

இ
ப்போதெல்லாம் காலணிகளுக்கான ஒரு தனி அலமாரியை (shoe rack) உருவாக்குவதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். படுக்கையறையிலும் நடுக்கூடத்திலும்கூட இதுபோன்ற அலமாரியை மேலை நாட்டினர் வைத்துக் கொள்வதுண்டு. என்றாலும், நம் நாட்டைப் பொறுத்தவரை காலணி அலமாரிகள் பெரும்பாலும் வீட்டில் வாயிலுக்கு அருகிலோ வரவேற்பறையின் ஓரத்திலோ இருக்கும்.
வீடு புனிதமானது என்ற அர்த்தத்தில்தான் வீட்டுக்குள் செருப்புகளுக்கு இடம் தருவதில்லை. இன்னொரு பக்கம் வெளியில் இருந்துவரும் பாக்டீரியாக் கிருமிகள் வீட்டுக்குள் நுழைவதைக் காலணிகளை வீட்டின் வெளிப் பகுதியிலேயே கழற்றி விடுவதன் மூலம் பெரும்பாலும் தடுத்துவிடுகிறோம். ஆனால், இப்போது வீட்டுக்குள்ளே காலணி அணியும் வழக்கம் பரவலாகியுள்ளது.
உங்கள் வீட்டில் பலதரப்பட்டவர்கள் இருக்கலாம். அவர்கள் எல்லாமே என்னமாதிரி காலணிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை மனத்தில் கொண்டு காலணிக்கான அலமாரியைத் தீர்மானம் செய்யுங்கள்.
எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் பார்வைக்கு அழகாக இருக்கிறது என்று ஒரு ‘காலணி அலமாரியை’ வாங்கி விட்டு அவர்கள் பதின்ம வயது மகனின் பெரிய காலணிகளை அதில் வைக்க முடியாமல் திணறுவதைப் பார்த்தேன் (ஒருமுறை அந்த வீட்டின் பணிப்பெண் இந்தக் காலணிகளை மிகவும் அழுத்தி அந்த அலமாரித் தட்டுக்குள் நுழைத்துவிட அதன் மேற்பகுதி பாதிக்கப்பட்டது தனிக்கதை).
காலணி அலமாரிகளைக் கடையிலிருந்து வாங்கினாலும், நீங்கள் தச்சரிடம் ஆர்டர் கொடுத்து செய்யச் சொன்னாலும் சில விஷயங்களை மனத்தில் கொள்வது நல்லது. கதவுகளால் மூடப்பட்ட காலணி அலமாரியா, கதவுகளற்ற காலணி அலமாரியா, எதைத் தேர்ந்தெடுப்பது?
கதவுகள் அமைந்த காலணி அலமாரி என்றால் அது மரத்தில் செய்யப்பட்டதாக இருப்பது நல்லது. என்ன இருந்தாலும் மரத்தில் சுவாசிக்கக் கொஞ்சமாவது துளைகள் இருக்கும். இதன் மூலம் காலணிகளில் இருக்கக்கூடிய துர்நாற்றம் ஓரளவாவது வெளியேற வாய்ப்பு உண்டு.
உலோகங்களாலோ பிளாஸ்டிக்காலோ செய்யப்பட்ட காலணி என்றால் அதில் கதவுகள் இல்லாமல் இருப்பதுதான் நல்லது. முதலில் ஒன்றில் தெளிவாக இருங்கள். காலணி அலமாரிதான் பெரிதாக இருக்கிறதே என்று தேவையற்ற காலணிகளை எல்லாம் அதில் சேமித்து வைக்காதீர்கள். வீட்டில் சேரும் பிற பொருள்களுக்குப் பொருந்துகிற ஒரு விதி இதற்கும் பொருந்தும்.
கடந்த ஒரு வருடத்தில் ஒருமுறைகூடப் பயன்படுத்தாத காலணிகளை வெளியேற்றி விடுங்கள். யாருக்காவது அவற்றைக் கொடுக்கலாம் என்று எண்ணினால் உடனடியாக அதைச் செய்யுங்கள். தேய்ந்து போன, அறுந்து போன, சிறு துளை ஏற்பட்டுப்போன காலணிகள் எல்லாம் எதற்கு?
தேவையில்லாத காலணிகளை இடம் மாற்றிவைத்தால் காலணி அலமாரியில் எவ்வளவு இடம் மிச்சமிருக்கிறது என்பது உங்களுக்கு அப்போது புரியும். மொத்தம் வீட்டினருக்கு எத்தனை ஜோடிக் காலணிகள் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொண்டு அதற்குப் பிறகே காலணி அலமாரியின் அளவைத் தீர்மானியுங்கள். தோட்ட வேலை செய்யும்போதும், ஓட்டப் பயிற்சியின்போதும் பயன்படுத்தப்படும் காலணிகளைக் காலணி அலமாரியின் கீழ்த்தட்டில் வைப்பது நல்லது.
அப்போதுதான் அவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடிய மண் மற்றும் பிற குப்பைகள் மற்ற காலணிகளில் படாமல் இருக்கும் (இந்த இடத்தில் இன்னொரு ஆலோசனை. வீட்டுக்குள் நுழைந்தவுடன் மிதியடிகளில் காலணிகளை நன்கு தட்டிக் கொண்டு பிறகுதான் அவற்றைக் காலணி அலமாரியில் வைக்க வேண்டும்).
ஃபைபர்களால் செய்யப்பட்ட காலணி அலமாரிகளின் விலை கொஞ்சம் குறைவு என்பதுடன் அவற்றை எளிதில் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். ஆனால் அவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டி இருக்கும். காலணி அலமாரிகளில் பல வகை இப்போது வந்துவிட்டன.
சக்கரங்கள் வைத்த காலணி அலமாரி இவற்றில் ஒருவகை. உங்கள் வீட்டின் ஒரே பகுதியில்தான் நிரந்தரமாக இந்தக் காலணி அலமாரி இருக்கப் போகிறது என்றால் சக்கரம் அவசியமில்லை. அதேபோல சுழலும் காலணி அலமாரியும் அறிமுகமாகிவிட்டன. உங்கள் தேவைகள் என்ன என்பதை மட்டுமே மனத்தில் கொண்டு காலணி அலமாரிகளை வாங்கினால் அது உங்களுக்கு நல்லது.