

நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருள்களின் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. இந்தக் காட்சியில் கற்றாழை நாரைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட விளக்குக் கூண்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட சுய உதவிக் குழுவின் தயாரிப்பு இது. திருவள்ளுவர் மாவட்ட சுயஉதவிக் குழுவினர் ஓவியங்கள் வரைந்துவைத்திருக்கிறார்கள். அதுபோலக் கடலூர் மாவட்ட சுயஉதவிக் குழுவினர் துணிப் பொம்மைகள் செய்து விற்பனைக்கு வைத்திருந்தனர். இதுபோன்று கண்ணைக் கவர்ந்த பயனுள்ள பொருள்களின் தொகுப்பு இது:
கதகளி கலைஞர், முருகன், வள்ளி, தெய்வானை, மீனாட்சி, கிருஷ்ணர் எனப் பல விதமான பொம்மைகள் இருக்கின்றன. இவை துணியால் செய்யப்பட்ட பொம்மைகள். தொடக்க விலை ரூ.850.
இடியாப்பத் தட்டு, விளக்குக் கூண்டு, பணப் பை எனப் பலவிதமான பொருள்களை இயற்கையான முறையில் தயாரித்துள்ளனர். இடியாப்பத் தட்டைப் பனையோலையைக் கொண்டு தயாரித்துள்ளனர். இதன் விலை ரூ.15. கோரப் புல் கொண்டு பணப் பை தயாரித்துள்ளனர். இதன் தொடக்க விலை ரூ.150. கற்றாழை நாரைக் கொண்டு விளக்குக் கூண்டு செய்திருக்கிறார்கள். இதன் தொடக்க விலை ரூ.400
முழுவதும் காகிதக் கூழைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தலையாட்டி பொம்மை அங்கு விற்பனைக்கு உள்ளது. இதன் விலை ஜோடி ரூ.700.
இயற்கையான முறையில் வரையப்பட்ட ஓவியங்களும் விற்பனைக்கு இருக்கின்றன. தொடக்க விலை ரூ.1,000