கட்டுமானக் கருவிகள்: மட்டம் பார்க்கும் குண்டு

கட்டுமானக் கருவிகள்: மட்டம் பார்க்கும் குண்டு
Updated on
2 min read

ட்டுமானக் கலை உலகம் முழுக்கப் பரவலாக பல சமூகங்களில் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. தொழிநுட்பத்திலும் பல ஒற்றுமைகள் கட்டிடக் கலையில் இருந்துள்ளன. உதாரணமாக மண்ணால் ஆன கட்டிடம் கட்டும் முறையில் ஒரே விதமான தொழில் நுட்பத்தைத்தான் பரவலாகப் பயன்படுத்திவந்தனர். அதுபோலக் கட்டுமானக் கருவிகளிலும் பல ஒற்றுமைகளைப் பார்க்க முடிகிறது. படுக்கை வசமாக மட்டம் பார்க்கும் கருவியான ரச மட்டம், பூச்சுக்குப் பயன்படுத்தப்படும் கரண்டி, சிமெண்ட் பூச்சைச் சீராக்கும் மட்டக் கட்டை எனப் பல ஒற்றுமைகள். இம்மாதிரியான கருவிகளுள் ஒன்றுதான், தூக்குக் குண்டு.

தூக்குக் குண்டு (Plumb-bob) என்பது நூலின் ஒரு முனையில் கூர்மையான இரும்பு குண்டு இணைக்கப்பட்டிருக்கும். அந்தக் குண்டின் வடிவம் பம்பரத்தின் வடிவத்தைப் போன்று இருக்கும். அந்த நூலின் மறுமுனை ஒரு குச்சி அல்லது மரக் கட்டையில் பிணைக்கப்பட்டிருக்கும். பயன்படுத்தாத வேளையில் நூலைக் குச்சியில் படத்தில் காட்டியுள்ளபடி சுற்றிவைத்துக்கொள்ளலாம்.

தொடக்க காலத்தில் தூக்குக் குண்டு கல்லால் உருவாக்கப்பட்டது. இன்று இரும்பு, பித்தளை எனப் பல விதமான உலோகங்கள் கொண்டு தூக்குக் குண்டுகள் உருவாக்கப்படுகின்றன.

தூக்குக் குண்டு உலகம் முழுவதும் பரவலான பயன்பாட்டில் இருக்கின்றன. என்றாலும் இந்தக் கருவி எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்கான உறுதியான சான்றுகள் இல்லை. ஆனால் கிரேக்கர்கள்தாம் இதை முதன் முதலில் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. அவர்களின் பிரமிடுக் கட்டுமானக் கலையில் தூக்குக் குண்டின் பயன்பாடு தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்தக் கருவி நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனலாம். ஐரோப்பிய நாடுகளில் இந்தக் கருவி பிற்காலத்தில் பயன்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. இங்கிலாந்து நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள ஓவியங்களில் தூக்குக் குண்டு பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

தூக்குக் குண்டு, கட்டுமானத்தின் செங்குத்து மட்டம் காணப் பயன்படுகிறது. உதாரணமாகப் படத்தில் காட்டியுள்ளபடி சுவரின் கட்டுமானம் சரியான மட்டத்திலுள்ளாதா, எனப் பார்க்க மேலே நூலின் முனையைப் பிடித்தபடி தூக்குக் குண்டை விட வேண்டும். குண்டின் நுனி பூமியில் பட்டுவிடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இப்போது மேல் முனையில் நூலுக்கும் சுவருக்குமான இடைவெளியை அளந்துகொள்ள வேண்டும். உதாரணமாக 2 இன்ச் என வைத்துக்கொள்வோம். கீழேயும் அதே அளவு இடைவெளி இருக்க வேண்டும். அப்படியில்லாத அந்தச் சுவரின் செங்குத்து மட்டம் சரியாக இல்லை எனப் புரிந்துகொள்ளலாம். பெரும்பாலும் இதில் யாரும் சுவருக்கும் நூலுக்குமான இடைவெளியை அளந்து பார்ப்பதில்லை. தூக்குக் குண்டின் அசைவிலேயே மட்டக் குறைபாட்டைக் கண்டுபிடித்துவிடுவார்கள்.

தூக்குக் குண்டு மிக எளிய கருவி. அதற்குள் இயந்திரவியல் நுட்பங்கள் எதுவும் இல்லை. அதனால் இதன் செயல்பாட்டை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். நூலின் முனையில் ஒரு குண்டைக் கட்டித் தொங்கவிடுவதால், அந்தக் கல்லின் புவி ஈர்ப்பு ஆற்றலால் அது பூமியை நோக்கி நேர்க்கோட்டில் இருக்கும். அதனால்தான் குண்டு பூமியில் பட்டுவிடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படிப் பட்டுவிட்டால் அதன் நேர்க் கோட்டுத்தன்மை மாறிவிடும். இப்போது புவி ஈர்ப்பு விசையால் நூலும் நேர்க்கோட்டில் செங்குத்தாக இருக்கும். இதைப் பயன்படுத்தி சுவரின் செங்குத்து மட்டத்தைக் கணக்கிட முடியும். நவீன தூக்குக் குண்டு பல வடிவங்களில் சந்தையில் கிடைக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in