

தி
ருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் பேர்ட்ஸ் ரோடு (Birds Road) என்ற பெயரில் ஒரு சாலை உள்ளது. பாரதிதாசன் சாலையையும் மதுரை பிரதான சாலையையும் செங்குத்தாக இணைக்கிறது இந்தச் சாலை. இது தமிழில் பறவைகள் சாலை என அழைக்கப்படுகிறது. பறவைகளுக்கும் இந்தச் சாலைக்கும் என்ன சம்பந்தம்? ஒருகாலத்தில் இந்தப் பகுதி பறவைகளின் சரணாலயமாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் உண்டாகும்.
ஆனால், 1800-களிலிருந்தே அந்தப் பகுதி ராணுவ முகாமாக இருந்து உள்ளது. அப்படியானால், இந்தச் சாலைக்கு ஏன் பறவைகள் சாலை என்னும் பெயர் வந்தது? காரணத்தை ஆராய்ந்து அறிந்தபோது விடுகதைக்கு விடை கண்டுபிடித்தது போன்ற ஒரு குதூகலமும் உண்டானது. மொழி வேறுபாட்டால் நேர்ந்த நகைச்சுவை இது.
பெயர்ச் சொற்களை மொழிபெயர்க்கக் கூடாது. உதாரணத்துக்கு ‘கதிரவன்’ எனும் பெயரை ஆங்கிலத்தில் ‘SUN’ என்று மாற்றாமல், கதிரவன் என்றே அழைக்க வேண்டும். ஆனால், இந்தச் சாலை ஜான் பேர்ட் எனும் ஆங்கிலேயரின் நினைவாக பேர்ட்’ஸ் ரோடு என்றுதான் முதலில் பெயரிடப்பட்டிருந்தது. அதுதான் இன்று அப்படியே மொழிமாற்றம் செய்யப்பட்டுத் தமிழில் பறவைகள் சாலை என்று தவறாக அழைக்கப்படுகிறது.
ஜான் பேர்ட் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் உயர் பதவி வகித்த நிர்வாகி. 1801-ல் சேலம் ஆட்சியராகத் தன் பணியைத் தொடங்கினார். அதன் பிறகு 1824-ல் இன்றைய கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி ஆட்சியராகவும் நீதிபதியாகவும் பதவி வகித்து உள்ளார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு பெல்லாரியிலிருந்து திருச்சினோபோலி என்று அன்று அழைக்கப்பட்ட இன்றைய திருச்சிராப்பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். திருச்சியில் அவர் குற்றவியல் நீதிபதியாக 1826-ல் பதவியேற்றார், அப்போது அவரைப் பார்க்க ஒரு விசேஷ விருந்தாளி வந்துள்ளார்.
அந்த விருந்தாளியின் பெயர் ரெஜினால்ட் ஹெபர். அவர் இந்தியாவின் தலைமைப் பாதிரியார் (Lord Bishop). ஒரு நீண்ட சுற்றுப் பயணமாகத் தென் இந்தியாவுக்கு வந்தவர், முதலில் தஞ்சை சென்றுள்ளார். சில நாட்கள் தஞ்சையில் இருந்தவர், ஏப்ரல்-1 அன்று திருச்சிக்கு வந்துள்ளார். ஏப்ரல்-2 அன்று திருச்சியில் இன்றும் இருக்கும் செயின்ட் ஜான் தேவாலயத்தில் புனித உரை நிகழ்த்தியுள்ளார். அப்போது தமிழர்கள் 11பேர், தாங்கள் மதம் மாற விரும்புவதாக அவரிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை மலைக் கோட்டையில் இருக்கும் மிஷன் சர்ச்சில் மறுநாள் செய்வதாக அவர்களிடம் அவர் உறுதி அளித்துள்ளார்.
அவர் உறுதியளித்த படியே மறுநாள் மதமாற்றம் நடந்தேறி உள்ளது. அந்த நிகழ்ச்சிக்குப் பின் பிஷப் ஹெபர், ஜான் பேர்ட்டின் இல்லத்துக்குச் சென்று உள்ளார். அவருடன் நீண்ட நேரம் உரையாடிய பின், அவர் இல்லத்தில் இருந்த நீச்சல் குளத்தில் உல்லாசமாக நீந்த ஹெபர் சென்று உள்ளார். அதன் பிறகு நடந்தது யாரும் எதிர்பாராத ஒன்று. நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீரில் கால் வைத்தவுடன் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
பொதுவாக ஏப்ரல் மாதம் திருச்சியில் வெயில் மிகவும் உக்கிரமாக இருக்கும். அந்தக் கோடைக்கால வெப்பத்திலிருந்து குளிரான தண்ணீரில் இறங்கிய உடன் அவருக்கு அபோபிலெக்டிக் வலிப்பு ஏற்பட்டு இருக்கலாம். அந்த வலிப்பு அவர் உயிரைப் பறித்து இருக்கலாம் என்றும் அப்போது கருதப்பட்டது.
அவரை உயிரை மீட்டெடுக்க தண்ணீரிலிருந்து வெளிக்கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்குப் பலவித சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனால், அந்த முயற்சிகள் எந்தப் பலனும் அளிக்காததால், ஹெபரின் உடல் செயின்ட் ஜான் சர்ச்சில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருடைய நினைவுக் கல் சென்னை கோட்டையில் இருக்கும் செயின்ட் மேரி சர்ச்சிலும் அவருடைய சிலை கொல்கத்தாவில் இருக்கும் செயின்ட் பால் சர்ச்சிலும் அமைக்கப்பட்டன. அவை இன்றும் அழியாமல் நம் பார்வைக்கு உள்ளன.
ஹெபரின் மரணம் ஜான் பேர்ட்டை வெகுவாகப் பாதித்து உள்ளது. நீண்ட நாட்கள் அதிர்ச்சியில் உறைந்து இருந்த அவர், சில வருடங்களுக்குப் பிறகே இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளார். கிட்டத்தட்ட 12 வருடங்கள் திருச்சியில் அவர் நீதிபதியாக இருந்து உள்ளார். இறுதியாகச் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருந்த சத்ர் கார்டனில் இயங்கிய சுதர் ஃபௌஜ்தாரி அதாலத்தின் முதல் பியூஸ்னே நீதிபதியாக 1838-ல் பதவியேற்று உள்ளார்.
அதற்குப் பின்னான அவரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. அவருக்கு மகள்கள் இருவர். அவர்கள் இருவரும் ராணுவ அதிகாரிகளையே மணம் முடித்துள்ளனர். சென்னையில் அவருக்குப் பிறகு மற்றுமொரு ஜான் பேர்ட்டும் ஆட்சியராக இருந்து உள்ளார். அவருக்கும் நமது ஜான் பேர்ட்டுக்கும் ஏதேனும் உறவு உண்டா என்பதைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.