

வி
ளக்குகள் என்பவை வெளிச்சம் காட்டுவதற்கு மட்டுமல்ல. அவை வீட்டுக்கு அழகைக் கொண்டுவருபவையும்தான். இம்மாதிரி விளக்குகள் பல வகைப்படும்.
தொங்கு விளக்குகள்
இந்த வகை விளக்குகள் கிறிஸ்து பிறப்புக்கு முன்பே பயன்பாட்டில் இருந்துவரும் விளக்குகள். கழுத்தில் மாலைக்கு இடும் பதக்கம்போல் இருப்பதால் இவை தொங்கட்டான் விளக்குகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றில் இன்று பலவிதமான மாதிரிகள் வந்துவிட்டன. மரத்தாலும் காகிதத்தாலும் இந்தத் தொங்கட்டான் விளக்குகள் செய்யப்படுகின்றன. வீட்டின் ஓரத்தில் ஒரு தொங்கட்டம் போல் தொங்கவிடப்படும்.
பந்து விளக்குகள்
சீனப் பண்டிகைகளின் சிறப்பம்சங்களில் ஒன்று வண்ண விளக்குகள். வண்ண வண்ண பந்து வடிவ விளக்குகளைக் கொளுத்தி வைப்பது சீனர்களின் வழக்கம். அதையே மாதிரியாகக் கொண்டு பந்து வடிவ மின் விளக்குகளும் இப்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சீனர்கள் சிவப்பு வண்ணத்தை மட்டுமே இம்மாதிரி விளக்குகள் அமைக்கப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இன்று பலவிதமான வண்ணங்களில் இந்த விளக்குகள் இன்று கிடைக்கின்றன.
தொங்கு சர விளக்குகள்
இந்த விளக்குகளும் பண்டைய காலத்திலிருந்தே பயன்பாட்டில் உள்ள விளக்குகள். பிரதானமான கூடங்களை அலங்கரிக்க இந்த விளக்குகள் பயன்பட்டன. அரசவை, ஆலயங்கள் ஆகியவற்றிலும் இந்த விளக்குகள் பயன்பாட்டு வந்தன. பூக்கொத்து போல இந்த விளக்குகள் அடுக்கடுக்கான பல விளக்குகளைக் கொண்டவை. இந்த விளக்குகள் வீட்டின் வரவேற்பறைக்கு கம்பீரத் தோற்றத்தை அளிப்பவை.
சுவர் விளக்குகள்
இம்மாதிரி விளக்குகள் வீட்டின் பின் வாசல் பகுதிகளில் பயன்படுத்தத் தக்கவை. பண்டைய காலங்களில் மாடப் பகுதிகளில் இம்மாதிரி வடிவ விளக்குகளில் தீபம் ஏற்றி வைக்கும் வழக்கம் இருந்தது. இப்போது இம்மாதிரி விளக்குகளின் பலவிதமான வடிவங்கள் வந்துவிட்டன.