கலைடாஸ்கோப் 08: இனிமைக்குக் கூடுதல் இனிமை

கலைடாஸ்கோப் 08: இனிமைக்குக் கூடுதல் இனிமை
Updated on
2 min read

ன்றைக்கு இருப்பதுபோல் யூடியூபும், அதில் பாடியவர்களும் அன்றைக்குப் பிரபலமாகவில்லை. தமிழ்த் திரைப்படப் பாடல்களை பாடிவருபவர்களில் இன்றைக்குக் கவனம் பெற்றுள்ள பிரதீப்பும் கல்யாணியும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு பேண்ட் வழியாகப் பாடியவர்களில் முக்கியமானவர்கள்.

சந்தோஷ் நாராயணின் இசையில் பாட ஆரம்பித்த பிறகே இவர்கள் இருவரும் பரவலாக அறியப்பட்ட பாடகர்களாக மாறினார்கள். இருவரும் இணைந்து பாடிய பாடல்களில் ‘குக்கூ’ படத்தில் ‘ஆகாசத்த நான் பார்க்கிறேன்’, ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் ‘காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே’, ‘அட்டக்கத்தி’ படத்தில் ‘ஆசை ஒரு புல்வெளி’ உள்ளிட்டவை புகழ்பெற்றவை.

கல்யாணி, பிரதீப்புடன் ஹர்ஷிதா கிருஷ்ணன், வித்யா விஜய், கிதாரிஸ்ட் கேபா ஜெர்மையா ஆகியோர் இணைந்து ஹார்மோனைஸ் புராஜெக்ட் (Harmonize Projekt) என்ற பேண்டாக இணைந்து பாடி வந்தார்கள். அப்போது கேரளத்தைச் சேர்ந்த ‘ரோஸ்பவுல்’ டிவி அலைவரிசை, தங்கள் அலைவரிசையில் பாட இவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. தமிழகத்தைவிட கேரளத்தில் பேண்ட்கள், புதிய இசை முயற்சிகளுக்கான வரவேற்பும் அதற்கு முன்னணி நிறுவனங்கள் அளிக்கும் ஆதரவும்அதிகம்.

அந்த வகையிலேயே ‘ஹார்மோனைஸ் புராஜெக்ட்’ குழுவும் அழைக்கப்பட்டிருந்தது. அழைத்தது கேரள நிறுவனம் என்றாலும், அவர்கள் பாடியதில் பெருமளவு தமிழ்த் திரைப்படப் பாடல்களே. அதிலும் பெரும்பாலானவை இளையராஜாவின் புகழ்பெற்ற மெலடிகளே.

‘உறவுகள் தொடர்கதை’, ‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘கண்ணன் வந்து பாடுகிறான்’, ‘பருவமே புதிய பாடல் பாடு’, ‘பூட்டுக்கள் போட்டாலும்’, ‘நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி’ ஆகியவற்றுடன் ஏ.ஆர். ரஹ்மானின் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ பாடலும் அவர்கள் இசைத்ததில் அடக்கம்.

அன்றைக்கு யூடிபில் ஹிட்டான இவர்களுடைய பாடல்கள், ஏற்கெனவே ஹிட்டான பாடல்களுக்குப் புது வடிவத்தைத் தந்தது மட்டுமல்லாமல், பழைய பாடல்களை ரசிப்பதற்கு இன்னொரு காரணத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தன. ஆண்டுகள் பல கடந்தாலும் ஹார்மோனைஸின் பாடல்கள் இன்றைக்கும் பலரால் ரசிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அன்றைக்கு யூடியூபில் ஆயிரக்கணக்கில் ஹிட் ஆவதே கஷ்டமாக இருந்த நிலையில், இன்றைக்கு ஹார்மோனைஸ் புராஜெக்ட்டின் பாடல்கள் லட்சக்கணக்கில் ஹிட்டாகியுள்ளன.

வழக்கமான பின்னணி இசைக் கருவிகளுடன் இவர்களுடைய பாடல்கள் இசைக்கப்படவில்லை. கிதார், டிரம்ஸ் போன்ற ஓரிரு இசைக் கருவிகளுடன் பாடகர்களின் திறமையை மட்டுமே நம்பிப் பாடப்பட்ட பாடல்கள் அவை. அதுவே இந்தப் பாடல்களின் தனித்தன்மையும்கூட. பொதுவாகப் பின்னணி இசை இல்லாமல் பாடப்படும் பாடல்கள் ‘அக்கபெல்லா வெர்ஷன்’ எனப்படும். ஹார்மோனைஸ் புராஜெக்டின் பாடல்களைப் பாதி அக்கபெல்லா வடிவம் எனலாம்.

ரோஸ்பவுல் அலைவரிசையில் பாடியபோது இவர்கள் குழுவுக்குப் பெயர்கூட இல்லை. மிகவும் இனிமையான பாடல்களை இந்தக் குழு பாடிய நிலையில், அதற்குப் பிறகு இவர்கள் வரித்துக்கொண்ட ‘ஹார்மோனைஸ் புராஜெக்ட்’ என்ற பெயர் மிகவும் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.

கல்யாணியும் பிரதீப்பும் இன்றைக்கு அறியப்பட்ட பாடகர்களாகிவிட்டாலும், அவர்களது குரலில் 80களின் ஹிட் பாடல்களைக் கேட்பது தனி சுகம்தான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in