

வ
ட இந்தியப் பலகாரக் கடைகள் ஆதிக்கம் செலுத்தி வரும் காலத்தில் பொருள் விளங்கா உருண்டை, அதிரசம், சோமாசு, குழிப்பணியாரம், ரவா உருண்டை, கை முருக்கு, அரிசி முருக்கு, தேன்மிட்டாய், கம்மர்கட், தட்டை, எல்லடை போன்ற பாரம்பரிய பலகாரங்களுக்காக ஒரு கடை, பாண்டிச்சேரியில் இயங்கிவருகிறது. அதை நடத்திவருபவர் அனிதா.
இந்தக் கடையின் மற்றுமொரு சிறப்பு, இது முழுக்க முழுக்கப் பெண்களால் நடத்தப்படுகிறது இந்தக் கடை. “கையிலிருந்த எட்டாயிரம் ரூபாயுடன் நெல்லித்தோப்பில் வாடகை கட்டிடத்தில் வெங்கடேஸ்வரா புட்ஸ் என்று சிறிதாகப் பலகாரம் செய்யும் கடையைத் தொடங்கினோம். முதலில் பெண்கள் 5பேர் வேலை செய்யத் தொடங்கினோம்.
எல்லாக் கடைகளைப் போல் வழக்கமான இனிப்பு, பலகாரம் செய்யாமல் பாரம்பரிய பலகாரம் செய்ய முடிவு எடுத்தோம். நாளாக, நாளாக வீட்டு விசேஷங்களுக்கும் வாங்கத் தொடங்கினர். விஷேயங்களில் தட்டில் வைக்கப் பாரம்பரிய பலகாரங்களை வாங்கத் தொடங்கினர். அதையடுத்து கூடுதலாகப் பெண்களை வேலைக்கு எடுத்தோம். இப்போது பெண்கள் 40பேர் வேலைசெய்கிறார்கள்” என்கிறார் அனிதா.
பெண்களே பணிபுரிவதால் வீட்டுக்குச் செய்வதுபோல் பக்குவமாக, சுவை மாறாமல் செய்துவருகிறார்கள். “கடையில் பலகாரங்களைக் கண்ணாடி ஷோகேஸ் செய்து பிரம்மாண்டமான கடை பிடித்து விற்றால் வருவாய் வருமே என்று நண்பர்கள் யோசனை சொன்னார்கள். அதில் எங்களுக்கு விருப்பமில்லை. தரத்துடன் பாரம்பரியமும் இருந்தால் நிச்சயம் வரவேற்பு கிடைக்கும்” என நம்பிக்கை விதைக்கிறார் அனிதா. அதற்குப் பலனும் கிடைத்துள்ளது.