

ஓ
சை எழுப்பும் மணிகள் (Wind Chime) 5000 ஆண்டுக்கு முன்பே ரோமானியக் கலாச்சாரத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்தியாவிலும் கி.மு.2-ம் நூற்றாண்டிலிருந்து இது பயன்பாட்டில் இருந்துள்ளது. ஆனால் இந்த மணிகளின் ஓசைகளுக்கு கலாச்சார ரீதியான முக்கியத்துவத்தை சீனர்கள்தான் அளித்தார்கள். இன்றைக்குப் பயன்பாட்டிலுள்ள ஓசை எழுப்பும் மணிகள் வடிவத்துக்கு முன்மாதிரியும் சீன வடிவம்தான்.
உலோகம், மரம், மூங்கில் எனப் பலவிதமான பொருள்கள் இந்த மணிகள் தயாரிப்பில் பயன்படுகின்றன. இந்தப் பொருள்கள் உருளை வடிவில் இருக்கும் அதன் நடுவில் மணி தொடங்கவிடப்பட்டிருக்கும். காற்றின் அசைவில் மணியில் உலோகம் மோதி இனிமையான ஓசை உண்டாகும். வீட்டின் வரவேற்பறையில் அல்லது முகப்பில் இதை மாட்டிவைப்பார்கள்.
இதில் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்களைவைத்துப் பல வகை உள்ளது. விலங்குகளின் எலும்புகள், மரத் துண்டுகள், கற்கள் போன்றவை தொடக்க காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டன. இப்போது மூங்கில் கம்புகள், உலோகம், பீங்கான், கண்ணாடி உள்ளிட்டப் பல பொருள்கள் இந்த வகை மணிகள் தயாரிக்கப்பயன்படுகின்றன. இதன் தொடக்க விலை ரூ.200.