

கா
ர்பைன் டை ஆக்ஸைடை வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு நான்காவது இடம். ஏனெனில், இந்தியாவில் நடக்கும் சிமெண்ட் உற்பத்தி அவ்வளவு. சிமெண்ட் உற்பத்திச் செயல்பாட்டில்தான் கார்பன் டைஆக்ஸைடு அதிகமாக வெளிவருகிறது. இது அல்லாது கட்டுமானப் பணிக்காகப் பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பி தயாரிப்பிலும் கார்பன் டை ஆக்ஸைடு உமிழப்படுகிறது. இது எல்லாம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை விளைவிக்கின்றன. இதற்காக மாற்று கண்டுபிடிக்க வேண்டியது இந்தப் பின்னணியில் அவசியமான ஒன்று. அம்மாதிரியான ஒரு மாற்று சிமெண்ட்தான் ஜியோபாலிமர் சிமெண்ட் (Geopolymer cement).
பிரான்ஸ் வேதியியல் துறை விஞ்ஞானியான ஜோசப் டேவிடினோட்ஸால் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் இது. ஜியோபாலிமர் என்ற பெயரையும் அவரே சூட்டினார். அதிகமான வெப்பம் தாங்கக்கூடிய பொருளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் அவர் இந்த ஜியோபாலிமரை 1979-ம் ஆண்டு கண்டுபிடித்தார். சிமெண்டுக்கு மாற்றாக இதைப் பயன்படுத்த முடியும் என்பதைத் தன் ஆய்வுக் கட்டுரைகள் மூலம் நிரூபித்தார். சிமெண்ட் உற்பத்தி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டே இருக்கிறது. அதனால் உமிழப்படும் கார்பன் டைஆக்ஸைடின் விகிதமும் கூடிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஜியோபாலிமர் சிறந்த மாற்று சிமெண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிமெண்ட் தயாரிப்பதற்குத் தேவைப்படும் பிரம்மாண்டமான ஆலைகள் ஜியோபாலிமர் சிமெண்ட் தயாரிக்கத் தேவையில்லை. அனல் மின் நிலையத்தின் கழிவான சாம்பல் (Fly ash) இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த அனல் மின் நிலையக் கழிவை மறு சுழற்சிமுறையில் பயன்படுத்த பல முயற்சிகள் நடந்துவருகின்றன. அவற்றுள் ஒன்றாக இந்தத் தயாரிப்பு முறையைப் பார்க்கலாம்.
அதுபோல இரும்பு ஆலைக் கழிவான கசடும் (Granulated Blast Furnace Slag) இந்தத் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்படும் ஜல்லியும் (Aggregates) இந்தக் கலவையுடன் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இவற்றுடன் இணைப்புக்காக அல்காலைன் (Alkaline) திரவத்தைச் சேர்க்க வேண்டும்.
முதலில் அனல் மின் நிலையக் கழிவான சாம்பலையும் இரும்பு ஆலைக் கழிவான கசடையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு இந்தக் கலவையுடன் ஜல்லியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இத்துடன் அல்கலைன் திரவத்தைச் சேர்த்தால் ஜியோபாலிமர் சிமெண்ட் கலவை கிடைக்கும். இதில் ஜல்லி சேர்க்காமல் வேறு பொருள்களைச் சேர்த்தும் சிமெண்ட் கலவை தயாரிக்க்கலாம்.
அதிக அளவு வெப்பத்தைத் தாங்கக்கூடியது. 2,400 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் தாங்கக்கூடிய ஆற்றல் கொண்டது. அரிப்பு ஏற்படாதது. ஆகவே, உப்புக் காற்று வீசும் பகுதியில்கூட இந்த சிமெண்டாலான கட்டுமானத்தில் அரிப்பு ஏற்படாது.
சிமெண்டுடன் ஒப்பிடும்போது இதன் விலை குறைவு. தயாரிப்புப் பணியின்போது கார்பண் டை ஆக்ஸைடு வெளியிடப்படுவதில்லை. அதனால் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இதன் தாங்குதிறன் அதிகம்.
சிமெண்டுக்கு மாற்றாக இதைப் பயன்படுத்தலாம் எனச் சொல்லப்பட்டாலும் இது பரவலான பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த ஜியோபாலிமர் சிமெண்ட் கலவையைக் கொண்டு கட்டுமானக் கல்லும் தயாரித்துப் பயன்படுத்தப்படுகிறது. வீட்டுக் கட்டுமானத்துக்கு இது இன்னும் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. ரயில் தண்டவாளத்துக்குக் குறுக்கே பயன்படுத்தப்படும் கற்கள் தயாரிக்கவும் மின் கம்பங்கள் செய்யவும் இது பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இப்போது அறிமுகமாகியுள்ள 3டி தொழிநுட்பக் கட்டுமானத்தில் சிமெண்டாக ஜியோபாலிமர்தான் பயன்படுத்தப்படுகிறது.
ஜியோபாலிமர் சிமெண்டால் ஆன முதல் கட்டிடம் ஆஸ்திரேலியாவில் கட்டப்பட்டுள்ளது. குயிஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தின் குளோபல் சேஞ்ச் இன்ஸ்டிடியூட் கட்டிடம் ஜியோபாலிமர் சிமெண்ட்டைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது.