வீடு வாங்க இது சரியான நேரமா?
சொ
ந்தமாக ஒரு வீடு என்ற கனவுடன் உள்ளவருக்கும் அந்தக் கனவு இல்லாதவருக்கும் ஆர்வமுள்ள விஷயம் இது. அதற்குக் காரணம் இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, ரியல் எஸ்டேட் துறை மந்தகதியில் இருப்பதை மறுக்க முடியாது. 2007-ல் ரியல் எஸ்டேட் துறை முன்னோக்கித் தொடங்கிய கண்மூடித்தனமான ஓட்டத்தின் வேகம் இன்று குறைந்திருக்கிறது.
இந்நிலையில், அண்மையில் ரியல் எஸ்டேட் துறை குறித்து சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. சிஎல்எஸ்ஏ என்ற பன்னாட்டு நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட அந்த ஆய்வை அப்படியே நமது சூழலுக்குப் பொருத்திப் பார்க்க இயலாது. ஆனால், பொதுவாக முதலீடுகள் எந்தத் திசையை நோக்கிச் செல்லும் என்பதற்கான திசைகாட்டியாக இந்த ஆய்வைக் கருதலாம். .
அந்த ஆய்வின்படி ரியல் எஸ்டேட் துறை மீண்டும் ஏற்றம் காண இன்னும் சில காலம் பிடிக்கலாம். ஆனால், இந்திய, தமிழகச் சூழல்களைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, ரியல் எஸ்டேட் இப்போது இருக்கும் தேக்க நிலையிலிருந்து இன்னும் கீழிறங்க வாய்ப்பில்லை. இந்த நிலையே சில காலம் நீடிக்கும் என அந்த அறிக்கை கூறுகிறது. சொந்தமாக வீட்டு மனையோ வீடோ அடுக்குமாடிக் குடியிருப்பு வீடோ வாங்க நினைப்பவர்கள் அல்லது முதலீடுசெய்ய நினைப்பவர்கள் இனியும் காத்திருக்கத் தேவையில்லை. தங்களது விருப்பம், தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய சரியான வீட்டைத் தேடிக் கண்டுபிடிக்கும் வேலையை உடனடியாகக்கூடத் தொடங்கலாம்.
ஏற்கெனவே வீட்டுக் கடன் வட்டி விகிதம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தற்போதைய நிலையில் கட்டி முடிக்கப்பட்ட, உடனடியாகக் குடியேறத் தயார்நிலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் ஒன்றை அடையாளம் கண்டு தேர்ந்தெடுங்கள். அதை விரைவாகக் கண்டடையும் பட்சத்தில், அதற்கான விலை குறித்து விரிவாகப் பேச்சு நடத்துங்கள். விற்பனையாளர் சொல்லும் விலைக்கு உடனே ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதிகபட்சமாக எவ்வளவு சலுகை, அல்லது எவ்வளவு தள்ளுபடி பெற முடியும் என்பது குறித்து விற்பனையாளரிடம் தாராளமாகப் பேசுங்கள். நிஜமாகவே உங்களது சொந்த தேவைக்காகத்தான் வாங்குகிறீர்கள் என்றால், கட்டாயமாக அவர் நல்ல தள்ளுபடியோ அல்லது வேறுவிதமான சலுகையோ வழங்குவார். தொடர்ந்து சொத்துகளை முடக்கி வைத்திருப்பதில் அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை.
அதேபோல, சொத்து வாங்க வங்கிக் கடன் பெறும் திட்டத்தில் உள்ளவர்கள், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்களின் பல்வேறு அறிவிப்புகளையும் திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, அதில் குறைந்த வட்டி, அதிக பலன் கிடைக்க வாய்ப்புள்ள ஸ்திரமான நிறுவனத்தைத் தேர்ந்தெடுங்கள். விழாக் காலச் சலுகையாகப் பல கட்டணங்களைத் தள்ளுபடி செய்வது உள்ளிட்ட பலதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். சொத்து சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தையும் பெற்று முழுமையாக அலசி ஆராய வேண்டும்.
பின்னாளில் எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாது என்பதை நம்பகமான, அனுபவம் உள்ள நபர்களை வைத்துச் சரிபார்த்து உறுதிசெய்து கொள்ளுங்கள். ஒருவேளை அதற்கு வாய்ப்பில்லை என்றால், திறமையான வழக்கறிஞர், தேர்ந்த மதிப்பீட்டாளர் போன்ற யாராவது ஒருவரது சேவையைப் பெறலாம். இதற்குத் தரும் சில ஆயிரம் ரூபாய்க் கட்டணம் உங்களது ஒட்டுமொத்த முதலீட்டையும் எக்காலத்துக்கும் பாதுகாத்து வைத்திருக்கும் முதலீடு என்று கருதினாலும் தவறில்லை.
நீண்ட கால அடிப்படையில் நடக்கும் ரியல் எஸ்டேட் விலை ஏற்ற- இறக்கச் சுழற்சியில், மந்தகாலம் முடியட்டும் என இலக்கு இல்லாமல் காத்திருக்கத் தொடங்கினால், சரியான காலத்தைத் தவறவிட வாய்ப்புண்டு. அப்படி நடந்தால், இத்தனை காலமும் காத்திருந்தது வீணாகிவிடலாம். எனவே, காத்திருப்புக் காலத்துக்கு இலக்கு ஒன்றை நிர்ணயம் செய்துகொண்டு, உங்களது பல்வேறு சூழல், நிர்ப்பந்தம் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு சொந்தமாக முடிவு எடுங்கள்.
