

தி
ருநெல்வேலியில் தாமிரபரணியின் ஆற்றங்கரையில் இருக்கும் வண்ணாரப்பேட்டையில் புதுமைப்பித்தன் வீதி உள்ளது. ஆனால், 2016 வரை அந்த தெரு ‘சாலை தெரு’ என்றுதான் அழைக்கப்பட்டது. ஏன் அந்தத் தெரு புதுமைப்பித்தன் தெரு என்று இன்று அழைக்கப்படுகிறது? அந்தத் தெருவுக்கும் புதுமைப்பித்தனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கும் என்று சற்று ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள் வியப்பையும் மலைப்பையும் ஒருங்கே ஏற்படுத்தின.
தமிழின் முன்னோடி எழுத்தாளரான சொக்கலிங்கம் விருதாச்சலம் என்ற புதுமைப்பித்தன் அந்தத் தெருவில் 13 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். பல ஆண்டுகளாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சாலை தெருவுக்கு, புதுமைப்பித்தன் பெயரைவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துவந்துள்ளனர். அதன் பலனாக 2016 செப்டம்பர் 15-ல் அந்தத் தெருவுக்கு ‘புதுமைப்பித்தன் வீதி’ என்று நெல்லை மாநகராட்சி பெயர்மாற்றம் செய்தது.
1906-ல் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் புதுமைப்பித்தன் பிறந்தார். அவரது அப்பாவின் சொந்த ஊர் திருநெல்வேலி. நெல்லைக்கு புதுமைப்பித்தன் வந்தபோது அவருக்கு வயது 12. வண்ணாரப்பேட்டையில் இருந்த கம்பராமாயணத் தெருவில் அவர் 13 ஆண்டுகள் வாழ்ந்தார். படிப்பில் ஒருபோதும் அவருக்கு நாட்டம் இருந்தது இல்லை. இருப்பினும், பாளையங்கோட்டையில் இருந்த தூய யோவான் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பின், மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் மேற்படிப்பு படித்தார்.
பாடப் புத்தகங்களைப் படிக்கிறாரோ இல்லையோ, கதைப் புத்தகங்களை மாய்ந்து மாய்ந்து படித்தாராம். அதிலும் குறிப்பாக ஆங்கிலத் துப்பறியும் நாவல்களைப் படிப்பதில் அவருக்கு அலாதியான ஆவல். அந்தக் காலக்கட்டத்தில் அவர் எழுதவும் முயற்சி செய்திருக்கிறார். வண்ணாரப்பேட்டை புதுமைப்பித்தனின் பேட்டையாகவே இருந்துள்ளது.
அவரது நண்பர்களான முத்துசிவன், தீத்தாரப்பன், சதானந்தன், குகன்பிள்ளை, மகாராஜன் ஆகியோர் அங்கு ஒரு அறையில் வாடகைக்குத் தங்கியுள்ளனர். அப்போது எல்லாம் புதுமைப்பித்தனின் இருப்பு அங்குதான் என எழுத்தாளர் நாறும்பூநாதன் தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.
தாமிரபரணி ஆற்றங்கரையின் மணல் வெளிகளில் தன் நண்பர்களோடு நீண்ட இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபடுவதும் தனிமையில் லயிப்பதும் அவருடைய அன்றாட வாடிக்கையாக இருந்துள்ளது. இளம் வயதில் அந்த வயதுக்கு உண்டான அத்தனை குறும்புகளையும் புதுமைப்பித்தன் புதுமையாக நிகழ்த்தியுள்ளார்.
தென்னந்தோப்பில் இளநீர்க் குலைகளைத் திருட்டுத்தனமாகக் கயிறு கட்டி இறக்குவது, திருடிய இளநீரை ஆற்றங்கரையில் நண்பர்களோடு பகிர்ந்து பருகுவது, மாந்தோப்புக்கு அருகிலிருக்கும் சுடுகாட்டுக்குள் சென்று அமர்ந்து வேடிக்கை பார்ப்பது, அங்கு நண்பர்களுடன் விளையாடுவது என இளமையை அணுஅணுவாக ரசித்து ருசித்து அனுபவித்துள்ளார்.
25 வயது வரைதான் புதுமைப்பித்தன் நெல்லையில் வசித்துள்ளார். அதன் பிறகு அவர் எஞ்சிய வாழ்நாளை சென்னையில் கழித்தபோதிலும், அவரது ஆழ் மனதில் இலக்கியத்துக்கான விதை திருநெல்வேலியில்தான் விதைக்கப்பட்டது. திருமணத்துக்குப் பிறகு அப்பாவுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அவர் ராஜ்ஜியம் நடத்திய வண்ணாரப்பேட்டை சாலை தெருவை விட்டு வெளியேறி, தன் மனைவியுடன் பாளையங்கோட்டை முருகன்குறிச்சிக்குச் சென்று சித்தப்பா வீட்டில் தங்கியுள்ளார்.
பின்பு அங்கிருந்து சென்னை வந்த புதுமைப்பித்தன் ‘மணிக்கொடி’ இதழில் முதலில் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு ‘ஊழியன்’ இதழில் பணியாற்றிய அவர் அங்கிருந்து விலகி ‘தினமணி’ நாளிதழிலில் உதவி ஆசிரியராகச் சேர்ந்துள்ளார். தினமணியில் அவர் 1936 முதல் 1943 வரை பணியாற்றியுள்ளார்.
‘தினமணி’யில் அவர் வேலையைச் சிரத்தையுடன் பார்த்துள்ளார். புத்தக மதிப்புரை எழுதுவதும் விமர்சனங்கள் எழுதுவதும் அங்கு அவரின் முக்கியப் பணிகள். அவரது விமர்சனங்கள் நேர்மையாகவும் கறாராகவும் இருக்கும். பாரதி மகாகவியா தேசிய கவியா என்ற விவாதம் அப்போது மிகத் தீவிரமாக நடந்துள்ளது. தேசியக்கவி என்பதன் பக்கம் கல்கி நின்றார். மகாகவி என்பதன் பக்கம் புதுமைப்பித்தன் நின்றார். அப்போது ரசமட்டம் என்ற புனைபெயரில் மகாகவிக்கு ஆதரவாக புதுமைப்பித்தன் எழுதியது அக்கால வாசகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றது.
புதுமைப்பித்தன் சினிமாத் துறையிலும் தனது ஆழமான முத்திரையைப் பதித்துள்ளார். ‘அவ்வையார்’ படத்தின் திரைக்கதை, வசனம் புதுமைப்பித்தன்தான் எழுதியுள்ளார். ‘அவ்வையார்’ திரைப்படத்துக்குப் பின் ‘காமவல்லி’, ‘ராஜமுக்தி’ முதலிய திரைப்படங்களிலும் அவர் பணிபுரிந்துள்ளார். ராஜமுக்தி காலத்தில் தான் அவருக்கு காச நோய் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு காசநோய் முற்றியதால், 1948-ல் மனைவியை நாடி திருவனந்தபுரத்துக்குச் சென்றார்.
எப்படி ‘மகாமசானம்’ எனும் சிறுகதையில் ஒரு பிச்சைக்காரன் சாவதை பற்றி எழுதி இருப்பாரோ, அதைபோல புதுமைப்பித்தனும் அங்குக் கொஞ்சம் கொஞ்சமாக வறுமையில் சாகத் தொடங்கினார். நோயின் தீவிரம் குறைந்தபாடில்லை. அது நாளுக்கு நாள் தன் மரணப் பிடியை அவரின் மீது இறுக்கியது. இறுதியாக 1948 ஜூன் 30-ல் அவரது 42-ம் வயதில் புதுமைப்பித்தனை காசநோய் முழுவதுமாக விழுங்கிக்கொண்டது.
ஒளிப்பட உதவி: https://www.facebook.com/ilakkuvanr