Last Updated : 23 Jun, 2018 10:24 AM

Published : 23 Jun 2018 10:24 AM
Last Updated : 23 Jun 2018 10:24 AM

கதை சொல்லியாக வாழ்ந்த சமையல் நிபுணர்

 

ணவு மற்றவர்களை அறியவும் மற்ற கலாச்சாரங்களை அறியவும் உதவும் சாதனம் என்று நினைத்தவர் அந்தோணி போர்தைன். 61 வயதில் ஒரு விடுதியில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட அவர், புகழ்பெற்ற சமையல்காரர், தொலைக்காட்சி ஆளுமை இவற்றையெல்லாம் தாண்டி அவர் சிறந்த கதைசொல்லி.

சிஎன்என்னில் அவர் செய்துவந்த “பார்ட்ஸ் அன்நோன்”( Parts Unknown) உள்ளிட்ட தொடர்களில் அவர் எந்த நாட்டின் முக்கியமான ஸ்தலங்களுக்குச் சென்றாலும் அங்கேயுள்ள உணவு விடுதிகளிலும் அங்குள்ள சமையலறைகளிலும் தனது நேரத்தை அதிகமாகச் செலவிட்டவர். ஒரு நாட்டின், குறிப்பிட்ட சமூகக் குழுவின் கலாச்சாரத்தைச் சமையலறை வழியாகவே உலகத்துக்கு உணர்த்தியவர் அவர்.

மேற்கத்திய ஊடகங்கள் ஆப்பிரிக்கா குறித்து வழக்கமாகக் காண்பிக்கும் காட்சிகளையும் உருவாக்கும் கருத்துகளையும் அந்தோணி போர்தைன் தனது நிகழ்ச்சிகளின் வாயிலாக உடைத்தெறிந்தார். ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைச் செய்த அவர் அங்குள்ள மக்களின் இசை, கலை, வரலாறு, உள்ளூர்ப் பண்பாடுகளை மக்களிடையே சாப்பிட்டுக்கொண்டே பேசுவதன் வழியாக சர்வதேசப் பார்வையாளர்களுக்கு ஆப்பிரிக்க நாட்டினர் குறித்த நேர்மறையான பார்வையை உருவாக்கினார். யானைகள், சிங்கங்கள், ஒட்டகச்சிவிங்கிகள், காண்டாமிருகங்கள் உலவும் நாடு மட்டுமே அல்ல ஆப்பிரிக்கா என்பதை ஆப்பிரிக்கப் பெருநகர் கலாச்சாரங்கள், விருந்துகள், நவீன மாற்றங்கள் போன்றவை அடங்கிய தனது நிகழ்ச்சிகள் வழியாகக் கவனப்படுத்தியவர்.

உணவோடு அதைச் சாப்பிடும் இடமும் சேர்ந்து சாப்பிடுவதும் மிகவும் முக்கியமானது என்பதை போர்தைன் தன் தந்தை மூலம் கற்றுக்கொண்டவர். “மற்றவர்களைவிட நான் என்னை உசத்தியாக என்றுமே நினைத்துக் கொண்டதேயில்லை. அதுதான் என் தந்தை எனக்குக் கற்றுக்கொடுத்த பாடம். இந்த உலகம் முழுக்க பயமோ முன்தீர்மானங்களோ இன்றிப் பயணம் செய்வதற்கும் சாப்பிடுவதற்கும் அவரது அறிவுரைதான் எனக்கு வழிகாட்டுகிறது. சந்தோஷத்தை அனுபவிக்க, ஒருவர் தன்னை அனுபவங்கள் எல்லாவற்றுக்கும் திறக்க வேண்டும்” என்று எழுதியவர் அவர்.

“நோ ரிசர்வேஷன்ஸ்” என்ற தனது புகழ்பெற்ற தொடரின் கடைசிப் பகுதியை மலேசியாவில் முடித்தபோது அவர் சொன்னது இது.

“பயணம் உங்களை மாற்றும். அது உங்களை மாற்ற வேண்டும். உங்கள் நினைவு, பிரக்ஞை, இதயம், உடல் எல்லாவற்றிலும் அது தடயங்களை ஏற்படுத்தும். நீங்கள் உங்களுடன் எதையோ எடுத்துக்கொள்கிறீர்கள், நம்பிக்கையோடு, சில நல்லவற்றையும் பயணத்தில் உங்கள் ஞாபகமாக விட்டுச் செல்கிறீர்கள்”.

வியட்நாமின் ஹனோய் நூடுல் ஷாப்பில் அந்தோணி போர்தைனுடன் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா சேர்ந்து சாப்பிட்டுள்ளார். அந்த நூடுல் ஷாப்பின் உரிமையாளர் அந்தோணியின் அகால மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பன்றிக்கறி நூடுல்ஸ், ஸ்பிரிங் ரோல், ஒரு பீரோடு சேர்த்து மலிவான பிளாஸ்டிக் ஸ்டூலில் உட்கார்ந்து ஒபாமாவும் அந்தோணி போர்தைனும் சேர்ந்து இரவு உணவு சாப்பிடும் புகைப்படம் இப்போது உலகம் முழுக்கப் பிரபலமாகியுள்ளது. சிஎன்என் தொலைக்காட்சியில் இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பானது. இந்தக் கடையில் தரப்படும் பன் சாவும், மீன் சாஸ் குழம்பும் அந்தோணிக்கு மிகவும் விருப்பமானது என்கிறார் உரிமையாளர்.

உயரம் குறைந்த ப்ளாஸ்டிக் ஸ்டூல், மலிவான ஆனால் ருசியான நூடுல்ஸ், சில்லிடும் ஹனோய் பீர். இப்படித்தான் நான் அந்தோணியை நினைவுகூர்வேன். அவர் நமக்கு உணவைப் பற்றிக் கற்பித்தார். முக்கியமாக நம் எல்லாரையும் ஒருமைப்படுத்தும் உணவின் திறனைக் கற்பித்தார். அறியாதது குறித்த பயத்தை அவர் உணவின் வழியாக நீக்கினார். நாம் அவரை மறக்கவே முடியாது. இதுதான் ஒபாமா அவருக்கு விடுத்திருக்கும் அஞ்சலிக் குறிப்பு.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x