

டை
ப்ரைட்டர் என்பது எழுத்துகளைத் தட்டச்சு செய்யும் இயந்திரம் என்றுதான் நினைப்போம். ஆனால், அதைத் தூரிகையாக மாற்றியுள்ளார் மும்பையைச் சேர்ந்த சந்திரகாந்த் கோவிந்த் பிடே (chandrakant govind bhide). இவர் தட்டச்சு இயந்திரத்தில் புதுமையான உத்தியைப் பயன்படுத்தி எண்ணற்ற ஓவியங்களை வரைந்துவருகிறார்.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இதுபோன்ற ஓவியங்களை வரைந்துவரும் சந்திரகாந்த் யூனியன் வங்கியில் தட்டச்சராகப் பணியாற்றியவர். ஒருமுறை வங்கி மேலாளர், அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரின் தொலைபேசி எண்களையும் டைப் செய்து தருமாறு கேட்டுள்ளார்.
அப்போதுதான் டைப்பிங்கைப் புதுமையான முறையில் செய்து பார்க்கலாம் என்ற எண்ணம் சந்திரகாந்துக்குத் தோன்றியுள்ளது. பின்னர், ஊழியர்களின் தொலைபேசி எண்களையும் பழைய தொலைபேசி (டெலிபோன்) வடிவிலேயே வரைந்துகொடுத்து அலுவலகத்தில் உள்ளவர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
சுருட்டைக்கு ‘@’
அதேபோல் காந்தி, திலகர், அம்பேத்கர், சுபாஷ்சந்திர போஸ் போன்ற தேசத் தலைவர்களின் படங்களையும், அமிதாப்பச்சன், கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், லதா மங்கேஷ்கர் போன்ற பிரபலங்களின் படங்களையும் டைப்ரைட்டர் மூலமாக உருவப்படங்களாக அவர் வரைந்துள்ளார். சச்சின் உருவத்தை வரையும்போது அவருடைய சுருட்டை முடியை வரைவதற்கு ‘@’ என்ற எழுத்தைப் பயன்படுத்தியுள்ளார் சந்திரகாந்த். பின்னாளில் சச்சினை நேரில் சந்திக்கும்போது அந்த ஓவியத்தைக் காண்பித்தது மட்டுமல்லாமல் அதில் அவரின் ஆட்டோகிராப்பையும் பெற்றுள்ளார் சந்திரகாந்த்.
இப்படிப்பட்ட வித்தியாசமான மனிதர் குறித்து முதன்முறையாக மகாராஷ்டிராவின் சிறு பத்திரிகை ஒன்றில்தான் முதன்முதலில் செய்தி வெளியானது. அதில் ‘x’ என்ற ஆங்கில எழுத்தைக் கொண்டு கணபதி உருவத்தை வரைந்திருந்தார் அவர். ஆனால், அந்தச் செய்தி ஓவியர்களிடமும் நுண்கலை சார்ந்து இயங்கும் கலைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதில் முக்கியமாக குறிப்பிடத்தக்கவர் உலக புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் மரியோ மிராண் டோ (mario miranda). சந்திரகாந்தின் டைப்ரைட்டர் ஓவியங்களைப் பார்த்த அவர் இந்தப் புதுமையான ஓவியங்களைக் கொண்டு ஒரு கண்காட்சி நடத்த சந்திரகாந்தை வலியுறுத்தியுள்ளார். அதையடுத்து தன்னுடைய முதல் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தினார் சந்திரகாந்த். அதன் பிறகு எண்ணற்ற டைப்ரைட்டர் ஓவியக் கண்காட்சிகளை அவர் நடத்தியுள்ளார்.
சந்திரகாந்தின் ஓவியத் திறமையைக் கண்டு ஆச்சரியமடைந்த மரியோ தான் வரைந்த ஓவியத்தின் கீழ் அவரின் கையொப்பத்தை இடுமாறு கேட்டுப் பெற்றுள்ளார்.
தான் பணியாற்றி வந்த வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற சந்திரகாந்த் பணி ஓய்வு நாளன்று இத்தனை நாளாக டைப்ரைட்டர் ஓவியங்களை வரைய அவர் பயன்படுத்திய தட்டச்சு இயந்திரத்தைத் தனக்கே விலைக்குத் தர முடியுமா, எனக் கேட்டுள்ளார். அதற்கு மற்ற ஊழியர்கள் அரசாங்க சொத்தை எப்படித் தருவார்கள், எனக் கிண்டலாக பேசியுள்ளனர்.
ஆனால், சந்திரகாந்தின் டைப்ரைட்டர் ஓவிய திறமை மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்த வங்கித் தலைவர் அவர் பயன்படுத்திய டைப்ரைட்டர் இயந்திரத்தை ரூ.1 பெற்றுக்கொண்டு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்தப் பரிசு தன் வாழ்நாளில் கிடைத்த விலைமதிக்க முடியாத பரிசு என நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் அவர்.