

ம
ழைக் காலம் தொடங்கிவிட்டது. ஆனால், சென்னையில் மட்டும் மழைக்கான முஸ்தீபுகள் மட்டும்தான் தொடங்கியிருக்கிறது. வரும் வாரங்களில் மழை கூடுதலாகப் பெய்யும் வாய்ப்புள்ளது. மழை வருவது நல்ல விஷயம்தான். என்றாலும் மழை நமது வீட்டுக் கட்டுமானத்தில் சில சேதங்களை விளைவிக்க வாய்ப்பும் இருக்கிறது.
நம் வீட்டில் சிறிய அளவிலான விரிசல் இருப்பின், அதுவும் மழைக் காலத்தில்தான் தெரியவரும். இதனால் இக்காலத்தில் நமது உடைமைப் பொருள்களின் பராமரிப்பில் நம் கவனம் திரும்பும். ஒருவிதத்தில் மழைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
மழைக் காலங்களில் முக்கியமாக நம் வீட்டுக் கட்டுமானத்தில் உள்ள குறைகளைக் கவனிக்க வேண்டும். முற்றத்தில் மழை நீர் செல்வதற்கான வழிமுறை உள்ளதா எனச் சரி பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் முற்றத்தில் நீர் தேங்கினால் பலவிதமான கிருமிகள் உற்பத்தியாகி நோய் பரப்பக்கூடும். அதனால் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
தேங்கியிருந்தால் உடனடியாக அதை அப்புறப்படுத்த வேண்டும். வீட்டுக் கட்டுமானத்தில் விரிசல் இருந்தால் அதை உடனடியாகப் பார்த்துச் சரிசெய்ய வேண்டும். மொட்டை மாடியில் மழை நீர் வெளியேறும் துளைகளில் அடைப்பு இருந்தால் நீக்க வேண்டும்.
பொதுவாக, மழைக் காலங்களில் நம் வீட்டில் உள்ள மரப் பொருட்களில் பூச்சிகள் மற்றும் செல்லரிப்பு ஆகியவை ஏற்படக்கூடும். அதனால் மரப் பொருட்களைக் கவனமாகப் பராமரிக்க வேண்டும். இம்மாதிரியான பாதிப்புகளைக் கிராம்பு அல்லது கற்பூர வில்லைகள் கொண்டு நீக்கலாம்.
பயன்படுத்தாத மரப் பொருட்களை பிளாஸ்டிக் உறைகொண்டு மூடினால் இதுபோன்ற பாதிப்புகள் வராமல் இருக்கும். மழைக் காலங்களில் மரச் சாமன்களைச் சுத்தம் செய்வது அவசியம். மேஜை, நாற்காலிகள் போன்ற மரப் பொருட்களுக்கு உறை இடுவது அவசியம்.
மழைக் காலத்தில் துணிவைக்கும் அலமாரிகளைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். ஈரப்பதத்துடன் இருந்தால் துணிகளில் பூஞ்சைகள் படிய வாய்ப்பிருக்கிறது. மழைக் காலத்தில் துணிகளை உலர்த்துவது சிரமமான காரியம்.
சரியாக உலராத துணிகளை அலமாரிகள் உள்ளே மடித்துவைப்பதால் துர்நாற்றம் வரும். இதைத் தவிர்க்க ரசக் கற்பூரங்களைப் போட்டு வைக்கலாம். துணிகளை வெயிலில் காய வைக்க முடியவில்லை என்றால் முடிந்த அளவு மின்விசிறியிலாவது உலர வையுங்கள்.
மழைக் காலங்களில் மின்சாதனப் பொருட்களை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். சுவிட்சு போர்டுகளைத் தொடும்போது கவனமாக இருக்க வேண்டும். வீட்டு மின்சாதனங்களையும் கவனமாகக் கையாள வேண்டும். தண்ணீர் இறங்காமல் பார்த்துகொள்ள வேண்டும்.