோர்டு, அந்த அனுபவத்தை மேம்படுத்துகிறது.
அஹானா கிருஷ்ணாவின் யூடியூப் அலைவரிசையில் இந்த ‘காற்றுக் கோவைப் பாடலை’யும் அவரது வேறு சில வீடியோக்களையும்கூட ரசிக்கலாம். தொடங்கிய சில நொடிகளில் நம் மனத்தை நிறைக்க ஆரம்பித்துவிடும் காற்றின் கிசுகிசுப்புக்களும், சீட்டியொலிகளும், இந்த ‘காற்றுக் கோவைப் பாடலை’த் திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டுகின்றன.