தெருவாசகம்: பத்து தலைமுறைகளின் பாலம்

தெருவாசகம்: பத்து தலைமுறைகளின் பாலம்
Updated on
3 min read

தி

ருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் தமிழகத்தின் இரட்டை நகரங்கள். வற்றாத ஜீவநதியான தாமிரபரணி இந்த இரட்டை ஊர்களுக்கிடையில் பாய்ந்தோடுகிறது. பாளையங்கோட்டை தாமிரபரணியின் தென் பகுதியில் ஆற்றிலிருந்து 1.5கிமீ தொலைவில் இருந்தது. திருநெல்வேலி ஆற்றின் வட பகுதியில் 3 கி.மி தொலைவில் இருந்தது.

அன்று பிரிந்திருந்த அந்த ஊர்கள் இன்று கிட்டத்தட்ட ஒன்றாகிவிட்டன. நகரம் வளர்ச்சி கண்டுவிட்டதால் இன்று ஆற்றின் கரையிலிருந்தே ஊர் ஆரம்பித்துவிடுகிறது. அந்த ஊர்களை இணைத்தபடி ஆற்றின் மீது கம்பீரமாக வீற்றிருக்கும் பாலத்தில் வாகனங்கள் சீறிக்கொண்டு செல்கின்றன.

அந்தப் பாலத்தை வண்ணாரப்பேட்டை பாலம் என்று உள்ளூர்வாசிகள் அழைக்கிறார்கள். ஆனால், அதன் உண்மையான பெயர், சுலோச்சன முதலியார் பாலம் என்பதே. பாலத்தின் முன்னொட்டாக இருக்கும் அந்த சுலோச்சன முதலியாரின் பூர்வீகம் செங்கல்பட்டு.

திராவிட மொழியியல் அறிஞரான ராபர்ட் கால்டுவெல்டு எழுதிய ‘History of Tinnevelly’ புத்தகத்தின்படி (இது திருநெல்வேலிச் சரித்திரம் என்னும் பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது), 1884-ம் ஆண்டு இந்தப் பாலம் திறக்கப்பட்டு உள்ளது. அதன்படி 174 வயதாகும் இந்தப் பாலம் சுமார் 10 தலைமுறையினரின் வாழ்வுக்குச் சான்று.

1800-களிலும் அந்தப் பகுதியின் வர்த்தக மையமாக நெல்லையே இருந்துள்ளது. பாளையங்கோட்டையிலிருந்து தங்களுக்குத் தேவையானதை அங்கே சென்றுதான் மக்கள் வாங்கி உள்ளனர். ஆனால், 1844-க்கு முன்பு வரை பாலம்தான் இல்லையே. அப்போது வசதியானவர்கள் படகிலும் ஏழ்மையானவர்கள் நீந்தியும் தாமிரபரணியைக் கடந்து நெல்லைக்குச் சென்று உள்ளனர். ஆனால், வெள்ளம் கரை புரண்டோடும் காலத்தில் நீந்திக் கடப்பது மட்டுமல்ல, படகில் கடப்பதும் மிகவும் கடினம். உயிரிழப்புகளும் இதனால் ஏற்பட்டுள்ளன.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காண தாமிரபரணியின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்துக்கு, அன்றைய நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த ஆர். ஈடன் 1836-ம் ஆண்டு கடிதம் எழுதினார். ஆனால், அதைக் கிழக்கிந்திய கம்பெனி அரசு பொருட்படுத்தவில்லை. ஆர். ஈடனுக்குப் பிறகு, 1840 மார்ச் 5 அன்று நெல்லை ஜில்லா கலெக்டராக ஈ.பி.தாம்சன் பொறுப்பேற்றார்.

அவர் பதவியேற்ற சில நாட்களில் அங்குள்ள படகுத் துறையில் பெரிய கலவரம் வெடித்தது. அதில் சிலர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவம் தாம்சனின் நிர்வாகத் திறனைக் கேள்விக்கு உள்ளாக்கியது. போதுமான போக்குவரத்து வசதி இருந்திருந்தால் இந்த உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம் என தாம்சன் நினைத்தார்.

அதிகாரிகளுடன் பாலம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் சுலோச்சன முதலியாரும் கலந்துகொண்டார். சுலோச்சன முதலியார் அப்போது தாம்சனின் கீழ் சிரஸ்தாராகப் பணியாற்றினார். சிரஸ்தார் பதவி இன்றைய தாசில்தார் பதவிக்கு இணையானது. சுலோச்சன முதலியார் பணத்துக்காக அல்லாமல், கவுரவத்துக்காகவே வேலைக்குச் செல்லும் அளவுக்கு அவரது குடும்பம் செல்வச் செழிப்பு மிகுந்திருந்தது.

அவரின் சொந்த ஊர் சென்னை பூந்தமல்லிக்கு அருகில் இருக்கும் திருமணம். ஆங்கிலேயர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களாகத் அவரது குடும்பத்தினர் பணியாற்றி உள்ளனர். அவருடைய தந்தை ராமலிங்க முதலியார், கட்டபொம்மனின் வழக்கை விசாரித்த பானர்மேனுக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவர். தாம்சன் தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில், நெல்லையையும் பாளையங்கோட்டையையும் இணைக்கும் வகையில் தாமிரபரணியின் மேல் பாலம் கட்ட வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது. கேப்டன் ஃபேபரரிடம் அதைக் கட்டும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

லண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தை ஒத்த வடிவமைப்பில் ஃபேபர் பாலத்தின் வரைபடத்தைத் தயாரித்தார். அந்தப் பாலம் அமைப்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று மதிப்பீடு செய்து அரசிடம் தெரிவித்தார். 50 ஆயிரம் ரூபாய் என்பது இன்றைய மதிப்பில் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கானது. பாலத்தின் வடிவமைப்பு பிடித்திருந்தும், அந்தப் பாலத்தால் அரசுக்கு எவ்விதப் பயனும் இல்லை என்பதால் கிழக்கிந்திய கம்பெனி அரசு அவ்வளவு பெரிய தொகையைச் செலவு செய்யத் தயங்கியது. அந்தப் பாலத்தால் மக்களுக்குத்தான் பலன் என்பதால், மக்களிடமே பணம் வசூலித்துக் கட்டலாம் என்று ஆட்சியர் தாம்சன் முடிவுசெய்தார். பணம் வசூலிக்கும் பொறுப்பு சுலோச்சன முதலியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வறுமையில் உழலும் மக்களை மேலும் வறுமையில் தள்ளும் அந்த முடிவுக்கு உடன்படாத சுலோச்சன முதலியார் தானே முழுப் பணத்தையும் செலவு செய்யலாமே என்று யோசித்தார். மனைவி வடிவாம்பாளிடம் கலந்து பேசினார். அவரும் சற்றும் யோசிக்காமல் தன்னிடமிருந்த நகைகளை எல்லாம் கழற்றிக் கொடுத்தார். இதனால் உத்வேகம் அடைந்த முதலியார், தன்னிடமிருந்த சொத்துகளை எல்லாம் விற்று அரசிடம் பாலத்தைக் கட்டும்படி சொன்னார்.

760 அடி நீளம், 21.5 அடி அகலம், 60 அடி விட்டத்தில் 11 ஆர்ச்சுகள், அவற்றைத் தாங்க இரட்டைத் தூண்களுடன் அந்தப் பாலம் நான்கு வருடங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டது. அந்தப் பிரம்மாண்ட தூண்கள் ரோமானிய அரண்மனையை நினைவூட்டும்படி இருந்தன. இன்றும் இருக்கின்றன. அந்தப் பாலத்தின் திறப்பு விழாவில், தனிநபராக அதற்கு உதவிய சுலோச்சன முதலியாரை ஆங்கிலேய அரசு சிறப்பாகக் கவுரவித்தது. அந்தப் பாலத்தின் மீது நடந்த முதல் மனிதர் என்ற பெருமை சுலோச்சன முதலியாருக்கு வழங்கப்பட்டது.

மேலும் அவரைப் பாராட்டும் வகையில் பாலத்தின் முகப்பில் 20 அடி உயரக் கோபுரம் அமைக்கப்பட்டது. சுலோச்சன முதலியாரின் உதவியை விவரித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட ஒரு மீட்டர் அகலம் கொண்ட கல்வெட்டு அதில் பதிக்கப்பட்டது. அந்தக் கல்வெட்டு 1970 வரை இருந்து உள்ளதாகத் தெரிகிறது.

அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலத்தின் மேற்பகுதி மிகுந்த சேதம் அடைந்தது. அதைச் செப்பனிடும்போது போக்குவரத்து நெரிசலைக் கருத்தில்கொண்டு பாலமும் விரிவுபடுத்தப்பட்டது. அந்த விரிவாக்கத்தின்போது பெயர்த்து எறியப்பட்ட அந்தக் கோபுரத்தையும் கல்வெட்டையும் தாமிரபரணி வாங்கிக்கொண்டது. அந்த நினைவுகளின் மேல்தான் தாமிரபரணி ஓடிக்கொண்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in