

உ
ண்ண உணவு. உடுத்த உடை. வாழ்வதற்கு ஒரு வீடு. இந்த அடிப்படை வசதிகள்கூடக் கிடைக்காத விளிம்புநிலை மக்கள் சமூகத்தில் ஏராளமானோர் இருக்கின்றனர். வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் இதுபோன்றவர்களின் வாழ்வாதாரம் மிகப் பெரிய கேள்விக்கு உள்ளாகிறது. குறிப்பாக, தங்களின் வீடுகளை அவர்கள் இழப்பது பேரிடியாக விழுகிறது.
2015 மழை வெள்ளத்தால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும் உடையும் தந்து சமய சஞ்சீவியாக உதவிக்கரம் நீட்டினார்கள் பலர். ஆனால், வீடிழந்தவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. வெள்ளத்தில் வீடிழந்த மக்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்னும் நோக்கத்துடன் செயல்படுகிறது ஸ்ரீ ராமானுஜா மிஷன் டிரஸ்ட். ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டை முன்னிட்டு, சமூகத்தில் நலிவடைந்த, பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு 1,000 வீடுகளைக் கட்டித்தர அந்த டிரஸ்ட் முடிவெடுத்துள்ளது.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் வெள்ளத்துக்கோட்டை அருகில் உள்ள விடுதலை நகர் இருளர் குடியிருப்பில் அரசு பட்டா இடத்தில் 11 வீடுகளைக் கட்டித் தந்திருக்கிறது. இந்த வீடுகள் இலவசக் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டவை.
குடியிருப்பில் அமைந்துள்ள 11 வீடுகளும் காற்று வசதியுடன் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேர்த்தியாகவும் உறுதியாகவும் கட்டித் தரப்பட்டுள்ளன என்கிறார் இருளர் குடியிருப்புச் சங்கத்தின் தலைவர் முரளி. 26 அடி நீளம் 13 அடி அகலம் கொண்ட இந்த வீடுகளில் முகப்பு அறை, படுக்கை அறை, சமையல் அறை, குளியலறை, கழிப்பிட அறை போன்ற அடிப்படை வசதிகளைப் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. தரமான கட்டுமானப் பொருட்களால் முன்ஜோடிக்கப்பட்ட (Pre Fabricated) முறையில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. புயல், வெள்ளம் நிலநடுக்கம் போன்றவற்றால் பாதிக்கப்படாத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது இவற்றின் சிறப்பம்சம்.
இது போன்ற இலவசக் குடியிருப்புகள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்கெனவே இதே அறக்கட்டளையால் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நடவடிக்கையைப் பார்த்து சமூக அக்கறையுடைய வசதி படைத்தவர்கள், தாங்களாக முன்வந்து நலிவடைந்த எளிய மக்களுக்கு இதுபோன்று ஆளுக்கொரு வீடு கட்டித் தர முன் வரவேண்டும் என்பதே இந்த அமைப்பின் லட்சியம்.
“தன்னார்வ நிறுவனங்களோ வசதிபடைத்தவர்களோ 50 ஆயிரம் ரூபாய் திரட்டிக் கொடுத்தால் போதும், அரசின் ஒத்துழைப்பைப் பெற்று ஓர் இருளர் குடும்பத்துக்கான வீட்டைக் கட்டிவிடலாம். நிறையப் பேருக்கு இந்த வசதி அரசின் திட்டத்தில் இருப்பதே தெரிவதில்லை” என்கிறார் இந்த முயற்சிக்குத் துணை நின்ற ‘எண்ணங்களின் சங்கமம்’ அமைப்பாளர் பிரபாகர்.