Last Updated : 05 May, 2018 10:42 AM

 

Published : 05 May 2018 10:42 AM
Last Updated : 05 May 2018 10:42 AM

பால்கனிகளின் கதை!

ற்போது பால்கனிகளில் மர வேலைப்பாடுகளுடன்கூடிய தடுப்புகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. அனைத்திலும் நவீனமும் நாகரீகமும் புகுந்துவிட்டன. இந்தத் தலைமுறையினர் விரும்பும் வகையில் பால்கனிகள் எல்லாம் கிரில் ரெய்லிங் வகைகளாகவே காட்சியளிக்கின்றன. அழகிய வேலைப்பாடுகள் நிறைந்தும் இவை காணப்படுகின்றன. பால்கனிகளுக்கு அழகு சேர்க்கின்றன.

பொதுவாக பால்கனிகளுக்கான கிரில் ரெய்லிங்குகள் வார்ப்பு இரும்பு, எஃகு, அலுமினியம் அல்லது தாமிரம் போன்ற உலோகங்களால் உருவாக்கப்படுகின்றன. மரத்துக்கு மாற்றாக இரும்பாலான கிரில் ரெய்லிங்குகள் பால்கனிகளை இடம்பிடித்த வேளையில், மரத்தாலான தடுப்புகளுக்கு இணையாகப் பாரம்பரியம் மிக்க கலை அம்சத்தை இரும்பும் தந்தது. ஆனால், தற்போது பயன்பாட்டுக்கு பிற உலோகங்களும் வந்துவிட்டன. அட்டகாசமான பால்கனிகள் அமைக்க அலுமினிய கிரில் ரெய்லிங்குகளும் ஏற்றதாகவே இருக்கின்றன. வசதியைப் பொறுத்து முழுக்க முழுக்க ஸ்டீலாலான ரெய்லிங்குகளும்கூட பால்கனிகளில் பயன்படுத்தப்படுகின்றன. வீட்டின் வெளிப்புறத்தைப் பார்த்து அமைக்கப்படும் பால்கனிகளில் தாமிரம், பித்தளை போன்ற உலோகங்களைத் தவிர்ப்பதும் உட்புறம் அமையும் பால்கனிகளில் இரும்பைத் தவிர்ப்பதும் மிகவும் நல்லதுதான்.

இவற்றில் மாய பால்கனிகள் என்பது பிரபலமாகிவருகின்றன. அதாவது, வீட்டு ஜன்னலுக்கு வெளியே சில ‘இன்ச்’ அளவுக்கு கிரில்களை வைத்து பால்கனி போல் அமைப்பது. இது வீட்டின் அழகை மேம்படுத்துவதற்காக மட்டுமே பயன்படக்கூடியது. இதை அதிகபட்சம் ஒரு சர்வீஸ் பிளாட்பார்ம்போல மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். அடுத்ததாக, பொய்ப் பால்கனிகள். இவை ஜன்னல்களை விட்டு கொஞ்சம் அகலமாகப் பால்கனிகள் போலவே அமைக்கப்படுகின்றன. ஆனால், இவற்றைப் பால்கனிகளைப் போலப் பயன்படுத்த முடியாது. பார்க்க பால்கனிகள் போலவே தோற்றமளிப்பதால் இவற்றை ‘பொய்ப் பால்கனிகள்’, ‘மாய பால்கனிகள்’ என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

உண்மையில் பால்கனிகள் புழங்குவதற்காக, வீட்டுக்கு வெளியே நீட்டிவிடப்பட்டிருக்கும் ஒரு கட்டுமான அமைப்புதான். இதற்குத் தடுப்பு அரணாக மூன்றடி வரை ரெய்லிங்குகள் அமைப்பர்கள். வீட்டின் வடிவமைப்பில் பால்கனிகள் முக்கிய அங்கமாக இருப்பதால், பல விதமாகவும் அழகிய தோற்றத்துடனும் அமைக்கப்படும் பால்கனிகள் வீட்டின் அழகை மேலும் மெருகேற்றிக் காட்டும். வீட்டுக்குள் இருந்தபடியே வெளிப்புறங்களை கண்டுகளிப்பதும், இயற்கையான காற்றை அனுபவிப்பதும் பால்கனிகள் இருந்தால் மட்டுமே சாத்தியம். எனவே வீட்டில் பால்கனியை உருவாக்கும் முன் தீர்மானிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன.

அடுக்குமாடிக் குடியிருப்பில் இருப்போர், பால்கனிகளிலேயே செடிகளை வைத்து பராமரித்து அதை சிறு வீட்டுத் தோட்டமாக மாற்றலாம். அதில் கொடிகளைப் படர விட்டு அழகிய தொங்கும் தோட்டங்களாக்கவும் முடியும். தவிர நல்ல வெளிச்சம், காற்று இரண்டையும் இல்லத்துக்குள் இழுத்துவரும் வாயிலாகவும் பால்கனிகள் இருக்கின்றன. நீளமான விஸ்தாரமான பால்கனிகள் இருந்தால் மட்டுமே இதுமாதிரி செய்வது சாத்தியப்படும். தற்போது நகர்ப்புறங்களில் விற்கும் நில மதிப்பைப் பார்த்தால் அது சாத்தியமா என்கிற சந்தேகம் எழலாம். சிறிய அளவிலான பால்கனிகளை எதிர்பார்ப்பது சிரமமே.

முன்பு குழந்தைகள் ஓடி பிடித்து விளையாடவும், முதியவர்கள் ஒய்வெடுக்கவும், புத்தகங்கள் படிக்கவும், காற்றாட அமர்ந்து குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும் பயன்பட்ட பால்கனிகள், இப்போது சுருங்கி தொட்டிச் செடிக்கான இடமாகவும் மாறிவருகின்றன. இடத்தின் அருமை கருதி, ஒரு சில சதுர அடிக்குள் பால்கனிகளை அமைத்துவிடுகிறார்கள். பால்கனிக்காக ஒதுக்கும் இடத்தை நீடித்து அதை டைனிங் ஹாலாகவோ, ஸ்டடி ரூமாகவோ மாற்றுவதும் நடக்கிறது.

காம்பவுண்ட்டில் தொடங்கி கதவு, ஜன்னலில் மட்டும் வீட்டின் அழகு இருந்துவிடுவதில்லை. விசாலமான பால்கனிகள், அதன் அழகிய ரெயிலிங் வேலைப்பாடுகளிலும்கூட வீட்டின் அழகு அடங்கியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x