

சீ
னத்தின் தற்காப்புக் கலைகளுள் ஒன்று ததாய்ச் சீ. கராத்தே, குங்பூ ஆகிய கலைகளுடன் ஒப்பிடத்தக்கது இது. ஆனால் வெளிப்படுத்தும் முறையில் அவற்றிலிருந்து வேறுபட்டது. கராத்தேயில் மிக வேகமான உடல் அசைவையும் தெறிக்கும் சப்தத்தையும் வெளிப்பாட்டு முறையாகக் கொண்டது. ஆனால் தாய்ச் சீயில் கை, கால்களை மெதுவாக அசைக்க வேண்டும். அசைக்கும் முறையில் கராத்தே போல் இருக்கும்.
ஆனால் நீருக்குள் இருந்து கை, கால்களை அசைப்பதுபோல் மிதமான வேகத்தில் இருக்கும். ஒருவிதத்தில் பார்த்தால் இது ஒரு தியான முறை எனலாம். உடலைக் கருவியாக்கி அடையும் ஒரு மவுன நிலை. அதனால் இதை இயக்கநிலைத் தியானம் என்கிறார்கள்.
1500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு கொண்ட இந்தக் கலை தென்னிந்தியாவில் பல்லவ ஆட்சிக் காலத்தில் இங்கிருந்து சீனாவுக்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்தக் கலை இன்று சீனா தாண்டி உலகின் பல நாடுகளிலும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. தற்காப்புக் கலை என்பதைத் தாண்டி ஒரு உடற்பயிற்சியாக, தியான முறையாகவே இன்று இது கையாளப்படுகிறது.
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெண்கலம் வென்ற கோயம்புத்தூரைச் சேர்ந்த சோனிகா விக்ரமன், சீனா சென்று தாய்ச் சீ கலையைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார். அதன் அடிப்படையில் கோவையில் தாய்ச் சீ பள்ளி ஒன்றை நிறுவிப் பயிற்சியளித்துவருகிறார். அவரது இருநாள் தாய்ச் சீ பயிற்சி பட்டறை கோயம்புத்தூருக்கு அருகில் வடகோட்டத்தரயில் சட் தர்ஷனில் இன்று மாலை தொடங்கி இரு நாள் முகாமாக நடைபெறவுள்ளது. உணவு, தங்குமிடம் சேர்த்து ஒரு நபருக்கு ரூ.500 பயிற்சிக் கட்டணம். தொடர்புக்கு: 9489663755