Last Updated : 12 May, 2018 11:52 AM

 

Published : 12 May 2018 11:52 AM
Last Updated : 12 May 2018 11:52 AM

பளபளக்கும் பிளாஸ்டிக் சாலை

நா

ம் வாங்கும் பொருட்களை ஒரு பிளாஸ்டிக் பைக்குள் அடைத்துவிடுவது போல் இயற்கை வளங்களால் சூழப்பட்டு இந்த பூமி தற்போது கோடிக்கணக்கான பிளாஸ்டிக் கழிவு பொருட்களால் சூழ்ந்துள்ளது. உலகம் முழுவதும் சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர அரசு அம்மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குக் கடந்த மார்ச் மாதம் முதல் தடை விதித்துள்ளது.

ஐம்பதாயிரம் டன் பிளாஸ்டிக்

தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையால் பிளாஸ்டிக் பைகள், தெர்மாக்கோல், பிளாஸ்டிக் தகடுகள், பிளாஸ்டிக் கரண்டிகள், பிவிசி பொருட்கள், பிளாஸ்டிக் தாள்கள் போன்ற 50 மைக்ரான் மேல் உள்ள பொருட்களுக்கு முழுவதுமான அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் ஒரு நாளைக்கு ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கப்படுகிறது.

முன்னதாக மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் ஆர். வாசுதேவன் பிளாஸ்டிக் கழிவை மறுசுழற்சி செய்து உறுதியான சாலைகள் போட முடியும் எனக் கண்டுபிடித்துள்ளார். இதற்காக அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

இதையடுத்து ஏற்கெனவே டன் கணக்கில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவை மறுசுழற்சி செய்து சாலைகள் போட வேண்டும் என்று மத்திய சாலை ஆராய்ச்சி மையம் மாநிலப் பொதுப்பணித் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து மறுசுழற்சி மூலம் சாலைகள் போட மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக இந்த நிதி ஆண்டுக்குள் ஐந்தாயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகொண்டு ஆயிரம் கிலோ மீட்டர் தூர சாலைகள் போடப்படவுள்ளன. இதேபோல் அடுத்த ஆறு ஆண்டுக்குள் ஐம்பதாயிரம் பிளாஸ்டிக் கழிவைக் கொண்டு பத்தாயிரம் கிலோ மீட்டர் சாலைகள் போடத் திட்டமிடப்பட்டுள்ளது.

செலவு மிச்சம்

பிளாஸ்டிக் கழிவைத் துகள்களாக மாற்றி அதை தார், கற்களுடன் சேர்த்து சாலைகள் போடுவதால் செலவு குறைவு எனச் சொல்லப்படுகிறது. ஒரு கிலோ மீட்டர் பிளாஸ்டிக் சாலைக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும். அதேபோல் பிளாஸ்டிக் துகள்களைக் கொண்டு போடப்படும் சாலைகள் பொதுவாகப் போடப்படும் தார்ச் சாலைகளில் இருந்து மாறுபட்டவையாக உள்ளது. மழைக் காலங்களில் தார் சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிடும். ஆனால், பிளாஸ்டிக் சாலைகள் தண்ணீரை உட்புகாமல் வைத்துக்கொள்வதால் சாலைகளில் குழிகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அதேபோல் அதிக எடைகொண்ட வாகனங்களின் அழுத்தத்தையும் இந்த பிளாஸ்டிக் சாலைகள் தாங்கிக்கொள்ளக்கூடியவை. இவ்வாறு போடப்படும் சாலைகளை மூன்று மாதத்துக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் ஏற்கெனவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாநில நெடுங்சாலைகள் பெரும்பாலும் பிளாஸ்டிக் துகள்களைக் கொண்டு போடப்பட்டு வருகிறது.

நிலத்தில் வீசப்படும் சாதாரண பாலித்தீன் பைகள் மக்குவதற்குக்கூட சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அதேபோல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மக்குவதற்கு சுமார் நானூறு வருடங்களுக்கு மேலாகும் என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து போடப்படும் சாலைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதில்லை; உறுதியான சாலைகளும் கிடைக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x