

அ
திக தளங்களைக் கொண்ட குடியிருப்புகளில் மின்தூக்கி (Lift) நிறுவ வேண்டியது அவசியம். மூன்று தளங்களுக்கு மேல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பெரும்பாலும் கட்டுமான நிறுவனங்களே நிறுவுகின்றன.
‘ஏதோ ஒரு பெட்டி போன்ற உலோக அமைப்பு. அது நம்மை மேலும், கீழும் கொண்டு சேர்க்கிறது’. இப்படி மின்தூக்கியை எளிமையாக எண்ணிவிட வேண்டாம். நூற்றுக்கணக்கான பாகங்களைக் கொண்ட, சிக்கலான கருவி இது. முறையாகப் பயன்படுத்தவில்லை என்றால் பெரும் செலவில் கொண்டு விடும். எனவே தகுதி கொண்ட, பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களிடம் மின்தூக்கி பராமரிப்பை ஒப்படைப்பதுதான் புத்திசாலித்தனம். என்றாலும், மின்தூக்கி பராமரிப்பு தொடர்பான சில விஷயங்களை அனைவரும் அறிந்துகொள்வது நல்லது.
ஒரு மின்தூக்கியை அதன் கருவிக்கான அறை, அது மேலே சென்று வரும் பாதை மற்றும் நம்மை ஏற்றிச் செல்லும் பெட்டி என்று மூன்றாகப் பிரிக்கலாம்.
மின்தூக்கிக் கருவிக்கான அறை என்பது மிக முக்கியமானது. மின்தூக்கியை இயக்கப் பயன்படுத்தும் மோட்டார் ஜெனரேட்டர்களிலிருந்து மின்தூக்கியைக் கட்டுப்படுத்தும் கருவிவரை அனைத்தும் அங்குதான் இருக்கும். இங்குள்ள மோட்டார்கள், ஜெனரேட்டர்கள், சுவிட்சுகள், பிரேக்குகள் போன்றவற்றைச் சீரான இடைவெளியில் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.
சென்று வரும் பாதையைப் பொறுத்தவரை அந்தந்தத் தளத்திலுள்ள மின்தூக்கிக்கான கதவுகள், கதவின் தானியங்கிப் பூட்டுகள், மின்தூக்கியை வரவழைப்பதற்காக நாம் அழுத்தும் சுவிட்சுகள் மற்றும் மின்தூக்கி கேபிள் மேலும், கீழும் செல்வதற்கான பாதை ஆகியவை அடக்கம். இவற்றையும் பராமரிக்க வேண்டும். தவிர இவையெல்லாம் ஆபத்துகள் நிறைந்த பகுதிகள் என்பதால் நிச்சயம் இதற்கெனவே தகுதி பெற்றவர்களைக் கொண்டுதான் இவற்றைப் பராமரிக்க வேண்டும். இவற்றில் உள்ள பழுதுகளைச் சரி செய்ய வேண்டும்.
பொதுவாக நாம் ஏறிச் செல்லும் மின்தூக்கி எனப்படும் உலோகப் பெட்டி தீ பரவுவதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். மின்தூக்கியின் தரைப் பகுதியும் மிகச் சுத்தமாக இருக்க வேண்டும். அது வழுக்கும் தன்மை இல்லாததாகவும், தீ பரவுவதைத் தடுக்கும் வகையிலும் இருக்க வேண்டும். ஒரு மின்தூக்கி சரியாக இயக்குகிறதா என்பதற்குப் பல அளவீடுகள் உண்டு. அவற்றில் முக்கியமானவை.
சுவிட்சை அழுத்திய எவ்வளவு நொடிகளில் அதைப் பதிவு செய்து கொண்டதற்கான சிக்னல் வந்து சேர்க்கிறது.
மின் தூக்கியின் கதவின் லகுவாகச் செயல்படும் தன்மை.
மிகச் சரியாக அந்தத் தளத்துக்குச் சமமாக மின்தூக்கி நிற்கும் இயல்பு.
ஒரு தளத்துக்கும், இன்னொரு தளத்துக்கும் பயணம் செய்யத் தேவைப்படும் நேரம்.
இயங்குவதும், நிற்பதும் உடனடியாக நடைபெறுகின்றனவா?
மின்தூக்கி ஏதோ காரணத்தால் நின்றுபோனால் அவசர விளக்கு எரிகிறதா? எச்சரிக்கை ஒலி கிளம்புகிறதா?
மின்தூக்கியின் இன்டர்காம், தொலைபேசி போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் சரியாக இயங்குகின்றனவா?
எவ்வளவு எடையை ஒரு நேரத்தில் அதிகப்படியாக ஏற்றலாம் (அதாவது எவ்வளவு நபர்கள் ஏறலாம்) என்று மின்தூக்கியில் அறிவிக்கப்பட்டுள்ள தகவலை மதித்துப் பின்பற்ற வேண்டும்.
பொதுவாக, ஒரு மின்தூக்கியின் சுவிட்சை அழுத்திய 20 நொடிக்குள் வந்து சேர்ந்தால் அது சிறந்த மின்தூக்கி எனவும், 30 நொடிகளைத் தாண்டினால் அதில் ஏதோ சிக்கல் என்றும் பொதுவாகக் கூறலாம். (தளங்களின் எண்ணிக்கைக்குத் தகுந்த மாதிரி இது கொஞ்சம் முன் பின்னாக இருக்கும்). மின்தூக்கிக்கான காப்பீடைச் செய்வது புத்திசாலித்தனம். பழுதுகள் நேரும்போது உடனுக்குடன் கவனிப்பபது நல்ல விஷயம்.
மின்தூக்கி இயங்கும்போது முன்பு இல்லாத அளவுக்கு க்ரீச் என்ற ஒலிகளைக் கேட்டாலோ, அதிர்வு அதிகமாக இருப்பதாகக் கருதினாலோ உடனடியாகப் பராமரிப்பு நபரிடம் கூறுங்கள்.
பொதுவாக மின் தூக்கியில் பழுது உள்ளதா, இல்லையா என்பதற்கான சோதனைகளை நடுத்தளத்தில் செய்தால் மேலும் துல்லியமான விளைவு கிடைக்கும்.
மின்தூக்கியின் கதவு இயல்பாகவும், எளிதாகவும் நகர வேண்டும். உரிய இடங்களில் தீயணைப்புக் கருவிகளும் இருக்க வேண்டும். சிலர் மின்தூக்கிப் பகுதியின் மேல்பகுதியில் தேவையில்லாத பொருட்களைப் போட்டு வைப்பார்கள். அவற்றை நீக்கிவிட வேண்டும். நன்றாக இயங்கும்போது ஒவ்வொரு தளத்தையும் தாண்ட சராசரியாக எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வேறு சிக்கல்கள் தோன்றுவதாகக் கருதினால் அந்த இயங்கும் நேரம் மாறுபடுகிறதா என்பதையும் கவனித்து ஒரு முடிவுக்கு வரலாம்.