

அ
லமாரிகளில் இப்போது பல வகை வந்துவிட்டன. முன்பைப் போல அலமாரிகளுக்கெனத் தனியாக மர பீரோ வாங்க வேண்டியதில்லை. சுவரிலேயே சிமெண்ட் தட்டுகளில் அலமாரிகள் அமைக்கும் முறை வந்தது. இப்போது அதிலும் பல புதிய முறைகளில், வடிவங்களில் அமைக்கும் முறை பிரபலமாக இருக்கிறது. அந்த வகைகளில் சில.
வளைவுப் புத்தக அலமாரி உங்கள் வீட்டின் சுவர்களையும் சேர்த்து அழகுபடுத்தி விடும். புத்தகத்தை வித்தியாசமாக அடுக்க நினைப்பவர்களுக்கு இந்த வளைவுப் புத்தக அலமாரிகள் ஏற்றவை.
ஆனால், இந்த அலமாரியில் சாதாரணப் புத்தக அலமாரியில் வைக்கும் அளவுக்குப் புத்தகங்களை வைக்க முடியாது. குறைவான புத்தகங்களை அழகாக அடுக்கிவைக்க நினைப்பவர்களுக்கு இந்த அலமாரி சிறந்த தேர்வாக இருக்கும்.
தேன்கூடு புத்தக அலமாரிகள் புதுமையை விரும்புபவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். புத்தகங்களோடு சேர்த்து இதில் அலங்காரப் பொருட்களையும் அடுக்கிவைக்கலாம். இந்தப் புத்தக அலமாரி வீட்டுக்கு வித்தியாசமான தோற்றத்தைக் கொடுக்கும்.
ஆனால், இதில் புத்தகங்களைச் சீரான விதத்தில் அடுக்க முடியாது. ஒருவிதமான ஒழுங்கற்ற முறையில்தான் அடுக்க முடியும். எனவே, புத்தகங்கள் கச்சிதமாக அடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த அலமாரியைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது.
விதவிதமான கோணங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் புத்தக அலமாரி உடனடியாகப் பார்வையைக் கவரும். இந்த அலமாரியின் வெளிப்புறம்தான் வித்தியாசமான வடிவத்தில் இருக்கும். அதனால், இந்த அலமாரியில் புத்தகங்களை அடுக்கிவைப்பதில் உங்களுக்குச் சவால்கள் எவையும் இருக்காது.
மிதக்கும் புத்தக அலமாரிகளில் முடிவில்லாமல் இணைந்திருக்கும் புத்தக அலமாரிகள் அடுக்குவதற்கு மேலும் வசதியானதாக இருக்கும். வரவேற்பறைச் சுவரில் பொருத்துவதற்கு இந்த மிதக்கும் அலமாரி சிறந்தது. பொதுவாக மிதக்கும் அலமாரிகள் முடிவில்லாமல் இருப்பதால் பிரச்சினை இருக்கும். ஆனால், அந்தப் பிரச்சினை இந்த அலமாரியில் கிடையாது.
புத்தகங்களைப் பெட்டியில் அடுக்கிவைப்பது என்பது பழைய முறைதான். ஆனால், இப்போது அதையும் புதுமையான முறையில் செய்ய முடியும். மரத்தாலான இந்தப் புத்தகப் பெட்டிகளை அப்படியே சுவரில் பொருத்திவிடலாம்.
இந்தப் புத்தகப் பெட்டியின் சிறப்பம்சம் என்னவென்றால் இதன் மேல்புறத்தை அலங்காரப் பொருட்கள் வைக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம். வித்தியாசமான ஜியோமெட்டிரி வடிவங்களில் இந்தப் புத்தகப் பெட்டிகளை வீட்டின் வரவேற்பறையில் பொருத்தலாம்.
தாறுமாறான வடிவமைப்பில் வரும் புத்தக அலமாரிகள் இப்போது பிரபலமாக இருக்கின்றன. ஒவ்வொரு அலமாரியும் ஒவ்வொரு வடிவத்தில், ஒவ்வொரு நிறத்தில் இருப்பதால் இது வீட்டுக்கு ஒரு புதுப்பொலிவைக் கொடுக்கும். நவீனம், வித்தியாசம் என இரண்டையும் விரும்புகிறவர்களுக்கு இந்த அலமாரி பொருத்தமானதாக இருக்கும்.