

கி
ராமத்து வீடுகள் சில பிரம்மாண்டமான முன் வாயிலுடன் இருக்கும். புகழ்பெற்ற கேரள வீடுகளில் இந்தக் கட்டுமானத்தைப் படிப்புர என அழைப்பார்கள். இது வீட்டின் வெளிப்புறச் சுவரின் நுழைவு வாசலின் இருபக்கமும் உள்ள தூண். இரு தூணும் மேல் பகுதி, கேரளக் கோயிலின் கட்டிடக் கலையைப் போன்று இணைந்திருக்கும். வீட்டுக்குக் கம்பீரமான அழகைத் தரும் இந்த அமைப்பு வீட்டுக்கு வருபவரைக் கைகூப்பி வணக்கம் செலுத்தும் வண்ணம் இருக்கும்.
இன்றைக்கு இதுபோன்ற வெளிப்புற வாயில் அமைக்கும் பழக்கம் அதிகமாகிவருகிறது. சிலர் செட்டிநாடு, கேரள பாணியிலான வாயில்கள் அமைக்கிறார்கள். சிலர் பழைய பாணியிலான வாயில்கள் அமைக்கிறார்கள். கிராமங்களில் கிடைக்கின்ற சிறு சிறு மரத் துண்டுகளைக் கொண்டு வாயில் அமைப்பார்கள். அதே பாணி இப்போது நவீன வடிவாக மாறியிருக்கிறது. அதைப் போல பழைய பாணியில் இரும்புக் கம்பிகள் கொண்டு அமைப்பதும் நடைமுறையில் இருக்கிறது.
இந்த வாயில்கள் அமைப்பதில் உபயோகிக்கும் பொருள்களைக் கொண்டும் அதன் அதன் வடிவமைப்பைக் கொண்டும் பல வகை உள்ளன. மரச் சட்டகம் கொண்டும் அமைக்கிறார்கள். மரம், இரும்பு ஆகிய இரண்டு பொருளையும் கொண்டு இப்போது புதிய பாணியில் வாயில் உருவாக்கப்படுகிறது. அதாவது இரும்புச் சட்டகத்தின் குறுக்கே மரத் துண்டுகளைக் கொண்டு வடிவமைக்கிறார்கள். இரும்பும் கண்ணாடியைப் பயன்படுத்தியும் வடிவமைக்கிறார்கள்.