

ப
த்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் டிவியை மிகப் பெரிய எதிரியாகப் பாவித்த இந்திய-தமிழ் திரைத் துறை, இன்றைக்கு அந்த ஜோதிக்குள் முழுமையாக ஐக்கியமாகிவிட்டது. அதற்கடுத்து வந்த சமூக ஊடக அலையைத் தனக்கு எதிரியாகத் திரைத்துறை பாவிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே ஒரு வணிகப் படத்தை ஓடவைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் சமூக ஊடகங்கள் வழியாகவே திரைத்துறை அரங்கேற்றிவருகிறது.
சமூக ஊடகங்கள் கோலோச்சும் இந்தக் காலத்தில் ஒருவர் நினைத்தால் திட்டமிட்டு ஒரு விஷயத்தை ஹிட் ஆக்கிவிடுவது எளிது. ‘ஒய் திஸ் கொலவெறி’, இதற்குச் சிறந்த உதாரணம். அதேநேரம் ஹிட் ஆகும் எல்லா விஷயங்களும் சரக்கு இல்லாமலும் இருப்பதில்லை.
லாலேட்டன் என்று அறியப்படும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் நடிப்பும் வணிக வீச்சும் இன்னமும் குறையவில்லை. அவர் நடித்த ‘வெளிபாடிண்ட புஸ்தகம்’ படத்தில் இடம்பெற்ற, ‘என்டம்மேட ஜிமிக்கிக் கம்மல்’ பாட்டு யூடியூபைக் கடந்த ஆண்டு ஒரு கலக்கு கலக்கியது.
வெளியாகி ஒரு வாரத்தில் இந்தியாவின் மிகப் பெரிய ஹிட் பாடலாக மாறியது. தற்போதுவரை 7.7 கோடி முறை அப்பாடல் பார்க்கப்பட்டிருக்கிறது. சமூக ஊடகங்களில் வெளியான மலையாளப் பாடல்களில் இதுவே டாப். இந்தச் சாதனையை வேறொரு பாடல் முறியடிக்க ஆண்டுகள் பல ஆகலாம். அந்தப் பாடலில் ஆடிய, ‘அங்கமாலி டைரீஸ்’ மூலம் புகழ்பெற்ற நடிகர் ‘அப்பானி ரவி’ சரத் இதன் மூலம் கூடுதல் பிரபலமடைந்தார்.
படத்தைப் பிரபலப்படுத்த முன்கூட்டி வெளியாகி, ரசிகர்களே ‘ஜிமிக்கி கம்ம’லுக்கு ஆடி யூடியூபில் அப்லோடு செய்யுமாறு படக்குழு கேட்டிருந்தது. அதையொட்டி ஷெரில் - அன்னாவின் நடனம் உலகைக் கவர்ந்தது. அதன் பிறகு படத்தைவிட மிகப் பெரும் பிரபலத்தை ‘ஜிமிக்கிக் கம்மல்’ பெற்றது வரலாறு.
படத்தில் இடம்பெற்ற பாடலில், முடியும் நேரத்தில் மோகன்லால் சைக்கிள் மிதித்துக்கொண்டு கொஞ்ச நேரம் தோன்றுவார். அப்பாடலின் மையமாக அவர் இல்லாத காரணத்தால், படக்குழுவே அவரை வைத்து ஒரு கவர் வெர்ஷன் வெளியிட்டது.
இந்தப் பாட்டு வெளியாகி 10 மாதங்கள் ஆகப் போகின்றன. ஆனால், இன்றைக்கும் மொக்கையாகவும் பெரிய சுவாரசியங்கள் இன்றியும் புதுப்புது வெர்ஷன்கள் தினசரி வந்துகொண்டுள்ளன. ஒரு வகையில் மிக அதிக வெர்ஷன்கள் கொண்ட இந்திய யூடியூப் பாடல் இதுவாகவும் இருக்கலாம்.
வடிவேலு வெர்ஷன் தொடங்கி ஜாக்கி சான் வெர்ஷன் வரை, ஸ்கேட்டிங் செய்யும் அனிமேஷன் குழந்தைகள் முதல் ஒரே நாள் இரவில் மக்கள் பணத்தை செல்லாக் காசாக்கிய மோடியை விமர்சித்து வெளியானதுவரை ஆயிரம் ஆயிரம் வெர்ஷன்கள் ‘ஜிமிக்கி கம்ம’லுக்கு வந்துவிட்டன, வந்துகொண்டிருக்கின்றன.
என்னைக் கேட்டால் மலையாளத்தைச் சற்றும் அறியாத ரஷ்யப் பெண்கள் ஆடிய நடனம், ‘ஜிமிக்கிக் கம்ம’லுக்கான மற்ற வெர்ஷன்களைவிடச் சிறப்பாக இருப்பதைப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம்.
‘ஜிமிக்கி கம்மல்’ புகழ்பெற்றதற்குக் காரணம் பாடல் அல்ல. எளிமையான மெட்டுடன், கேட்பவரை ஆடவைக்கும் தன்மையை அது கொண்டிருப்பதே ஹிட் அடிப்பதற்கும் புதிய புதிய கவர் வெர்ஷன்கள் வருவதற்கும் அடிப்படைக் காரணம். நம்மில் பெரும்பாலோர் மனதை லேசாக்கிக் கொள்ள ‘பாத்ரூம் சிங்கர்’களாகவாவது அவதாரம் எடுத்துவிடுகிறோம்.
ஆனால், மகிழ்ச்சியின் வெளிப்பாடு ஆட்டம் என்பதும், உடல் லேசாவதும் உற்சாகம் பெறுவதும் மகிழ்ச்சியாக மொழிபெயர்க்கப்படும் என்பதையும் நம்மில் பெரும்பாலோர் மறந்துவிட்டோம்.
நம் உடல்கள் அலுவலக இருக்கைகளிலும், வீட்டு டிவிகளின் முன்பாகவும் சிறைபட்டுக் கிடக்கின்றன. அவற்றைத் தளர்த்தி தாளம் போட்டு ஆட வைக்கும் உற்சாகமான பாடல்கள் தேவை. அப்படி ஆட வைக்கும் தாளத்தை ஜிமிக்கி கம்மல் தனக்குள் தேக்கி வைத்திருப்பதே, ஹிட் ஆனதற்கும் ‘பிளாஷ் மாப்’ பாணிகளில் மீண்டும் மீண்டும் கூட்டமாக ஆடப்படுவதற்கும் காரணமாக இருக்கிறது.
இந்தப் பாடலை எழுதியவர் அனில் பனச்சூரன். இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான், பாடியவர் வினீத் ஸ்ரீனிவாசன் (‘அவள் அப்படியொன்றும் அழகில்லை’ பாடலைப் பாடியவர்).
ஷான் - வினீத் ஜோடி பல ஹிட் பாடல்களையும் படங்களையும் தந்துள்ளது. சமீபத்தில் பிரியா பிரகாஷ் வாரியார் கண்ணடித்த ‘மாணிக்ய மலராய பூவி’ பாடல்வரை இந்த ஜோடியின் ஹிட் தொடர்கிறது. சேட்டன்கள் அடுத்து என்ன ஹிட் கொடுக்கப் போகிறார்கள், பொறுத்திருந்து பார்ப்போம்.
ரஷ்ய ‘ஜிமிக்கி கம்மல்’