

கதவுகள், கடந்துபோன காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள். வீட்டைப் பூட்டிவைக்க உதவும் மரப் பலகை என்றில்லாமல் கதவுகளில் கலை வண்ணத்தைக் காட்டினார்கள் தச்சர்கள். இந்தியாவில் ஒவ்வொரு பக்கத்துக்கும் வெவ்வேறுவிதமான வேலைப்பாடுகள் கதவில் செதுக்கப்பட்டு வந்துள்ளது.
தேர்களில் புராணக் கதைகளைச் செதுக்குவதுபோலக் கதவுகளிலும் கல்யாண ஊர்வலங்களைச் செதுக்கும் நடைமுறையும் இருந்தது. கடவுளரின் உருவங்கள், அன்னப் பறவை, மயில், யானை போன்றவற்றின் உருவங்களும் கதவுகளில் செதுக்கப்பட்டு வந்தது. இன்றைக்குக் கதவுகளில் புடைப்புச் சிற்பங்கள் செய்ய இயந்திரங்கள் வந்துவிட்டன. முன்பெல்லாம் எல்லாம் கைளில்தான்.
இன்றைக்குச் செய்வதைக் காட்டிலும் நுட்பத்துடன் இருக்கும். இம்மாதிரியான கதவுகள் இன்றைக்கு அருகிவிட்டன. பழமையான சில வீடுகளில் மட்டும்தான் இம்மாதிரிக் கதவுகளைப் பார்க்க முடியும். அம்மாதிரியான ஒரு கதவு சென்னை பூந்தமல்லி தாண்டி குத்தம்பாக்கத்தில் இருக்கிறது.
அதை எழுத்தாளர் என்.ஸ்ரீராம் ஒளிப்படம் எடுத்தும் தன் முகப் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். நுட்பமான வேலைப்பாடுகள், கைப்பிடிகள், நாதங்கிகள் ஆகியவற்றுடன் இருக்கிறது அந்தக் கதவு. அந்தக் கதவில் உள்ள அன்னப் பறவையின் புடைப்புச் சிற்பம் யாரோ அழைத்ததற்காகச் செவிமடுத்தது போலிருக்கிறது. கடந்துவிட்ட காலத்தின் விளியாக இருக்கலாம் அது.