

தெ
ருக்கள் நம்மிடையே இருக்கும் வரலாற்றுச் சின்னங்கள். அவற்றின் பெயர்கள் முக்கியமான வரலாற்றுக் குறிப்புகள். அவை வரலாற்றின் நீட்சியாகப் பல தலைமுறைகளைக் கடந்தும் அழியாமல் நிற்கின்றன. பெரும்பாலான தெருக்களின் பெயருக்குப் பின் ஏதோ ஒரு மனிதனின் வாழ்க்கை இருக்கும். மதுரையிலும் சென்னையிலும் இருக்கும் பி.டி.ராஜன் சாலையும் அத்தகையதே.
பி.டி. ராஜனின் முழுப் பெயர் பொன்னம்பல தியாகராஜன். 1892-ல் ஏப்ரல் 4 அன்று தேனிக்கு அருகில் இருக்கும் உத்தமபாளையத்தில் அவர் பிறந்தார். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜிலுள்ள ‘த லேஸ் ஸ்கூல்’ கல்லூரியில் வரலாறும் ஆக்ஸ்போர்டிலுள்ள ‘ஜீசஸ் கல்லூரி’யில் சட்டமும் படித்தார்.
இந்தியாவுக்கு வந்த பின் வழக்கறிஞராகச் சில காலம் பணியாற்றினார். அரசியல் ஈடுபாடு காரணமாக நீதிக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். 1920-ல் நீதிக்கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு சென்னை மாகாண சட்டமன்ற கவுன்சில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் அவர் அமைச்சராகவும் இருந்துள்ளார். 1937-ல் தோல்வியைத் தழுவும்வரை அவர் சென்னை மாகாண சட்டமன்ற கவுன்சில் உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார். 1939-ம் ஆண்டை அவர் அரசியல் வாழ்வின் உச்சம் எனலாம். அந்த ஆண்டுதான் சென்னை மகாணத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.1944 வரை அப்பதவியில் நீடித்துள்ளார்.
திராவிட அரசியல் பிடிப்பின் காரணமாக நீதிக்கட்சியில் இணைந்த பி.டி. ராஜனுக்கு ஒருகட்டத்தில் பெரியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக நீதிக்கட்சியிலிருந்து விலகி, போட்டி நீதிக்கட்சியைத் தொடங்கினார். 1957 வரை தான் தொடங்கிய கட்சிக்கு அவரே தலைமை வகித்தார்.
1952-ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் சென்னை மாகாண சட்டமன்ற கவுன்சில் உறுப்பினர் ஆனார். 1957-ல் அவரது உறுப்பினர் பதவி முடிவுக்கு வந்ததிலிருந்து அவர் தீவிர அரசியலிலிருந்து படிப்படியாக ஒதுங்க ஆரம்பித்தார். 1974 செப்டம்பர் 24-ல் 82-ம் வயதில் அவரது சொந்த ஊரான உத்தமபாளையைத்தில் இறந்தார். பி.டி. ராஜன் திராவிட கொள்கையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பிரமாணர் அல்லாதோரைக் கோயில் அறங்காவலர்களாக நியமிப்பதற்குப் போராடினார். பி.டி. ராஜனின் மகன் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனும் தீவிர அரசியலில் ஈடுபட்டவர்.
அவர் 1968-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியமான தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தமிழ்நாடு சட்டசபை சபாநாயகராகவும், இந்து அறநிலைத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பி. டி, ராஜனின் பேரனும் பழனிவேல் ராஜனின் மகனுமான பழனிவேல் தியாகராஜனும் தற்போது அரசியல் பணியாற்றி வருகிறார். தமிழகத்தின் 15-வது சட்டசபையில் அவர் எம்.எல்.ஏ. ஆக இருந்துவருகிறார்.
பி.டி. ராஜனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மதுரை கோரிப்பாளையத்திலும் சென்னை கே.கே. நகரிலும் இருக்கும் சாலைகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோரிபாளையத்தில் உள்ள பி.டி. ராஜன் சாலை, ஜும்ப்ரோபுரம் பகுதியில் உள்ளது. அது செல்லூர் சாலையையும் பி.பி. குளம் சாலையையும் இணைக்கிறது. அந்தச் சாலையில்தான் புகழ்பெற்ற தீபம் நூலகம் உள்ளது. பி.பி. குளம் சாலையுடன் அந்தச் சாலை இணையும் இடத்தின் வலது புறம் மஸ்ஜித் ஷுபைதா பள்ளிவாசல் உள்ளது. நரிமேடு சாலையுடன் அது இணையும் இடத்தில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. மாரியம்மன் கோயிலுக்கு அருகில் நகராட்சிக்குச் சொந்தமான குழந்தைகள் பூங்கா உள்ளது. இது தவிர ஏராளமான துணிக்கடைகள், உணவகங்கள், வங்கிகள் அங்கு மிகுந்துள்ளன.
சென்னையில் உள்ள கே.கே. நகரில் இருக்கும் பி.டி. ராஜன் சாலை அசோக் நகர் இரண்டாவது அவென்யுவையும் அசோக் பில்லர் மெயின் ரோடையும் இணைக்கிறது. முன்பு குடியிருப்புகள் நிரம்பி வழிந்த அந்தப் பகுதியில் தற்போது வணிக நிறுவனங்கள் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன. அந்தச் சாலையில் இருக்கும் சிவன் பூங்கா இன்றும் மிகவும் பிரபலமான ஒன்று. காலையிலும் மாலையிலும் மக்கள் அங்கு நடைப்பயிற்சி செய்வது வாடிக்கை. விடுமுறை நாட்களின் மாலை வேளைகளில் அந்தப் பகுதியில் வசிக்கும் குடும்பங்களால் சிவன் பூங்கா நிரம்பி வழிகிறது.