எதனால் அது ரியல் எஸ்டேட்?

எதனால் அது ரியல் எஸ்டேட்?
Updated on
2 min read

ரி

யல் எஸ்டேட் என்கிறோமே அது என்ன? தோராயமாகப் பலருக்கும் தெரிகிறது. என்றாலும் இன்னும் கொஞ்சம் தெளிவாக்கிக் கொள்ளலாமா?

எஸ்டேட் என்றால் என்ன என்பது குறித்து அந்தக் கால சினிமாக்களைப் பார்த்தவர்களுக்கு ஒருவித பிம்பம் இருக்கும். ‘‘ஜமீந்தாருக்கு நாலு டீ எஸ்டேட் இருக்கு’’, ‘’அவர் எவ்வளவு பெரிய எஸ்டேட்டுக்குச் சொந்தக்காரர் தெரியுமா?’’ என்பது போன்ற வசனங்களைக் கேட்டிருப்பார்கள். பரந்து விரிந்த திறந்தவெளி வளாகத்தைத்தான் அப்படி எண்ணிக் கொள்வார்கள்.

அது ஒருபுறம் இருக்க, ரியல் எஸ்டேட் என்பது நிலமற்ற அடுக்ககமா வீடா, எல்லாமா? அதன் நிலத்தின் ஒரு பகுதியில் விளைச்சல் காணப்பட்டால் அதுவும் ரியல் எஸ்டேட் என்பதில் அடங்குமா?

ரியல் எஸ்டேட் என்பது நிலத்தையும் அதிலுள்ள கட்டிடங்களையும் குறிக்கிறது. அந்த நிலத்தில் ஏதாவது விளைந்தால் அதுவும் ரியல் எஸ்டேடில் அடங்கும். அங்குள்ள நீர், தாதுப் பொருட்கள் ஆகியவையும் ரியல் எஸ்டேட்டின் ஒரு பகுதிதான்.

எனினும், நடைமுறையில் ரியல் எஸ்டேட் எனும் வார்த்தைகள் ஒரு வணிகம் என்ற கோணத்தில்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது நிலங்கள், வீடுகள், பிற கட்டிடங்கள் போன்றவற்றை வாங்குவது, விற்பது மற்றும் வாடகைக்கு விடுவது ஆகியவற்றைச் செய்யும் தொழில்தான் ரியல் எஸ்டேட் எனப்படுகிறது.

எஸ்டேட்டில் உண்மையான எஸ்டேட், பொய்யான எஸ்டேட் என்றெல்லாம் உண்டா என்ன? பிறகெதற்கு ‘ரியல்’ என்ற வார்த்தை?

லத்தீனில் Realis என்ற ஒரு வார்த்தை உண்டு. இதற்குப் பொருள் ‘உண்மையான’. கலை, தத்துவம் போன்றவை எண்ணப் போக்குகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், நிலம், வீடு போன்றவை ‘உண்மையானவை’ என்றும் கருதப்பட்டன. அதாவது யார் பார்த்தாலும் அவர்கள் கண்களுக்கு அந்த நிலமோ கட்டிட அளவோ ஒரே மாதிரிதான் இருக்கும்.

ரியல் எஸ்டேட் என்பது நிலத்தைப் பொறுத்தது. எந்த இரண்டு நிலமும் 100 சதவீதம் ஒரே மாதிரி இருக்காது. அதனாலும் ‘ரியல் எஸ்டேட்’ என்று இதைக் கூறுவதுண்டு என்கிறார்கள். தொட்டு உணரக்கூடிய சொத்துகளை Tangible assets என்பார்கள். அந்த விதத்தில் ‘ரியல் எஸ்டேட் ஒரு நிஜமான சொத்து’ என்று உணரப்படுகிறது.

‘ரியல் பிராபர்ட்டி’ என்பதை ‘ரியால்டி’ என்றும் கூறுவதுண்டு. இதன் மறுவடிவம்தான் ரியல் எஸ்டேட்.

‘ராயல் எஸ்டேட்’ என்பதுதான் காலப்போக்கில் ‘ரியல் எஸ்டேட்’ ஆகிவிட்டது என்பவர்களும் உண்டு. அதாவது ஒரு காலத்தில் தனது ஆட்சிக்கு உட்பட்ட அத்தனை நிலப்பகுதிகளுமே தனக்கானது என்று மன்னர்கள் நினைத்தனர்.

நிலம், சொத்துகள் போன்றவை நகர முடியாதவை. அவற்றின்மீதுள்ள அறைக்கலன்கள், கருவிகள், ஆடைகள் போன்றவை நிலத்தோடு இணைந்தவை அல்ல. எனவே, அவை ரியல் எஸ்டேட்டில் அடங்காது.

எஸ்டேட் என்றால் ஒருவர் சொந்தமாக்கிக் கொண்டுள்ள ஒரு பொருள் என்று அர்த்தம். அவர் இறந்து விட்டால் அவரது வாரிசுக்குச் செல்லும் என்பார்கள்.

அந்தக் காலத்தில் ஒருவர் வசிக்கும் வீடு, அவர் இறந்தவுடன் மனனருக்கே சென்றுவிடும். எனவே ‘எனக்குப் பிறகு என் மனைவி, மகன், மகள் இந்த வீட்டில் தங்கள் நீங்கள் அனுமதிக்க வேண்டும்’ என்று அரசுக்கு ஒரு கடிதம் எழுதுவார்கள்.

பிரிட்டனில் ரியல் எஸ்டேட் என்று கூறுவதில்லை. எஸ்டேட், எஸ்டேட் ஏஜண்ட் என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in