

மே
மாதம் சுற்றுலாவுக்கான காலம். வீட்டைவிட்டு சுதந்திரமாகச் சிறகை விரித்துப் பறக்க வேண்டிய விடுமுறை காலம். முன்பெல்லாம் கோயில் குளங்களுக்குச் செல்வது மட்டுமே சுற்றுலாவாக இருந்தது. ஆனால் இன்று புதிய மனிதர்களை, இடங்களை, புதிய பண்பாட்டை அறிந்துகொள்வதற்கான சுற்றுலாவாக மாறி வருகிறது. அவற்றில் ஒன்று கட்டிடச் சுற்றுலா. அதாவது வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களைச் சுற்றிப் பார்ப்பது. அம்மாதிரியான சுற்றுலாவுக்கான பரிந்துரை இது. இந்தப் பரிந்துரைக் கட்டிடங்கள், பழமையான கட்டிடம் என்பது மட்டுமின்றி இப்போது அவை அருங்காட்சியகமாகவும் உள்ளன.
சென்னை அருங்காட்சியகம்
சென்னை அருங்காட்சியகம், 1851-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது அருங்காட்சியகமும் இதுதான். அருங்காட்சியக அரங்கு, தேசிய கலைக் கூடம், சிறுவர் அருங்காட்சியகம் ஆகியவை இதன் அங்கங்களாக உள்ளன. இங்கு உயிரினங்களின் உடல்கள் பாடம் செய்து வைக்கப்பட்டுள்ளன. பழங்கால நாணயங்களும் சிற்பங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ராஜா ரவி வர்மா உள்பட ஓவியர்கள் பலரின் ஓவியங்களும் வைக்கப்பட்டுள்ளன.
காஸ் வன அருங்காட்சியகம், கோயம்புத்தூர்
இது 1902-ம் ஆண்டு எ.ஏ.காஸ் என்ற அமெரிக்க வன அதிகாரியால் உருவாக்கப்பட்டது. அவரது பெயரிலேயே இது இன்றும் அழைக்கப்படுகிறது. இது கோயம்புத்தூரில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தமிழ்நாடு வன அகாடமி வளாகத்தில் உள்ளது. இங்கு உயிரினங்களின் உடல்கள் பாடம்செய்து காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகக் கட்டிடம், ஒரு பாரம்பரியக் கட்டிடம்.
காந்தி அருங்காட்சியகம், மதுரை
இது 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் இந்த அருங்காட்சியகம் இயங்கும் கட்டிடமோ 1670-ம் ஆண்டு கட்டப்பட்டது. நாயக்க மன்னர் ஆட்சிக் காலத்தில் ராணி மங்கம்மாவால் கட்டப்பட்ட இதன் பழைய பெயர் தமுக்கம் அரண்மனை. காந்தி பயன்படுத்திய நூறு பொருள்கள் இங்கே காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
அரசு அருங்காட்சியகம், திருச்சி
இந்த அருங்காட்சியகம் 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் அதன் கட்டிடம் மிகப் பழமையானது. ராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில் 1616-1634 வரை திருச்சி அவர்களின் தலைநகரமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டது. இது மங்கம்மாள் தர்பார் ஹால் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால நாணயங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் உள்பட 2000 அரும் பொருட்கள் காட்சிக்குவைக்கப்பட்டுள்ளன.