

இ
ந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இந்தியாவின் சில பகுதிகளுக்கு உடனடியாகச் சுதந்திரம் கிடைக்கவில்லை. அவற்றுள் ஒன்று புதுச்சேரி. இன்று ஒருங்கிணைந்த இந்தியாவின் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றாக இருக்கும் இதற்கு 1954-ல் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் அதற்கும் 10 ஆண்டுகள் கழித்துதான் பிரெஞ்சு நாடாளுமன்றம் புதுச்சேரி இந்தியாவின் ஒரு பகுதி என்பதை முறையாக அங்கீகரித்திருக்கிறது. அந்த அளவுக்கு புதுச்சேரி அவர்களுக்குப் பிடித்த பகுதியாக இருந்திருக்கிறது. இந்தப் பிரியத்தை புதுச்சேரியின் தலைநகரகான பாண்டிச்சேரியின் நகரமைப்பின் மூலம் இன்றும் உணர்ந்துகொள்ள முடியும்.
புதுச்சேரி மக்களுக்கும் பிரெஞ்சுக் கலாச்சாரத்தின் மீது ஈடுபாடு அதிகம். அதன் தனித்துவனத்தை பாண்டிச்சேரிக்குள் நுழையும் ஒவ்வொருவரும் உணர்வர். புதுவை மக்கள் பிரான்சை நேசிக்கிறார்கள். பிரான்ஸ் வாழ்வைப் பிரதிபலிக்கிறார்கள். அந்தக் கலாச்சாரத்தை நகல் எடுத்து வாழ்கிறார்கள். ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தினரால் இரவு உணவுக்குப் பின் குடும்பத்தோடு அமர்ந்து வீட்டிலேயே மது அருந்த இன்றும் புதுவையில் முடியும். தமிழகத்தில் இந்தப் பழக்கம் பரவலாக இல்லை. அதுபோல அவர்களிடம் பிரான்சுக்கு செல்ல வேண்டும் என்ற கனவு இன்றும் உள்ளது.
பிரான்சின் மீதான புதுச்சேரியின் காதலைத் தெரிந்துகொள்ள நாம் சுமார் 354 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். 1674-ல் பிரான்ஸ் முதல் குடியிருப்பைப் புதுச்சேரியில் அமைத்தது. அப்போது புதுச்சேரியை அங்கு ஓடிய கால்வாயின் இருபுறமும் இருக்குமாறு அவர்கள் வடிவமைத்தனர். கால்வாயின் ஒருபுறம் பிரெஞ்சுக்காரர்கள் குடியிருக்க வில் ப்ளான்ஷ் (Ville Blanche) உருவாக்கினர். இது வெள்ளை நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. கால்வாயின் மறுபுறம் புதுச்சேரிக்காரர்கள் குடியிருக்கவில் நாய்ர் (Ville Noire) உருவாக்கினர்.
பிரான்ஸ்நாட்டின் ராணு வீரர்களூம் அரசு அதிகாரிகளும் வியாபாரிகளும் மக்களும் அந்த வில் ப்ளான்ஷியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்தனர். 1954-ல் புதுச்சேரியை பிரான்ஸ் இந்தியாவிடம் ஒப்படைத்தபோது, அங்கு வசித்த பிரெஞ்சுக்காரர்களுள் பலர், பிரான்ஸ் குடியுரிமையுடன் அங்கேயே வாழத் தீர்மானித்தனர். இது புதுச்சேரி மீது பிரெஞ்சுக்காரர்களுக்கு உள்ள மோகத்துக்குச் சிறந்த உதாரணம். புதுச்சேரியில் பிரெஞ்சு இன்றும் ஆட்சி மொழியாக இருப்பதன் காரணமும் அதுதான்.
சுற்றுலாவுக்கு வருபவர்களைக் கவர்ந்து இழுக்கும் பாண்டிச்சேரி பகுதிகளுள் ஒன்று வில் ப்ளான்ஷ். பிரெஞ்சுப் பாணி வீடுகள். அழகான சாலைகள், தெரு விளக்குகள் எனப் பிரெஞ்சுப் பாரம்பரியத்தை இந்தப் பகுதி நினைவூட்டும். முன்புறம் சற்றே சரிந்த தாழ்வாரம் கொண்ட மாளிகை வீடுகளை தமிழ் சினிமாவில் அடிக்கடி பார்த்திருப்போம். சமீபத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ‘தங்கமே’ பாடல் இங்கேதான் படமாக்கப்பட்டது.
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்தி, மலையாளம், ஹாலிவுட் உள்ளிட்ட பல சினிமாக்கள் இந்த வில் ப்ளான்ஷில் படமாக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியின் சாலைகள் சரியாக 90 டிகிரியில் ஒன்றுடன் ஒன்று இணைகின்றன. சொல்லப்போனால், இந்தப் பகுதிக்குள் நுழைந்தால் பிரான்ஸுக்கே போய்விட்ட மாதிரியான அனுபவம் நமக்குக் கிடைக்கும்.
காற்று சுழன்று தவழும் கடற்கரை சாலையில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டிடங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. பிரெஞ்சுக் கட்டிட கலை அழகுக்கும் அவர்களின் ரசனைக்கும் சான்றாக அந்தச் சாலையில் உயர்ந்து நிற்கும் போர் நினைச் சின்னமும் 88 அடி உயரக் கலங்கரை விளக்கமும் பிரான்ஸ் தூதரகமும் நமக்கு இன்றும் பிரமிப்பு ஊட்டுகின்றன. இந்தக் கட்டிடங்களுக்கு இணையாக நீளும் சாலையில் கடற்கரை காற்றை வாங்கியபடி நடை போடுவது ஒரு நல் அனுபவத்தை அளிக்கும்.
வில் நாய்ர் பகுதி தமிழ் குவார்ட்டர் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு தெருக்கள் குறுகியதாக உள்ளன. பாரம்பரிய வடிவில் கட்டப்பட்ட சில பழைய வீடுகள் மட்டுமே இன்று அங்கு உள்ளன. மற்ற பழைய வீடுகள் நகரமயமாக்கலின் வளர்ச்சியில் மூழ்கி உருமாறிவிட்டன. 1738-ல் கட்டப்பட்ட ‘தி மேன்சன் ஆஃப் ஆனந்தரங்கம் பிள்ளை’ இன்றும் அங்கு உள்ளது. பிரெஞ்சுக் கட்டிடக்கலையும் தமிழ்க் கட்டிடக்கலையும் இணைத்து இந்தக் கட்டிடம் உருவாக்கப்பட்டது.
ஆனந்தரங்கம் பிள்ளை 52 வயது வரைதான் உலகில் வாழ்ந்துள்ளார். 1709-ல் பிறந்த அவர் 1761-ல் மறைந்துவிட்டார். அவர் பிரெஞ்சு ஆளுநரான துய்ப்ளெக்சின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். இவரது நாட்குறிப்புகள்தாம் புதுசேரியில் பிரஞ்சு ஆட்சியிருந்த காலகட்டத்துக்கான முக்கியமான வரலாற்று ஆவணம்.
வில் ப்ளான்ஷ் பகுதியில் வசிக்கும் பிரெஞ்சுக்காரர்களின் வாழ்வை மதுவும் உணவும்தாம் நகர்த்தி செல்கின்றன. தொழில் என்ற ஒன்று அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு ஓய்வூதியப் பணம் பிரான்ஸ் அரசால் வழங்கப்படுகிறது. அவர்கள் வசிப்பதற்கு அரண்மனை போன்ற வீடுகள் உள்ளன. ஒய்வும் வசதியும் வளமும் இருந்தாலும், அவர்களின் வாழ்வு ஒருவகையில் சபிக்கப்பட்ட ஒன்றுதான்.