

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் இந்த ஆண்டு வீடு கட்டும் திட்டத்துடன் இருந்த தனிநபர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மணல் தட்டுப்பட்டால் மணல் விலை இந்த ஆண்டு உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அத்துடன், இரும்புக் கம்பிகள், சிமெண்ட் ஆகியவற்றின் விலையும் இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது. ஒரு மூட்டை போர்ட்லாண்ட் பொஸ்ஸோலோனா (Portland Pozzolana) சிமெண்ட் (50 கிலோ) விலை ரூ.340 முதல் ரூ. 360 வரை விற்பனை செய்யப்படுகிறது. 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ. 300க்கு விற்பனைசெய்யப்பட்டது.
அதே மாதிரி, சென்ற ஆண்டு ரூ. 40,500க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு டன் 8MM இரும்புக் கம்பிகளின் விலை தற்போது ரூ. 49, 500. எம். சாண்ட்டின் விலை சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு இரட்டிப்பாகியிருக்கிறது. இந்திய ரியல் எஸ்டேட் கட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (CREDAI) வெளியிட்டிருக்கும் ஜனவரி 2018 அறிக்கையின்படி கட்டுமானப் பொருட்களின் விலை 30 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த விலை ஏற்றத்தால், ஒரு சதுர அடியின் ஒட்டுமொத்தக் கட்டுமானச் செலவு ரூ. 4,300 ஆக உயர்ந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் மணல் தட்டுப்பாடு பிரச்சினையால் மணல் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் சிமெண்ட், இரும்பு, அலுமினியம் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. போக்குவரத்துச் செலவு, மின்சாரம், தொழிலாளர் கூலி போன்றவை அதிகரித்திருப்பதும் இந்தக் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
நெடுஞ்சாலைகள், உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக அரசு பெரிய கட்டுமான பட்ஜெட்டை ஒதுக்கியிருக்கிறது. அதுவும் சிமெண்ட் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. அத்துடன் சென்னையின் கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாடு உருவாவதற்கும் இதுதான் காரணம் என்று ரியல் எஸ்டேட் துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த விலை உயர்வைச் சமாளிப்பதற்காக மாற்றுக் கட்டுமானப் பொருட்களைக் கட்டுநர்கள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். மணலுக்கு மாற்றாக எம்.சாண்ட் பயன்படுத்திவந்தவர்கள், தற்போது அதன் விலையும் இரண்டு மடங்கு உயர்ந்திருப்பதால் சிக்கலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
சென்ற 2015-ம் ஆண்டு, மாநில அரசு அறிமுகம் செய்த அம்மா சிமெண்ட், சிமெண்ட விலை ஏற்றத்தைச் சமாளிக்க உதவிவருகிறது. இது ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ. 190 (50 கிலோ) -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிமெண்ட் குறைவான, நடுத்தர வருவாய் வீடு கட்டுபவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. அரசின் இந்த சிமெண்ட் தனிநபர்களுக்கு மட்டும்தான் விற்பனைசெய்யப்படுகிறது.
ஆனால், இந்தத் திட்டத்தில் சிமெண்ட் கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லை என்று தெரிவிக்கிறார்கள் வீடு கட்டும் சில தனிநபர்கள். அலுமினியமும் மின் கம்பிகளும் கணிசமான அளவுக்கு விலை உயர்ந்திருக்கின்றன. இந்த விலையேற்றத்தால் ஒரு சதுர அடியின் கட்டுமான செலவு ரூ. 110 உயர்ந்திருக்கிறது.
இந்த விலை ஏற்றத்தால் கட்டுமானப் பொருட்களைக் கட்டுநர்கள் இறக்குமதி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். கண்ணாடித் தடுப்பான்கள், குளியலறையில் பொருத்தும் பொருட்கள், அறைக்கலன்கள் போன்றவற்றை இப்படி இறக்குமதி செய்கிறார்கள். சீனா, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், பெல்ஜியம், இத்தாலி, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இந்த இறக்குமதி நடக்கிறது. ஆனால், கட்டுமானப் பொருட்களின் விலை சில நாடுகளில் குறைவாக இருந்தாலும் இறக்குமதி செய்வதற்கு ஆகும் வரி கூடுதலாக இருப்பதால் இந்த வாய்ப்பை அனைத்துக் கட்டுநர்களும் பயன்படுத்த முடிவதில்லை.
இந்த விலையேற்றத்தைச் சமாளிக்க செங்கற்களுக்குப் பதிலாக ‘ஏஏசி ப்ளாக்ஸ்’ஸைக் கட்டுநர்கள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த ப்ளாக்ஸ், இரும்புக் கம்பிகளின் பயன்பாட்டைக் குறைக்கிறது. அதே மாதிரி, விலை குறைவான - வெப்பத்தை உடனுக்குடன் உமிழ்ந்துவிடும் வெள்ளை நிற டைல்ஸ், ஜிப்ஸம் ப்ளாஸ்டர் போன்ற கட்டுமானப் பொருட்கள் இப்போது கட்டுநர்களால் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் ஃபெர்ரோ சிமெண்ட், டிம்பர்கிரெட், ஃபெர்ரோக் போன்ற மாற்றுக் கட்டுமானப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.