

வீ
டு வாங்குவதில் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக ஆவணங்கள் இருக்கின்றன. இவற்றில் பட்டா, தொடக்க சான்றிதழ், விற்பனை ஒப்பந்தம் போன்ற ஆவணங்களைப் போல ‘தடையில்லாச் சான்றிதழும்’ (No Objection Certificate) முக்கியமாக இருக்கிறது. ‘என்ஒசி’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த ஆவணம் வீடு வாங்குபவரைவிட ரியல் எஸ்டேட் கட்டுநருக்கு மிகவும் முக்கியமாக இருக்கிறது. வாங்கும் வீடு எந்தச் சட்டப் பிரச்சினையும் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்துகொள்ள ‘தடையில்லாச் சான்றிதழ்’ அவசியமாக இருக்கிறது.
ஒரு திட்டத்தின் கட்டுமானத்தைத் தொடங்கும்முன், ஒரு கட்டுநர் 19 துறைகளில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். நீர், மின்சாரம், தீயணைப்பு, சுற்றுச்சூழல், விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட துறைகள் இதில் அடக்கம். இந்தத் துறைகளிடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற்ற பிறகுதான், கட்டுநர் கட்டுமான பணியைத் தொடங்கமுடியும்.
இத்தனைத் துறைகளிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதற்குத் தாமதமாவதால் பெரும்பாலான திட்டங்கள் தாமதமடைவதாக ரியல் எஸ்டேட் துறையினர் கருதுகின்றனர். அதனால், ஒற்றைச் சாளர அனுமதி வழங்க வேண்டுமென்று துறைசார் நிபுணர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
கட்டுநர் தொடக்கச் சான்றிதழை வழங்கிவிட்டால், அனைத்து துறைகளிடமும் அனுமதி பெற்றுவிட்டதாக அர்த்தம். வீட்டுக் கடன் வாங்குவதற்குத் தொடக்க சான்றிதழே போதுமானது என்றாலும் வீட்டை வாங்குபவர்கள் தடையில்லாச் சான்றிதழ் ஆவணங்களின் நகல்களையும் கட்டுநர்களிடம் பெற்றுக்கொள்வது நல்லது.
சொத்து கைமாறும்போதும் வீடு வாங்குபவர் தடையில்லாச் சான்றிதழைக் குடியிருப்புச் சங்கத்திடமிருந்து பெற வேண்டும். விற்பனை செய்பவரின் சொத்தின் பேரில் எந்தக் கடனும் இல்லை என்பதை உறுதிபடுத்திக்கொள்ள இது உதவும். இந்தச் சான்றிதழ் குடியிருப்பு நலச் சங்கத்தில் நீங்கள் உறுப்பினராவதற்கும் உதவும்.
ஒருவேளை, நீங்கள் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், உங்கள் வங்கியிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதற்கான சூழல் ஏற்படலாம்.
வீட்டுக் கடனை அடைத்துவிடும்போதும், வேறொரு வங்கிக்குக் கடனை மாற்றும்போதும், வங்கியிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். நீங்கள் வங்கிக் கடனை அடைத்துவிட்டீர்கள் என்பதற்கு இந்தச் சான்றிதழ்தான் ஆதாரம். இந்தத் தடையில்லாச் சான்றிதழின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்திகொள்வதும் அவசியம்.
கட்டுநரோ விற்பனையாளரோ உங்கள் பெயர், முகவரியுடன் தனிப்பட்டமுறையில் தடையில்லாச் சான்றிதழை வழங்கவேண்டும். தடையில்லாச் சான்றிதழில் விற்பனையாளருக்கு வழங்கவேண்டிய மீதித் தொகையைப் பற்றிய தகவல் இடம்பெற்றிருக்க வேண்டும். இதில் சட்ட ஆலோசனை பெறுவது எப்போதுமே நல்லது.