

வீ
ட்டைக் கட்டும்போதே எந்தெந்தப் பகுதிக்கு எந்தெந்த டைல்களைத் தேர்வுசெய்ய வேண்டும் என முடிவெடுப்பது வீட்டின் அழகை மட்டுமின்றி, அதில் வசிக்க உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கான வசதியையும் அதிகரிக்கும். பொதுவாக வரவேற்பறையில் பயன்படுத்த அதிக ஸ்திரத்தன்மையும் நீடித்த ஆயுளும் கொண்ட டைல்களே தேவை. அந்த வகையில் போர்சிலின் (Porcelain) ரக டைல்கள் சிறந்த தேர்வாக இருக்கும்.
பரவலாகப் பயன்படுத்தப்படும் செராமிக் டைல் விலை குறைவானது. அதே நேரம் வீட்டை அழகாகக் காட்டவும் செய்யும். போர்சிலின் டைல் அளவுக்கு ஈரத்தை உறிஞ்சாது. சமையலறை, குளியலறையில் இதைப் பயன்படுத்த முடியும். பூஜை அறையின் பக்கவாட்டுச் சுவர்களிலும் பயன்படுத்தலாம். குறைவான விலையில் கிடைப்பதால், பட்ஜெட் வீடுகள் கட்டுவோர் அதிகம் பயன்படுத்தும் டைல் வகையாக செராமிக் உள்ளது.
அழகான ஆபரணத்தைக் குறிப்பிட உபயோகிக்கப்படும் பெயரைக் கொண்டிருக்கும் நேச்சுரல் ஸ்டோன் ரக டைல் பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகக் காட்சியளிக்கக்கூடியது. ஆனால், நீடித்து உழைக்கக்கூடியது. வீட்டுக்குள் மட்டுமல்ல; வெளிப்புறப் பகுதிகளிலும் சுற்றுச்சுவரை ஒட்டிய நடைபாதை, தோட்டத்துக்கான வழித்தடங்களிலும் பயன்படுத்த ஏற்றது. நடுத்தர விலைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நேச்சுரல் ஸ்டோன் டைல், அதிக வெப்பம், பனிப்பொழிவைத் தாங்கி நிற்கும் தன்மையுடையது. மற்ற ரக டைல்களைவிட இதன் ஆயுள் அதிகம். இயற்கையான முறையில் உருவாக்கப்படுவதால், இந்த ரக டைல்களில் உருவ அல்லது நிற ஒற்றுமை பெரும்பாலும் இருக்காது.
அந்தக் காலம் முதலே பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு ரகம் மொசைக் டைல் வகைகள். வீட்டுக்குள்ளே இயற்கைக் காட்சிகள் அல்லது ஓவியங்களை மாட்டி வைப்பதற்குப் பதிலாக, சுவரில் பதிக்கும் கற்கள் மூலமாக அவற்றை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டதுதான் மொசைக் டைல். காலச் சுழற்சி, தொழில்நுட்பத்தின் வளர்ச்சி போன்றவை மொசைக் டைல் தயாரிப்பிலும் மாற்றத்தைக் கொண்டுவந்துவிட்டது. இந்த வகை டைல்கள் வழுக்கும் தன்மை உடையவை. எனவே, குளியலறையின் தரைப்பகுதிக்கு இவற்றை பயன்படுத்துவது ஏற்றதல்ல. அதே நேரம் பூஜை அறையில் கடவுள் படங்களை ஓவியம் போல் வடிவமைக்கவும், சமையல் அறையில் இயற்கைக் காட்சிகளை உருவாக்கவும் இந்த மொசைக் டைல் ஏற்றது.