

ம
யிலாப்பூரைத் தமிழகத்தில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். இதில் ஆச்சரியம் இல்லை. இன்று சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியாகிவிட்ட இந்த ஊரை கிரேக்கர்களும் ரோமானியர்களும் ஒன்றாம் நூற்றாண்டிலேயே அறிந்திருந்தார்கள் என்பது வியப்புக்குரியது. இந்த வியப்பை மேலும் அதிகரிக்கவைக்கிறது அங்கே இருக்கும் கென்னடி தெரு. லஸ் கார்னரையும் முசிறி சுப்ரமணிய ஐயர் சாலையையும் (ஆலிவர் ரோடு) கென்னடி தெரு இணைக்கிறது. கென்னடி என்றவுடன் முதலில் நமக்கு நினைவுக்கு வருபவர், 1963-ல் சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடிதான். அவருக்கும் இந்தத் தெருவின் பெயருக்கும் என்ன தொடர்பு?
மயிலாப்பூர் தமிழகத்தின் கலாச்சார மையம். சென்னையின் தொன்மையான பகுதிகளில் ஒன்று. மயில்கள் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பது மருவி மயிலாப்பூர் ஆகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. பண்டைய ஜெர்மானிய வரைபடத்திலும் கிரேக்க வரைபடத்திலும் இந்தப் பகுதி ‘மலியர்பா’ என்று குறிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் ப்ளேஃபேர் எனும் ஸ்காட்லாந்து வரலாற்றாய்வாளர் இந்தப் பகுதியை ‘மெலியபோர்’ என்று குறிப்பிட்டுள்ளார். ரோமானியர்களும் கிரேக்கர்களும் அரேபியர்களும் இங்கு வந்து வணிகம் புரிந்துள்ளனர். இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனித தாமஸ் கி.பி. 68-ல் மலபாரிலிருந்து மயிலாப்பூருக்கு வந்திறங்கியுள்ளார்.
மானுடவியலாளர் எட்கர் தர்ஸ்டன் கே. ரங்காச்சாரி என்பவருடன் இணைந்து எழுதியிருக்கும் ‘தென்னிந்தியச் சாதிகளும் பழங்குடிகளும்’ (Castes and tribes of southern India) எனும் புத்தகத்தின் படி, 17-ம் நூற்றாண்டில் செம்பரம்பாக்கம் பகுதியில் 4,000-க்கும் அதிகமான கன்னடர்கள் இருந்துள்ளனர். அவர்கள் கன்னடம் பேசும் லிங்காயத்து சமூகத்தின் ஒரு பிரிவினர். அவர்கள் மைசூரை ஆண்ட சிக்க தேவராயருக்கு எதிராகப் பெரும் கலகம் செய்துள்ளனர்.
ஆத்திரமடைந்த தேவராய, லிங்காயத்து சமூகத்தினரின் மீது மனிதாபிமானமற்ற முறையில் கொடிய தாக்குதலை நிகழ்த்தியுள்ளார். அதில் ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர். எஞ்சியவர்கள் அங்கிருந்து தப்பி நாடோடிகளாக மலையிலும் வனத்திலும் திரிந்துள்ளனர். பின்பு தாங்கள் வசித்த வனத்தின் ஊடாகவும் மலையின் ஊடும் கடந்து செல்லும் படைவீர்களுக்குத் தயிர் விற்றுள்ளனர். பின்பு அவர்கள் மெல்ல நகர்ந்து நாளடைவில் செம்பரம்பாக்கத்தில் குடியமர்ந்துள்ளனர்.
அப்போது மந்தைவெளி என்பது ஒரு மேய்ச்சல் நிலம். மாடுகள் அங்கு மிகுந்து இருந்துள்ளன. மேலும் மயிலாப்பூர் பிராமணர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. தயிர் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், அங்கு வசித்த பிராமணர்களுக்குத் தயிர் விற்பதற்காக அவர்கள் மயிலாப்பூரில் இப்போது இருக்கும் கென்னடித் தெருப் பகுதியில் குடியேறியுள்ளனர். தயிர் நிரம்பிய மண் பானைகளை நார்க் கூடைகளில் வைத்து, அதைக் கறுப்புக் கம்பளியால் சுற்றி, அதைத் தலையில் சுமந்தபடி தெருத் தெருவாகச் சென்று தயிரை விற்பது அவர்களின் அன்றாட வாடிக்கை.
வெயில் காலம், குளிர் காலம் என எந்தக் காலமாக இருந்தாலும் அவர்கள் தலையில் தயிர்ப் பானையுடன் அதிகாலையிலேயே தயிர் விற்கத் தொடங்கிவிடுவார்கள். தலையிலும் தோளிலும் தயிர் பானையைக் காவடியைத் தூக்கி செல்வது போல் சுமந்து செல்வதால், அவர்கள் காவடிகர்கள் என்றும் அப்போது அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்று அவர்கள் வசித்த பகுதி கால ஓட்டத்தில் வெகுவாக மாறிவிட்டது. ‘குன்வடி’ என்று முதலில் அழைக்கப்பட்ட அவர்கள் வாழ்ந்த தெரு மருவி ‘கன்னடி’ என்றாகி, இப்போது ‘கென்னடி’ என்றாகி உள்ளது. ஆனால், அங்கு வசித்த கன்னடர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இன்று அந்தத் தெருவில் கன்னடர்களின் சுவடுகூட இல்லை.