

இந்தியாவின் வளர்ச்சி நாளுக்கு நாள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துகொண்டிருக்கிறது. வளரும் நாடுகளில் இந்தியாவுக்கான இடம் தனியானது. தெற்காசியாவின் வல்லரசு என இந்தியாவைச் சொல்லலாம்.
இந்தப் பெருமையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் இந்தியாவின் பிரச்சினைகளும் தனித்தன்மையானதுதான். சொர்க்கத்திற்கு இணையான வசதிகள் கொண்ட வீடுகள் கட்டப்படும் இந்தியாவில்தான் 58 சதவீதமான மிகவும் பின்தங்கிய மக்கள் வாழ வீடுகளற்று நடைமேடைகளை வாழிடமாக்கிக்கொண்டுள்ளனர்.
இன்னும் குறைந்த வருமானம் கொண்ட 39 சதவீத மக்கள் ‘வீடு’ என நம்பப்படும் கட்டிடத்திற்குள் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கின்றனர். எல்லோருக்கும் வீடு என்ற அரசின் கனவு அவ்வளவு எளிய காரியமல்ல. ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகள் அதிகமாக வந்தாலும் எளியவர்கள் வாங்கிக்கொள்ளும் வகையில் வீட்டு விலை இல்லை.
இது குறித்து ரிசர்வ் ஃபேங்க் ஆஃப் இந்தியாவின் துணை ஆளுநர், “வீட்டு விலை மிக அதிகமாக உள்ளது. ஆனால் அந்த விலையேற்றம் விரைவில் போதுமான அளவில் குறையும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுக்கக கட்டுமான நிறுவனங்களால் இந்த விலைக் குறைவு சாத்தியப்படும் என அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் ஆறு பெரிய நகரங்களில் இதுவரை கட்டப்பட்டுள்ள, கட்டுமானத்திலுள்ள விற்கப்படாத அடுக்கு மாடி வீடுகளின் எண்ணிக்கை 76 ஆயிரம் என ரியல் எஸ்டேட் ஆராய்ச்சி நிறுவனமான Liases Foras தெரிவிக்கிறது.
இந்த எண்ணிக்கை கடந்த ஜூன் வரை கணக்கிடப்பட்டது. ஆனால் இந்த வளர்ச்சி இங்குள்ள வீட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்யுமா என்ற கேள்வி வலுவானதுதான். ரியல் எஸ்டேட் தொழிலில் வரும் அதிக லாபத்தால் இந்தத் தொழிலில் தேவைக்கு அதிகமான முதலீடுகளை எல்லோரும் மேற்கொண்டுவருகிறார்கள்.
வீடற்றவர்கள், தங்கள் தேவைக்காக ஒரு வீடு வாங்க முடியாத நிலையில் இருக்க, வசதி படைத்தவர்கள் வருமானத்திற்காக வீடுகளாக வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள். வங்கிகள் வீட்டுக் கடன் அளிக்கையில் முதல் வீட்டுக் கடன் வாங்கும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வங்கிகள் முன்வர வேண்டும் எனவும் முந்த்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.
குறைந்த விலை வீடுகள் என்பது இப்போது உள்ள சூழ்நிலையில் சாத்தியமில்லை எனக் கட்டுமான நிறுவனங்கள் தரப்பில் சொல்லப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதாவது வரி வகையில் கிட்டத்தட்ட 30 சதவீதம் செலவழிக்க வேண்டியுள்ளது என்பது அவர்கள் தரப்பு வாதம்.
ஆனால் இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு குறைந்த விலை வீடுகளை வழங்க கட்டுமான நிறுவனங்கள் முன்வர வேண்டும். அது சாத்தியமாகக்கூடிய விஷயம்தான் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள், கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள் எல்லாம் ஒரு புள்ளியுல் இணைந்து செயல்படும்பட்சத்தில் வீட்டுக் கட்டுமானம் பெருகி வீடு விலை குறைய வாய்ப்பு இருப்பதாக முந்த்ரா தெரிவித்துள்ளார்.