காலநிலைக்கு ஏற்ற மாற்றுச் செங்கல்

காலநிலைக்கு ஏற்ற மாற்றுச் செங்கல்
Updated on
2 min read

செ

ங்கற்களுக்கு மாற்றாக இன்றைக்குப் பல விதமான பொருள்கள் சந்தைக்கு வந்துள்ளன. ஆனால் அதிக அளவில் ஹாலோ பிளாக் கற்கள்தாம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. பரவலான பயன்பாட்டுக்கு வராத ஒரு கல்தான் சிஎல்சி கல். அதாவது செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட் ப்ளாக் (Cellular Lightweight Concrete Blocks).

இது செங்கலைவிட எடை குறைவானது. கட்டிடத்தின் தாங்கி நிற்கும் பாரத்தை இந்த வகைக் கற்கள் குறைக்கின்றன. இந்தத் தன்மையால் கட்டிடத்தின் தாங்கு திறன் அதிகரிக்கும். வெப்பத்தைத் தடுக்கும் தன்மையும் கூடுதல் என்பதால் கட்டிடத்தின் வெளிப்புற வெப்பத்தைவிட உட்புறம் குறைவாக இருக்கும். வீடுகளின் உள்ளே குறைவான வெப்பமே இருக்கும். குளிர் காலத்திலும் குளிர் சீரான அளவே இருக்கும். நீர் உறிஞ்சும் தன்மை குறைவு என்பதால் மழைக்காலத்தில் கட்டிடத்தின் உள்ளே நீரால் ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன.

இதன் தயாரிப்பில் பயன்படும் பிரதான இயந்திரங்கள் மிக்ஸர் கிரைண்டரும் ஃபோம் ஜெனரேட்டரும் ப்ளே ஆஷ், சிமெண்ட், ஃபோமிங் ஏஜண்ட் (இது தாவர எண்ணெய்யிலிருந்து தயாரிக்கப்படுகிறது) ஆகியவை இந்தக் கற்கள் தயாரிப்பில் முக்கியமான பகுதிப் பொருள்கள். ஃபோமிங் ஜெனரேட்டரில் உருவாக்கப்பட்ட ஃபோமிங் உடன் ப்ளே ஆஷ், சிமெண்ட் ஆகியவற்றை மிக்ஸர் கிரைண்டரில் நன்றாக அரைக்க வேண்டும். சில மணி நேரங்களுக்குப் பிறகு கடினமான இந்தக் கலவை உருவாகும். இப்படி உருவாகும் இந்தக் கலவையை அச்சுகளில் ஊற்றி உலர்த்தவிட வேண்டும். போதுமான நேரம் உலர்ந்த பிறகு கற்களை அச்சுகளில் இருந்து பிரிக்க வேண்டும்.

பெரிய கட்டிடப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட் ப்ளாக் உற்பத்தி இயந்திரங்களைத் தனியாக வாங்கித் தயாரிக்கும். இவை இல்லாமல் சிறு சிறு கட்டிடப் பணிகளுக்காக இவ்வகைக் கற்கள் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். இவ்வகை கற்கள் 600 x 200/150/100mm அளவுகளில் தயாரிக்கப்படுகிறது.

இந்தக் கற்கள் மற்ற மாற்றுச் செங்கற்களைக் காட்டிலும் மிகுந்த பயன்பாடு கொண்டவை. இது அதிகப் பளு தாங்கும் திறன் கொண்டது. அதுபோல வெப்பத்தைக் கடத்தும் திறனும் மிகக் குறைவு. அதனால் வீட்டுக்குக் கோடைக்காலத்திலும் குளுமையைத் தரும். தீயைக் கடத்தும் பண்பும் மற்ற மாற்றுக் கட்டுமானக் கற்களுடன் ஒப்பிடும்போது குறைவு. இன்னொரு முக்கியமான பயன் இது அளவில் பெரியது. ஆனால் உறுதியானது. எடையும் குறைவு. மேலும், இந்தக் கற்களைக் கட்டுமானப் பணிகளுக்கு உபயோகிக்கும்போது கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க முடியும். கட்டுமானத்தின் மொத்த செலவுகளில் 20 சதவீதம்வரை மிச்சமாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in