

ந
ம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டுமே சொந்த வீடு கட்டும் பாக்கியம் கிடைக்கிறது. அந்தப் பொன்னாளை அடைவதற்குத் தொடக்கப் புள்ளி வீட்டின் திட்ட வரைபடமே (Housing Plan). வீட்டின் திட்ட வரைபடம் என்பது முக்கியமான ஒன்று. அதை முடிவுசெய்வதற்கு முன் நாம் முடிவுசெய்ய வேண்டிய சில விஷயங்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.
திட்ட வரைபடத்தில் வீட்டில் ஒவ்வோர் அம்சமும் நுணுக்கமாக விவரிக்கப்பட்டிருக்கும். அதை உற்று நோக்கினால் புரிந்துகொள்ளலாம். முதலில் கவனிக்காமல் விட்டுவிட்டுப் பின், ‘கதவு வெளிப்புறமாகத் திறப்பது போல் அமைந்துள்ளது’, ‘அறையில் போதிய அளவில் ஜன்னல்கள் இல்லை’ என்பன போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவதால் பலன் இல்லை. புளு பிரிண்ட் என்று கூறப்படும் கட்டிட வரைபடத்தில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு குறியீடும் ஒவ்வொரு பொருளை உணர்த்தும். கதவுக்கான குறியீடு ஒரு மாதிரியும் ஜன்னலுக்கான குறியீடு ஒரு மாதிரியும் வெண்ட்டிலேட்டர் போன்றவற்றுக்கான குறியீடு ஒருமாதிரியுமாக அனைத்தையும் பிரித்துக் காட்டியிருப்பார்கள். என்னென்ன பொருட்கள் (டிவி போன்றன) எங்கெங்கு வைக்க வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டியிருப்பார்கள். தரை வழுவழுப்பனதா சொரசொரப்பானதா என்பதுகூட வித்தியாசப்படுத்தப்பட்டிருக்கும்.
முதலில் நம்முடைய வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் திட்ட வரைபடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கை முறை, குடும்பத் தேவை, குடும்பச் சூழல், பட்ஜெட் போன்றவற்றைச் சார்ந்து இது இருக்கும். உதாரணமாக, இளம் தம்பதியினருக்காகத் தேவை என்பது ஓய்வுபெற்ற தம்பதியினரிடமிருந்து பெரிதும் மாறுபட்டது. குடும்பத்திலுள்ள அனைவரிடமும் கலந்தாலோசித்து, அவரவர் தேவைகளை அறிந்து அதற்கேற்றவாறு ஒரு வீட்டுத் திட்ட வரைபடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இன்றைய தேவைகளுடன் எதிர்காலத் தேவையையும் கணக்கில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். உதாரணமாக, ஒருவர் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். வீட்டிலேயே பணிபுரியும் நபராக இருக்கலாம். ஹோம் தியேட்டர் அமைத்துத் திரைப்படங்களைப் பார்க்க விரும்புபவராக இருக்கலாம். இது போன்ற பிரத்யேகத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு ஏற்றதாக வீட்டின் வரைபடம் உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
அறைகளைப் பொறுத்தவரை வெறுமனே நீள, அகல அளவுகளை மட்டும் பார்க்கக் கூடாது. அறையில் என்னென்ன எங்கெங்கே வரும் என்பதை ஓரளவுக்கு முன்பே தீர்மானித்து, அதற்கேற்றபடி வரைபடம் அமைக்கப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்க வேண்டும். மனையின் மீது கட்டப்படப்போகிறது என்றால், முதலில் மனையின் தன்மையை ஆராய வேண்டும். எந்தப் பக்கம் காற்று அதிகமாக வீசும், எந்தப் பக்கம் வெளிச்சம் இருக்கும் என்பதையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு கதவுகள், ஜன்னல்கள் அமைக்கப்படுகின்றனவா என்று சரிபார்க்க வேண்டும். வீட்டில் நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் வேண்டும் என்றால் அதற்கேற்றபடி கதவுகளையும் ஜன்னல்களையும் அமைக்க வேண்டும். நேருக்கு நேர் ஒன்றன்பின் ஒன்றாகக் கதவுகள் அமைத்தலும், ஒவ்வோர் அறையிலும் அதிகபட்ச ஜன்னல்களும் மிகுந்த காற்றோட்டத்தைத் தரும். பாதுகாப்பு என்பதும் மிகவும் முக்கியமான ஒன்று. பள்ளியிலிருந்து, பணியிலிருந்து திரும்பும் குழந்தைகளுக்கு வரும் பாதை பாதுகாப்பானதாக உள்ளதா என்றும்., உங்கள் வீட்டுப் பெண்கள் தனித்திருக்கும் வேளையில் பாதுகாப்பு உள்ளதா என்பதையும் ஆராய வேண்டும்.
தரையைப் பொறுத்தவரை வழுவழுப்பான தரை அமைக்கும் எண்ணம் இருந்தால் வீட்டில் பெரியவர்கள், குழந்தைகள் இல்லாததை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இருக்கும் பட்சத்தில் வழுவழுப்பான தரைத்தளம் அமைப்பதைத் தவிர்க்கலாம். தண்ணீர் அதிகம் புழங்கும் இடமான புழக்கடையிலும் குளியலறைகளிலும் சொர சொரப்பான தரையையே அமைக்க வேண்டும்.
மின் இணைப்பு, குடிநீர்க் குழாய் இணைப்பு, கழிவு நீர் வெளியேற்றம் போன்றவை முக்கியமானவை. அதனால் அதற்கேற்றபடி கட்டிட வரைபடம் உள்ளதா என்று ஆராய வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் மழைநீர்ச் சேகரிப்பு என்பதும் மிகவும் முக்கியம் என்பதால் அதற்குரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா எனப் பார்க்க வேண்டும்.
சமையலறையின் மேடை என்பது தரையிலிருந்து 75 முல் 80 செ.மீ உயரத்தில் அமைந்திருக்க வேண்டும். நம் வீட்டுப் பெண்களின் உயரத்துக்கேற்ப சமையலறை மேடை அமைய வேண்டும். சமையலறையின் ஜன்னல்களிலிருந்து வரும் காற்று அடுப்பை அணைத்துவிடாதவாறு ஜன்னல்கள் அமைக்க வேண்டும். அறைகளில் அமைக்கப்படும் கதவுகள் ஒற்றைக் கதவுகளா இரட்டைக் கதவுகளா என்பதைத் தீர்மானித்து அதன் அளவுகள் நமக்குப் போதுமானதா எனச் சரி பார்க்க வேண்டும். வீட்டில் முதியவர்கள், குழந்தைகள் உள்ளனர் எனில் அவர்களுக்கு எட்டுவதுபோல் அலமாரிகளைச் சற்றுத் தாழ்வாக அமைக்க வேண்டும்.
முதலில் கவனியாமல் விட்டுவிட்டு, பின் கட்டிடத்தின் அளவுகளில் மாற்றம் செய்தால், கட்டுமானச் செலவு எதிர்பார்த்ததைவிட அதிகரித்துவிடும். எனவே, முதலிலேயே முன்னெச்சரிக்கையுடன் வீட்டுத் திட்ட வரைபடத்தைச் சரி பார்க்க வேண்டியது அவசியம்.