

எந்தவொரு சொத்தாக இருந்தாலும் அதனை வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் வில்லங்கச்சான்றுதான். வில்லங்கச்சான்று என்பது நாம் வாங்க வேண்டிய சொத்தானது பத்திரப்பதிவுத்துறையின் மூலமாக யார் யாரிடமிருந்து வாங்கி பதிவு செய்திருக்கிறார்கள் என்பதற்கான முக்கியமான ஆவணமாகும்.
முன்பெல்லாம் இந்த வில்லங்கச் சான்றினைப் பெற பத்திரப்பதிவு அலுவலகத்தில் மனு செய்து தேடுகூலி என்று வருடவாரியாகக் கணக்கிட்டு உரிய தொகையைச் செலுத்திவிட்டு, குறிப்பிட்ட நாள்கள் கழித்து அந்தச் சான்றிதழை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் தற்போது இணையத்தில் நாம் வாங்கப் போகும் சொத்தாக இருந்தாலும் சரி நாம் தற்போது பயன்படுத்திவரும் நமது பெயரில் உள்ள சொத்தாக இருந்தாலும் சரி சில நிமிடங்களில் இந்த வில்லங்கச் சான்றிதழைப் பார்க்க முடியும்.
இந்த வில்லங்கச் சான்றில் யார் யாரிடமிருந்து வாங்கியிருக்கிறார்கள் என்பதைத்தவிர எந்தத் தேதியில் அந்தப் பத்திரம் பதிவு செய்யப்பட்டது, குறிப்பிட்ட இடத்தின் பரப்பளவு எவ்வளவு ரூபாய்க்கு பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது போன்ற முக்கியமான விவரங்களும் அடங்கியிருக்கும்.
இந்த வில்லங்கச் சான்றினை இணையத்தில் பார்வையிடத் தொகை ஏதும் செலுத்தத் தேவையில்லை. இதனைப் பார்வையிட நமக்குத் தேவையானது எந்த இடத்திற்கு நாம் வில்லங்கச் சான்று பார்க்க வேண்டுமோ அந்தக் குறிப்பிட்ட இடம் அமைந்துள்ள ஊரின் பெயர். ஊரானது மாநகராட்சியாகவோ, நகராட்சியாகவோ அல்லது பேரூராட்சியாகவோ இருந்தால் எந்த வார்டில் நாம் வில்லங்கச் சான்றிதழ் பார்க்க வேண்டும் என்பதோடு அந்த இடத்திற்கான சர்வே எனப்படும் நகரளவு எண் மற்றும் பிரிவு எண் ஆகியவை வேண்டும். ஒரு இடத்தை நீங்கள் வாங்கப்போவதாக இருந்தால் அந்த இடத்திற்குரிய பத்திரத்தில் கடைசி பக்கங்களில் மேற்படி இடத்தைப் பற்றிய விவரம் இருக்கும். அதிலிருந்து மேற்க்கண்ட விவரங்களைத் தாங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இப்போது நாம் அறிந்து கொள்ள வேண்டிய இடத்தின் விவரங்களை வைத்துக் கொண்டு https://tnreginet.gov.in/portal/ என்ற இணைதள முகவரிக்குச் செல்ல வேண்டும். அந்த இணையதள பக்கத்தின் இறுதியில், வில்லங்கச் சான்று என்ற தலைப்பின் கீழ், “இணையவழி விண்ணப்பித்தல் வில்லங்கச் சான்றினை தேடுதல்/ பார்வையிடல்” என்ற வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தால் (க்ளிக் செய்தால்) புதிய ஒரு பக்கம் திறக்கும்.
அந்தப் பக்கத்தில் முதலில் நாம் எந்த இடத்திற்கு வில்லங்கம் பார்க்க வேண்டுமோ அந்த இடத்தின் மண்டலத்தையும் பிறகு மாவட்டத்தையும் அதற்குப் பிறகு சார்பதிவாளர் அலுவலகத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்பு அந்த இடம் அமைந்துள்ள கிராமத்தில் அந்த இடம் எங்கு உள்ளது என்பதை தெரிவுசெய்ய வேண்டும். பிறகு எந்தத் தேதியிலிருந்து நாம் வில்லங்கம் பார்க்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தற்போது தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளின் வில்லங்க சான்றிதழுக்கான தேதி 1975 ஜனவரி 1 முதல் சார்பதிவாளர் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (சில இடங்களில் இந்தத் தேதி மாறுபடும்) உதாரணத்திற்கு நீங்கள் 1975 ஜனவரி 1 முதல் 2018 ஏப்ரல் மாதம் 30 ம் தேதிவரை பார்க்க வேண்டுமானால், ஆரம்ப நாள் என்ற கட்டத்தில் 01-Jan-1975 என்றும் முடிவு நாள் என்ற கட்டத்தில் 30-Apr-2018 என்றும் பதிவு செய்ய வேண்டும். பிறகு அந்த இடத்திற்கான புல எண் (சர்வே எண்) மற்றும் உட்பிரிவு எண்ணையும் அளிக்க வேண்டும்.
பிறகு அருகில் உள்ள சேர்க்க என்பதை சொடுக்கி அதற்குக் கீழே உள்ள குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்து Submit என்ற ஐகானை சொடுக்கினால், சற்று நேரத்தில் ஒரு புதிய திரையில் “ஒப்புகை” என்ற தலைப்பின் கீழ் ”உங்களது திருத்த இயலாநிலை ஆவண வடிவம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது” என்றும் அதற்குக் கீழே சிகப்பு நிறத்தில் ”திருத்த இயலாநிலை ஆவண வடிவத்தைப் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்” என்ற வாசகம் தோன்றும் அந்தச் சிகப்பு நிற வாசகத்தைச் சொடுக்கினால் நாம் கோரிய ஆவணம் பிடிஎப் ஆவணமாக நமது கணினியில் பதிவிறக்கம் ஆகிவிடும்.
நாம் நமக்குத் தேவையான வில்லங்கச் சான்றிதழைப் பெற தேவையான விவரங்களை நாம் கணினியில் கொடுக்கும்பட்சத்தில் நாம் கொடுத்துள்ள ஆரம்ப நாள் என்பதில் ஏதேனும் தவறு இருந்தால் அந்த இணையதளம் இந்தத் தேதியிலிருந்துதான் வில்லங்கச் சான்றுப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறும்போது நாம் மீண்டும் அந்த தேதியைக் கணினி சொல்லும் தேதிக்கு மாற்றிச் சமர்ப்பித்து வில்லங்கச் சான்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.