

ப
ல்லவ மன்னர்களில் முக்கியமானவரான மகேந்திர வர்ம பல்லவரால் எழுதப்பட்ட வடமொழி நாடகம் ‘மத்தவிலாசப் பிரஹசனம்’. இதை அடிப்படையாகக் கொண்டு ‘காஞ்சித்தலைவி அல்லது நவீன மத்தவிலாசப் பிரஹசனம்’ என்னும் நாடகம் சென்னைக் கலைக் குழு சார்பாகச் சென்னையில் கடந்த மே 19-ல் நிகழ்த்தப்பட்டது. இயக்கம் பிரளயன்.
மது அருந்திக் கொண்டு எப்போதும் சிவனை நினைத்தவாறே கபாலிகன் ஒருவன் தன் துணையுடன் கள்ளுக் கடையைத் தேடி காஞ்சிபுரம் செல்வான். போதையில் தனது கபால பாத்திரத்தை தொலைத்துவிடுவான். கதை இங்கிருந்தே தொடங்குகிறது, அந்தப் பொருளைத் தேடும் சமயத்தில் ஒன்றுக்குப் பின் ஒன்றாக நிகழும் காட்சிகள் தற்காலச் சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் நாடகத்தில் சொல்லப்பட்டுள்ளன. கபாலிகர்கள் இருவரும் அந்த கபாலப் பாத்திரத்தை தேடுவார்கள். புத்த பிக்கு எடுத்திருக்க வேண்டும் அல்லது நாய் எடுத்திருக்க வேண்டும் என்பது கபாலிகனின் சந்தேகம். இதன் வழியே சமயங்களைச் சித்திரித்துள்ளார்.
‘உன் சாமி பெருசா, என் சாமி பெருசா’ என்று கள்ளுக்கடையில் சில நபர்களுக்கிடையில் ஏற்படும் விவாதம் கடைசியில், ‘எல்லாச் சாமியும் பெருசுதான்’ என முடிகிறது. இதன் வழியே நம் சமூகத்தின் மிக முக்கிய பிரச்சனைகளை நேர்த்தியாக காட்சி படுத்தியிருப்பார் இயக்குநர்.
நாடகத்தின் முக்கியமாக பார்க்கப்படுவது அதில் நிறைந்திருக்கும் பகடிதான். பைத்தியக்காரன் கதாபாத்திரம் ஒன்றின் வழியாகத் தற்காலச் சமூகச் சூழல் கேள்விக்குள்ளாகிறது. கதை சொல்லல், கதாபாத்திரத்திற்கு ஏற்ற கலைஞர்கள், பாடல்கள், பாடல்களுக்கேற்ற இசை, ஒப்பனை, காட்சிகளுக்குத் தகுந்த வண்ண ஒளிகள் என நாடகம் சிறப்பாக இருந்தது. மொத்தமாகப் பார்த்தால் களம் வேறு, காலம் வேறு, ஆனால் காட்சி ஒன்று என்பதைப் பொருள்பட நிகழ்த்திக் காட்டியுள்ளது நாடகம்.